நாட்டின் மிகப்பெரிய ட்ரோன் திருவிழாவை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்த நிலையில், பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ட்ரோன் ஸ்டார்ட் அப் நிறுவனமான ஜென்ரல் ஏரோனாட்டிகல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் 50% பங்குகளை அதானி குழுமம் வாங்கி உள்ளது.
‘பாரத் ட்ரோன் மஹோத்சவ் 2022’ என்ற பெயரில் நாட்டின் மிகப்பெரிய ட்ரோன் திருவிழாவை பிரதமர் நேற்று தொடங்கி வைத்தார். விவசாயிகளுக்கு உதவும் ட்ரோன் பைலட்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி. ட்ரோன்கள் பற்றிய செயல் விளக்கங்களையும் கேட்டு அறிந்ததுடன் இத்துறை சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவன அதிகாரிகளுடனும் கலந்துரையாடினார்.
இந்த நிலையில், அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான அதானி டிஃபென்ஸ் சிஸ்டம்ஸ் அண்ட் டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனம் பெங்களூருவை தளமாகக் கொண்ட ஜெனரல் ஏரோநாட்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் 50% பங்குகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் நேற்று கையெழுத்திட்டுள்ளது. "அதானி டிஃபென்ஸ் சிஸ்டம்ஸ் அண்ட் டெக்னாலஜிஸ் நிறுவனம், ராணுவ ட்ரோன்கள் தயாரிப்பில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மற்றும் இயந்திர கற்றல் (Machine learning) திறன்களை பயன்படுத்தி வருகிறது. இந்த நிலையில், உள்நாட்டு விவசாய துறைக்கான தீர்வுகளை வழங்குவதற்காக ஜெனரல் ஏரோநாட்டிக்ஸ் உடன் இணைந்து செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கையகப்படுத்தல் வரும் ஜூலை 31ஆம் தேதிக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு மற்றும் பகுப்பாய்வு முறைகளை பயன்படுத்தி, பயிர் பாதுகாப்பு, பயிர் ஆரோக்கியம், துல்லியமான விவசாயம் மற்றும் மகசூல் கண்காணிப்பு ஆகியவற்றிற்கான ரோபோடிக் ட்ரோன்கள் மற்றும் ட்ரோன் அடிப்படையிலான தீர்வுகளை ஜெனரல் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் வழங்கி வருகிறது. பில்லியனர் கவுதம் அதானியின் துறைமுகம் முதல் மின்னாற்றால் வரையிலான கூட்டுநிறுவனங்களின் பங்கு மதிப்பு கணிசமாக உயர்ந்ததால், அவர் உலக பணக்காரர்கள் வரிசையில் முதல் பத்து இடங்களுக்குள் இடம் பிடித்தார். இந்த நிலையில், பல்வேறு நிறுவனங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைகளில் அதானி ஈடுபட்டுள்ளார்.
சுகாதாரம் முதல் ஊடகம் வரை கால் பதிக்கும் அதானி
கடந்த வாரம் அதானி ஹெல்த் வென்ச்சர்ஸ் (AHVL) நிறுவனம் மூலம் சுகாதாரத்துறையில் கால் பதித்தது. இந்த புதிய நிறுவனம் மருத்துவ மற்றும் நோயறிதல் வசதிகள் மற்றும் ஆராய்ச்சி மையங்களை அமைப்பது போன்ற சுகாதாரம் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த 4 நாட்களுக்கு முன்னர் இந்தியாவின் முக்கிய சிமெண்ட் நிறுவனங்களான அம்புஜா சிமெண்ட் லிமிடெட் மற்றும் ஏசிசி சிமெண்ட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களில் சுவிட்சர்லாந்தை தளமாகக் கொண்ட ஹோல்சிம் லிமிடெட் கொண்டிருந்த 10.5 பில்லியன் பங்குகளையும் அதானி குழுமம் வாங்கி இருந்தது. இந்திய சிமெண்ட் துறையில் மிகப்பெரிய பங்கு கையகப்படுத்தாக இது பார்க்கப்படுகிறது.
மேலும் செய்தி ஊடக வணிகத்துறையில் காலூன்றும் வகையில், குயின்டிலியன் பிசினஸ் மீடியாவில் 49% பங்குகளை வாங்க திட்டமிட்டுள்ளதாக இம்மாத தொடக்கத்தில் அதானி குழுமம் தெரிவித்திருந்தது. மேலும் அபுதாபியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனமான போருஜின் நிறுவனத்தில் 2 மில்லியன் ஐபிஓ பங்குகளில் 75 மில்லியன் டாலரை முதலீடு செய்ய உள்ளதாகவும் அதானி குழுமம் உறுதி அளித்திருந்தது. கடந்த மாதம், அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்களை (APSEZ) நிர்வகிக்கும் துணை நிறுவனமான அதானி ஹார்பர் சர்வீசஸ், ஓஷன் ஸ்பார்க்கிள் லிமிடெட் நிறுவனத்தின் 100% பங்குகளை ரூபாய் 1,700 கோடியில் வாங்க உள்ளதாகவும் தெரிவித்து இருந்தது.
2035ஆம் ஆண்டுக்குள் 45 ஜிகாவாட் மின்சாரம் தயாரிக்க திட்டம்
கடந்த ஏப்ரல் மாதத்தில் உலகப்பணக்காரர் வரிசையில் 4ஆவது இடத்தை பிடித்த கவுதம் அதானி, பின்னர் அந்த வரிசையில் சற்று சரிவை சந்தித்தார். குஜராத்தை தலைமை இடமாக கொண்டு இயங்கும் கவுதம் அதானியின் சொத்து மதிப்பு இந்தாண்டு சுமார் 24 பில்லியன் டாலர் வரை உயர்ந்துள்ளதாக ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இண்டெக்ஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. அதானி குழுமம் FMCG துறையில் கால் பதிக்கும் வகையில் சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்ட வில்மர் இண்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து அதானி வில்மர் என்ற பெயரில், அதானி குழுமம் கடந்த பிப்ரவரியில் பங்குகளை வெளியிட்ட நிலையில் அப்பங்குகளின் மதிப்பு 165% வரை உயர்ந்துள்ளது.
தொடக்கத்தில் நிலக்கரி தொழிலின் மூலம் தனது செல்வத்தை ஈட்டிய அதான், புதைபடிவ எரிபொருட்கள் பயன்பாட்டில் இருந்து வெளியேற்ற அரசாங்கம் முடிவு செய்தவுடன், பசுமை ஆற்றல் தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டார். தற்போது அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம், உலகின் மிகப்பெரிய சூர்ய சக்தி மின்சார உற்பத்தியாளராக மாற உள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் தனது 75% மூலதன செலவுகளை, பசுமை ஆற்றல் தயாரிப்பில் செலவு செய்யவே அதானி குழுமம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் 2035ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் 45 ஜிகாவாட் மின் உற்பத்தியை மேற்கொள்ள அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.