2009ஆம் ஆண்டு முதன்முதலில் அறிமுகமான க்ரிப்டோகரன்சியாக `பிட்காயின்’ தோன்றியது. அதற்குப் பிறகு, பிட்காயின் கேஷ், ரிப்பிள், லைட்காயின் முதலான பல்வேறு க்ரிப்டோகரன்சிகள் அறிமுகப்படுத்துப்பட்டுள்ளன. தற்போதைய ஜனவரி 2022ஆம் ஆண்டில், சுமார் 8 ஆயிரத்திற்கும் அதிகமான க்ரிப்டோகரன்சிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 


கடந்த சில ஆண்டுகளில், இந்தியாவில் க்ரிப்டோகரன்சிக்கான சந்தை பெருமளவில் வளர்ந்துள்ளது. மேலும் 2030ஆம் ஆண்டுக்குள் க்ரிப்டோகரன்சியில் இந்தியர்களின் முதலீடு சுமார் 241 மில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச அளவில் அதிகளவிலான க்ரிப்டோகரன்சி உரிமையாளர்கள் இந்தியாவில் வாழ்ந்து வருகின்றன. 


தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் க்ரிப்டோகரன்சியை நிர்வகிக்கவோ, கட்டுப்படுத்தவோ, தடைசெய்யவோ எந்தச் சட்டமும் இல்லை. எனவே இந்தியாவில் க்ரிப்டோகரன்சியை வாங்கவோ, வியாபாரம் செய்யவோ, க்ரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் மையம் நடத்தவோ சட்ட விதிமீறல் எதுவும் இல்லை. எனினும், அதன்மீதான முதலீடுகளில் ஏற்படும் சிக்கல்களைச் சமாளிக்க, மத்திய அரசு கடந்த குளிர்காலக் கூட்டத் தொடரில் க்ரிப்டோகரன்சியைத் தடை செய்யவோ, கட்டுப்படுத்தவோ கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சட்ட மசோதா வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 



இந்தியாவின் சந்தை அளவைக் கணக்கில் கொண்டு, க்ரிப்டோகரன்சியின் மீது முதலீடு செய்யப்படும் தொகையின் அளவு, அதனால் விளையும் ஆபத்துகளையும் க்ரிப்டோகரன்சி மீது கீழ்க்கண்ட விதிமுறைகள் விதிக்கப்பட வேண்டும் எனப் பொருளாதார நிபுணர்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். 


1. முதலீட்டுக்கான சொத்தாகக் கருதுவது


முதலீடுகளுக்கான சொத்துகளாக க்ரிப்டோகரன்சி கருதப்பட வேண்டும். எனவே க்ரிப்டோகரன்சியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பணப் பரிமாற்றங்கள் அனைத்தும் முதலீட்டால் பெறப்படும் நன்மைகளாகவே கருதப்பட வேண்டும். இதன்மூலம் க்ரிப்டோகரன்சியை விற்பது வருவாய் தரும் செயலாகப் பார்க்கப்பட்டு, வரி விதிக்கப்படும். பெரும்பாலான நாடுகளில் க்ரிப்டோகரன்சி என்பது சொத்துபோல கருதப்படுகிறது. 


2. வரி விதிக்கப்படும் பொருளாகக் கருதப்படுவது


அரசுக்கு வருவாய் வரவழைப்பதற்காக TDS, TCS ஆகிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வருவாய் தோன்றும் இடத்திலேயே வரி வருவாய் பெறுவதற்காக இந்தத் திட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன. க்ரிப்டோகரன்சியைப் பயன்படுத்துபவர்களின் பொருளாதார நகர்வுகளைக் கண்காணிக்க, க்ரிப்டோகரன்சியை வாங்குவதற்கும், விற்பதற்கும் வரி விதிக்கும் முறையை அறிமுகப்படுத்துவதோடு, சிறிய முதலீட்டாளர்களுக்கு வரி விதிப்பதற்கும், பெறுவதற்கும் ஒரு எல்லைக்கான தொகையையும் நிர்ணயிக்க வேண்டும். 



3. நிதிப் பரிவர்த்தனை அறிக்கையில் குறிப்பு


நிதிப் பரிவர்த்தனை அறிக்கையில் குறிப்பிடப்படும் சொத்து குறித்த பரிவர்த்தனைகள் அனைத்தும் வருமான வரித்துறையிடம் காட்டப்பட வேண்டும். எனவே இதில் க்ரிப்டோகரன்சி மீதான பணப் பரிவர்த்தனைகளைக் கண்காணிக்க  நிதிப் பரிவர்த்தனை அறிக்கையில் அதுகுறித்து குறிப்பிட வேண்டும். 


4. அதிக வரிவிதிப்பு


க்ரிப்டோகரன்சி மூலமாகப் பெறப்படும் லாபத்தின் மீது அரசு அதிகளவிலான வரியை விதிக்க வேண்டும். லாட்டரி, கேம் ஷோ முதலானவற்றில் வெற்றி பெறுபவை மீது விதிக்கப்படுவது போல 30 சதவிகித வரியை க்ரிப்டோகரன்சி மீதும் விதிக்கலாம். 


5. வெவ்வேறு வருவாய்களுக்கு எதிராக க்ரிப்டோகரன்சியின் இழப்பைச் சரிகட்ட கூடாது


க்ரிப்டோகரன்சி மீதான சந்தை ஏற்றம், இறக்கங்கள் நிரம்பியிருப்பதோடு, அதிக சிக்கல்கள் நிரம்பியது. எனவே இதில் ஏற்படும் நிதி இழப்புகளை சரிசெய்ய பிற வருவாய் வாய்ப்புகளை வைத்து சரிகட்டுவதை அரசு அனுமதிக்காமல், இழப்புகளை இழப்புகளாகவே விட்டுவிடுவதை ஊக்குவிக்க வேண்டும் எனப் பொருளாதார நிபுணர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.