ரூ.757 கோடி மதிப்பிலான ஆம்வே இந்தியாவின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆம்வே இந்தியா என்பது மல்டி லெவல் மார்க்கெடிங் செய்த நிறுவனம். இந்நிறுவனம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஆயிரக்கணக்கான புகார்கள் கிளம்பின. இந்நிலையில் இந்நிறுவனத்திற்கு சொந்தமான கட்டிடங்கள், தொழிற்சாலைகள், இயந்திரங்கள், வாகனங்கள், வைப்புத் தொகை என மொத்தம் ரூ.757.77 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. முன்னதாக அமலாக்கத்துறை ஆம்வே மீது எடுத்த நடவடிக்கையில், ரூ.411.83 கோடி மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துக்கள், ரூ.411.83 கோடி மதிப்பிலான வங்கிக் கணக்குகள், 36 வங்கிக் கணக்குகளில் இருந்த ரூ.345.94 கோடி வைப்பு நிதி ஆகியன முடக்கப்பட்டிருந்தன. இதனைத் தொடர்ந்து இப்போது தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்த ஆம்வே இந்தியா நிறுவனத்தின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.
அமலாக்கத் துறை மேற்கொண்ட விசாரணையில் மல்டி லெவல் மார்க்கெடிங் என்ற பெயரில் ஆம்வே இந்தியா நிறுவனம் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. அதுவும் சந்தைகளில் கிடைக்கக் கூடிய சோப்பு, ஷாம்பூ உள்ளிட்ட பல்வேறு பொருட்களைவிட ளுக்கும் மிகவும் அதிகமான விலையில் ஆம்வே பிராண்டிங் கீழ் அதே மாதிரியான பொருட்கள் விற்கப்பட்டதாக அமலாக்கத் துறை கூறியுள்ளது.
ஆனால் இந்த உண்மை எதையுமே அறியாத மக்கள் ஆம்வே இந்தியாவின் வலையில் விழுந்துள்ளனர். அதனால் அவர்களின் பணம் விரயமாகியுள்ளது. பண விரயம் என்பதைத் தாண்டியும் கூட அவர்கள் சுரண்டப்பட்டிருக்கிறார்கள் என்று அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
மேலும் ஆம்வே இந்தியா எப்போதுமே தனது நிறுவனத்தின் பொருட்களை முன்னிறுத்தி வியாபாரத்தை முன்னெடுக்கவில்லை. மாறாக ஆம்வே இந்தியா மூலம் பணம் சம்பாதிக்கலாம் பெரும் பணக்காரராக உருவாகலாம் என்றே மக்களைக் கவர்ந்துள்ளது. உற்று ஆராய்ந்து பார்த்தால் இந்த நிறுவனத்தின் பொருட்களை மீண்டும் மீண்டும் அதன் குழுவில் உள்ளவர்களே தான் வாங்கியுள்ளனர், விற்றுள்ளனர். இது முற்றிலுமாக கறுப்புப் பணத்தை சலவை செய்யும் செயல் என்று அமலாக்கத் துறை தனது விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
2002ஆம் ஆண்டு முதல் 2022 வரை ஆம்வே நிறுவனம் தொழில் மூலம் 27,562 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். அதில் 7,588 கோடி ரூபாய் இந்தியாவிலும், அமெரிக்காவிலும் உள்ள விநியோகஸ்தர்கள், உறுப்பினர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
எம்எல்எம் மார்க்கெட்டிங் என்ற பெயரில் ஆம்வே நிறுவனம் மோசடியில் ஈடுபட்டு வருவது உறுதியானதின் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படியே, ரூ.757 கோடி மதிப்பிலான ஆம்வே இந்தியாவின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.