Diwali 2023 Business: தீபாவளி பண்டிகையையொட்டி சில்லரை விற்பனை புதிய உச்சத்தை எட்டியதை அடுத்து,  வியாபாரிகள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர். 


ரூ.3.75 லட்சம் கோடிக்கு சில்லறை விற்பனை:


நடப்பாண்டு தீபாவளி சீசனில் நேரடி சில்லறை விற்பனை மற்றும் ஆன்லைன் தளங்களில் நடைபெற்ற விற்பனையானது இதுவரை இல்லாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது.  இதுதொடர்பாக அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தீபாவளி பண்டிகையின் காரணமாக இந்தியாவின் சில்லறை சந்தைகளில் ரூ.3.75 லட்சம் கோடி வர்த்தகம் நடைபெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. அடுத்த சில வாரங்களில் கோவர்தன் பூஜை, பயா தூஜ், சத் பூஜை, மற்றும் துளசி விழா போன்ற பண்டிகைகள் இருப்பதால்,  மேலும் 50 ஆயிரம் கோடிக்கு விற்பனை நடைபெற வாய்ப்புள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.


ஒரு லட்சம் கோடி அதிகரிப்பு:


கடந்த ஆண்டு தீபாவளியின் போது இந்தியாவின் சில்லரை சந்தையில் ரூ.2.75 லட்சம் கோடிக்கு விற்பனை நடைபெற்றது. இந்நிலைய்ல்,  "உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுக்க வேண்டும்" என்ற பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோள், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு முன்னுரிமை அதிகரித்துள்ளது. 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சீனப் பொருட்களின் விற்பனை குறைந்துள்ளது” என வர்த்தகர் அமைப்பு தெரிவித்துள்ளது.


எந்த துறையில் அதிக விற்பனை?


தீபாவளி சீசனில் நடைபெற்ற 3.75 லட்சம் கோடி மதிப்பிலான மொத்த விற்பனையில், அதிகபட்சமாக  உணவு பொருட்கள் ரூ.48 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனையாகி முதலிடம் பிடித்துள்ளது. இதேபோன்று,  நகைகள் ரூ.33 ஆயிரம் கோடி,  ஜவுளி மற்றும் ஆடைகள் ரூ.45 ஆயிரம் கோடி, இனிப்பு வகைகள் மற்றும் உலர் பழங்கள் ரூ.15,000 கோடி, அழகு சாதன பொருட்கள் ரூ.22,500 கோடி, மொபைல் போன் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் ரூ.30,000 கோடி, பூஜை பொருட்கள் ரூ.11,250 கோடி, சமையலறை பொருட்கள், பாத்திரபண்டங்கள் ரூ.11,250 கோடி, பேக்கரி மற்றும் இனிப்பு பொருட்கள் ரூ.7,500 கோடி, பரிசு பொருட்கள் ரூ.30,000 கோடி அளவிலும், மற்ற பொருட்கள் மற்றும் சேவைகள் மூலம் 75 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் வியாபாரம், நடைபெற்றுள்ளது. குறிப்பாக தீபாவளி தினத்தன்று இந்தியா முழுவதும் ரூ. 5,000 கோடி மதிப்பிலான பூக்கள் மற்றும் ரூ.2,000 கோடி மதிப்பிலான பழங்கள் விற்பனையாகியுள்ளன.


அமேசானில் அசத்தல் விற்பனை:


நேரடி சந்தைகளில் மட்டுமின்றி ஆன்லைன் விற்பனை தளங்களிலும் விற்பனை களைகட்டியுள்ளது. குறிப்பாக அமேசான் நிறுவனத்தின் கிரேட் இந்தியன் ஃபெஷ்டிவல் மூலம் வியாபாரத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்களது தளத்தில் ஆன்லைன் மூலம் பொருள் வாங்கியவர்களில் 80 சதவிகிதம் பேர் இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களை சேர்ந்தவர்கள் என அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் முன்னெப்போதும் இல்லாத வகையில் 110 கோடி பயனாளர்கள் அமேசான் தளத்தை அணுகியுள்ளனர். இதனால் அமேசான் தளத்தில் 750க்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் கோடிக்கணக்கிலும், 31,000க்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் பல லட்சங்களிலும் வியாபாரம் செய்துள்ளனர். இது முன்னெப்போதும் இல்லாத புதிய உச்சமாகும். 15 லட்சத்திற்கும் அதிகமான புதிய வாடிக்கையாளர்கள் அமேசானில் உள்ள பிரிவுகளில் தங்களுக்குப் பிடித்த பிராண்டுகளுக்காக முதல் முறையாக ஷாப்பிங் செய்துள்ளனர்.