`தமிழ்நாட்டில் டெஸ்லா!’- எலான் மஸ்கிற்கு அழைப்பு விடும் தமிழக அமைச்சர்!
தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது ட்விட்டர் பக்கத்தில் அமெரிக்காவின் பிரபல தொழிலதிபர் எலான் மஸ்கைக் குறிப்பிட்டு, தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள வரவேற்பு விடுத்துள்ளார்.

தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது ட்விட்டர் பக்கத்தில் அமெரிக்காவின் பிரபல தொழிலதிபர் எலான் மஸ்கைக் குறிப்பிட்டு, தமிழ்நாட்டில் அவருடைய டெஸ்லா நிறுவனம் முதலீடுகளை மேற்கொண்டு எலக்ட்ரிக் வாகனத் தயாரிப்பில் ஈடுபட வேண்டும் என வரவேற்பு விடுத்துள்ளார். இந்த ட்வீட் தற்போது வைரலாகி வரும் நிலையில், இதுகுறித்து எலான் மஸ்க் தரப்பிடம் இருந்து எந்த பதிலும் இன்னும் அளிக்கப்படாமல் உள்ளது.
தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஏற்கனவே கடந்த 2021ஆம் ஆண்டு பொருளாதாரம் குறித்த ஆங்கில இதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், `இ-வாகனங்கள் தயாரிப்புத் துறைக்காக நீண்ட கால செயல்திட்டம் ஒன்றை வகுத்துள்ளோம். இது நாட்டின் எதிர்காலமாக மாறவிருக்கிறது. எனினும், நாம் சார்ஜிங் நிலையங்கள் முதலான கட்டமைப்புப் பணிகளையும் இதற்காக உருவாக்க வேண்டும். டெஸ்லா முதலான நிறுவனங்களுக்குத் தமிழ்நாட்டில் முதலீடு செய்யும் சூழலை உருவாக்கியுள்ளோம். இரு சக்கர எலக்ட்ரிக் வாகனங்களைப் பொருத்தவரையில், ஓலா எலக்ட்ரிக், டிவிஎஸ் எலக்ட்ரிக், ஏதர் எனர்ஜி, ஸ்ரீவாரு மோட்டார்ஸ், ஆம்பியர் வெஹிக்ல்ஸ், சிம்பிள் எனர்ஜி முதலான நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்துள்ளன’ எனக் கூறியிருந்தார். இந்நிலையில் அவர் அமெரிக்கத் தொழிலதிபரும், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா முதலான நிறுவனங்களின் தலைவருமான எலான் மஸ்கை இந்த விவகாரம் குறித்து தொடர்புகொண்டுள்ளார்.

அதில் அமைச்சர் தங்கம் தென்னரசு, `எலக்ட்ரிக் வாகனங்கள் மீதான மொத்த முதலீட்டில் தமிழ்நாட்டில் 34 சதவிகிதம் மேற்கொள்ளப்படுகிறது. உலகிலேயே அதிகளவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்தும் சந்தைகளுள் தமிழ்நாடு 9வது இடத்தைப் பெற்றுள்ளது. இந்தியாவின் எலக்ட்ரிக் வாகனங்களின் தலைநகராக இருக்கும் தமிழ்நாட்டிற்கு உங்களை வரவேற்கிறேன்’ எனத் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே தெலங்கானா மாநிலத்தின் அமைச்சர் கே.டி.ராமாராவ் டெஸ்லா நிறுவனத்தைத் தங்கள் மாநிலத்தில் முதலீடு செய்ய அழைத்திருந்தார். மகாராஷ்ட்ரா, மேற்கு வங்கம், பஞ்சாப், தெலங்கானா ஆகிய மாநிலங்கள் டெஸ்லா நிறுவனத்தை முதலீடு செய்ய அழைத்துள்ளன. டெஸ்லா நிறுவனம் தரப்பில், மத்திய அரசு இறக்குமதி வரியைக் குறைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.