எழுந்திருங்கள், விழித்து கொள்ளுங்கள், குறிக்கோளை அடையும் வரை தொடர்ந்து செயல்படுத்துங்கள் என்ற அவரது வீர முழக்கம் முதலில்  கும்பகோணத்தில் தான் பேசினார். சுவாமி விவேகானந்தர் கும்பகோணத்தில் 125 ஆண்டுகளுக்கு முன்பாக,

  கடந்த 1897ஆம் ஆண்டு வீர உரையாற்றிய அதே இடத்தில் அவரது சிலை நிறுவுவதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் இந்திய பண்பாட்டுப் பெருமையை பேசி நிலைநாட்டிவிட்டு,  கடந்த 1897 ஆம் ஆண்டு தாயகம் திரும்பிய போது ராமேசுவரம், மதுரை வழியாக கும்பகோணத்துக்கு பிப்ரவரி 3 ஆம் தேதி ரயில் மூலம் வந்து, மூன்று நாட்கள் கும்பகோணத்தில் தங்கிய சுவாமி விவேகானந்தர், வேதாந்த பணி எனும் தலைப்பில் வரலாற்று சிறப்புமிக்க சொற்பொழிவு ஆற்றினார்.




அதில் எழுந்திருங்கள், விழித்துக் கொள்ளுங்கள், குறிக்கோளை அடையும் வரை தொடர்ந்து செயல்படுத்துங்கள் என்ற அவரது வீர முழக்கம் முதலில் கும்பகோணத்தில் தான் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பள்ளிகள், கல்லூரிகளுக்கும் சுவாமி விவேகானந்தர்  விஜயம் செய்து உரையாற்றியுள்ளார். இதனை நினைவு கூறும் விதமாக அவரது 125 ஆண்டு கும்பகோணம் வருகை தினத்தை கொண்டாடவும்,   சுவாமி விவேகானந்தர் வீர உரையாற்றிய போர்ட்டர் டவுன்ஹாலில் அவரது திருவுருவ சிலை நிறுவ முடிவு செய்யப்பட்டது. அதற்கான பூமி பூஜை  நடைபெற்றது.


இதில்  போர்ட்டர் டவுன் ஹால் தலைவரும், கும்பகோணம் எம்எல்ஏவுமான சாக்கோட்டை க.அன்பழகன்,  தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடம் தலைவர் ஸ்ரீமத் சுவாமி விமூர்த்தானந்த மகராஜ், கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சம்ஸ்தான் ஸ்தாபகர் பிரம்ம ஸ்ரீ விட்டல்தாஸ் மகராஜ் ஆகியோர் முன்னிலையில் அன்னை சாரதாதேவி, ராமகிருஷ்ணர், சுவாமி விவேகானந்தர் ஆகிய திருமூவர் படத்துக்கு சிறப்பு பூஜை நடத்தினர். தொடர்ந்து  பூஜிக்கப்பட்ட செங்கற்களை வைத்து சிலைக்கான மேடை பணிகளை துவக்கி வைத்தனர். வரும் பிப்ரவரி 3ஆம் தேதி மாலை 5 மணிக்கு கும்பகோணம் போர்டர் டவுன் ஹாலில் முகப்புப் பகுதியில் சுவாமி விவேகானந்தர் சிலை சிறப்பு,  அரசின் வழிகாட்டு நெறி முறைப்படி நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது என எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன் தெரிவித்தார்.




இதில் நகர மேல்நிலைப்பள்ளி செயலாளர் வேலப்பன், சரஸ்வதி பாடசாலை பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயலாளர் ரமேஷ், தொழிலதிபர் ராயா கோவிந்தராஜன், விழா குழுவைச் சேர்ந்த கண்ணன்,  சத்தியநாராயணன், வேதம் முரளி,  பாஸ்கர், முரளி, கிரி, சரவணன், சீனிவாசன், ரொசாரியோ  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியாக டவுன் ஹால் செயலாளர் விஜயகுமார் நன்றி கூறினார்.பின்னர் தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடம் தலைவர் ஸ்ரீமத் சுவாமி விமூர்த்தானந்த மகராஜ் நிருபர்களிடம் கூறுகையில், சுவாமி விவேகானந்தர் சிலை சுமார் 40 கிலோ எடையில், ஆறரை அடி உயரத்தில் பைபரால் உருவாக்கப்பட்டுள்ளது.  


மூன்றரை அடி பீடத்தின்மீது சிலை அமையும் வகையில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அதில்  கும்பகோணத்தில் சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவின் சாராம்சம் கொண்ட  வாசகங்கள் இடம்பெற இருக்கிறது. சிலை அமைப்பு மொத்தம் மதிப்பு 5 லட்சம். இதனை தொடர்ந்து  கும்பகோணம் இப்பகுதியில் பள்ளி கல்லூரிகள் பொது இடங்கள் என மொத்தம் ஏழு  இடங்களில் சுவாமி விவேகானந்தர் சிலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.