போடா போடி
கடந்த 2012 ஆம் ஆண்டு போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். சிலம்பரசன் வரலட்சுமி சரத்குமார், வி.டி.வி கனேஷ் இந்தப் படத்தில் நடித்த இந்தப் படம் பெரிதளவில் வரவேற்பைப் பெறவில்லை. கூடுதலாக ஆண்மைய பார்வை இந்தப் படத்தில் ஓங்கியிருந்ததாகவும் விமர்சிக்கப்பட்டது.
பாடலாசிரியர் விக்கி
இதனைத் தொடர்ந்து தனது அடுத்தப் படத்தை இயக்குவதற்கான இடைவெளியில் திரைப்படங்களில் தொடர்ந்து பாடல்கள் எழுதி வந்தார் விக்னேஷ். அனிருத் இசையமைத்த சான்ஸே இல்ல, அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் வரும் அதாரு அதாரு பாடல், மாரி படத்தில் தப்பாதான் தெரியும் முதலிய இவர் எழுதிய பாடல்கள் தனி ரூட்டில் சென்றன.
நானும் ரவுடிதான்
பின் 2015-ஆம் வருடம் நானும் ரெளடிதான் படத்தை இயக்கினார். விஜய் சேதுபதி நயன்தாரா நடித்து வெளியான இந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதே நேரத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போதுதான் விக்கி மற்றும் நயன்தாரா இடையில் காதலும் மலர்ந்தது. நானும் ரெளடிதான் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக சூர்யா கீர்த்தி சுரேஷ் நடித்த தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கினார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்தப் படமும் ரசிகர்களின் எதிபார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
தொடர்ச்சியாக சினிமாவில் ஏதோ ஒரு வகையில் இயக்கிக் கொண்டிருக்கும் விக்னேஷ் சிவன் தமிழ் சினிமாவில் இளைஞர்களை அதிகம் கவரக்கூடிய இயக்குநராக இருந்து வருகிறார். அதே நேரத்தில் இவரது படங்களின் மீதான எதிர்விமர்சனங்களும் தொடர்ந்து வருகின்றன. விஜய் சேதுபதி நயன்தாரா சமந்தா ஆகியவர்களை வைத்து இவர் இயக்கிய காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் நெட்ஃப்ளிக்ஸின் வெளியான பாவக் கதைகளில் இவர் இயக்கிய பகுதி உட்பட படங்கள் பேச எடுத்துக் கொண்ட கதைக்களத்தில் போதுமான புரிதல் இல்லாததாக குறிப்பிடப்பட்டன. காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் ஒரே ஹீரோ இரண்டு பெண்களை காதலிப்பதாக காட்சிப்படுத்தி இருப்பதும் ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடுகள் என்று விமர்சிக்கப்பட்டது.
விமர்சனம் ஒரு பக்கம் இருந்தாலும் இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியும் பெற்றது, தன்னுடைய ஓவ்வொரு படத்திலும் புதுமையாகவும் தன்னுடைய ஸ்டைல் என்று ஒன்றை உருவாக்க தொடர் முயற்சிகளில் ஈடுபட்டு வரும் விக்னேஷ் சிவன், தான் தேர்வு செய்யும் கதைகளைப் பற்றிய தெளிவான ஒரு புரிதலை ஏற்படுத்திக் கொண்டார் என்றால் நிச்சயம் தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் செட்டர்களில் ஒருவராக வருவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ரவுடி பிக்சர்ஸ்
2021-ஆம் வருடம் நடிகை நயன்தாராவுடன் இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கடந்த ஜூன் 2022-ஆம் வருடம் இருவருக்கும் திருமணமும் செய்துகொண்டனர். இயக்குநர், பாடலாசிரியராக மட்டுமில்லாமல் தனது மனைவியுடன் இணைந்து ரெளடி பிக்சர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கினார். தங்களது முதல் தயாரிப்பாக கூழாங்கல் என்கிற சுயாதீனப் படத்தைத் தயாரித்தது. இந்தப் படம் சர்வதேச மேடைகளில் அங்கீகாரம் பெற்றது. தொடர்ந்து நெற்றிக்கண், காத்துவாக்குல ரெண்டு காதல், ராக்கி உள்ளிட்ட படங்களைத் தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.