6,650 பேரை பணிநீக்கம் செய்யும் டெல் நிறுவனம்?:


டெல் நிறுவனம் உலக அளவில் உள்ள தனது தொழிலாளர்களில் 5 சதவிகிதம் அதாவது, 6,650 பேரை பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல் நிறுவனத்தின் கணினிகள் மற்றும் தொழில்நுட்ப சாதனங்களின் விற்பனை தொடர்ந்து சரிந்து வரும் சூழலில், இந்த பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 


பணிநீக்கத்திற்கான காரணம் என்ன?


இதுதொடர்பாக டெல் நிறுவனம் சார்பில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட அறிக்கையில்,  " டெல் நிறுவனம் நிச்சயமற்ற எதிர்காலத்துடன் தொடர்ந்து சிதைந்து கொண்டிருக்கும் சந்தை நிலைமைகளை அனுபவித்து வருகிறது. நாங்கள் இதற்கு முன்னர் பொருளாதார வீழ்ச்சிகளை எதிர்கொண்டுள்ளோம், அதிலிருந்து வலுவாக வெளிப்பட்டும் உள்ளோம். சந்தை மீண்டும் எழும்பும்போது நாங்கள் தயாராக இருப்போம்" என குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக 2020ம் ஆண்டு கொரோனா தொற்று பரவல் தொடங்கியபோதும், டெல் நிறுவனம் ஏராளமான ஊழியர்களை பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது. 


சரியும் விற்பனை:


2022 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் தனிநபர் கணினி ஏற்றுமதிகள் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதாக, தொழில்துறை ஆய்வு நிறுவனமான ஐடிசி தெரிவித்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையின்படி, 2021 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், பெரிய நிறுவனங்களில், டெல் 37 சதவீதத்துடன் மிகப்பெரிய சரிவைக் கண்டது. டெல் நிறுவனம் தனது வருவாயில் 55 சதவிகிதத்தை அதன் கணினி விற்பனைகளில் இருந்து ஈட்டி வரும் நிலையில், அதில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.


உலகெங்கும் பணிநீக்கம்:


சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார மந்த நிலை காரணமாக சமீபத்தில், 12 ஆயிரம் ஊழியர்களை பணியில் இருந்து நீக்குவதாக கூகுள் அறிவித்தது. அதாவது, உலக அளவில் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் இது 6 சதவிகிதம் ஆகும். அமேசான் நிறுவனம் பல்வேறு கட்டமாக பணிநீக்கங்களை மேற்கொண்டு வருகிறது. அந்த வரிசையில் சுமார் 2 ஆயிரத்து 300 பணியாளர்களை வேலையை விட்டு நீக்குவதாக அண்மையில் அறிவித்திருந்தது. 


அதேபோல, உலகின் முன்னணி நிறுவனமாக கருதப்படுவது மைக்ரோசாப்ட் நிறுவனம், தனது மொத்த ஊழியர்களில் 5 சதவிகிதம் அதாவது 11 ஆயிரம் பேர் ஒரே அடியாக பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மனித வளம் மற்றும் பொறியாளர் பிரிவுகளில் தான் தற்போது ஆட்குறைப்பு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. தனிநபர் கணினி விற்பனையில் தொடர்ந்து பல காலாண்டுகளாக மைக்ரோசாப்ட் நிறுவனம்  சரிவில் உள்ளதன் காரணமாக, அதன் விண்டோஸ் மற்றும் மற்ற உபகரணங்களின் விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளது.


கடந்த ஆண்டு அக்டோபர் மாதமும் சுமார் ஆயிரம் பேரை மைக்ரோசாப்ட் நிறுவனம் பணிநீக்கம் செய்ததாக கூறப்படுகிறது. உலக அளவில் நிலவும் பொருளாதார மந்த நிலை காரணமக ஏற்கனவே, ட்விட்டர், மெட்டா போன்ற பல பெருநிறுவனங்களும் ஆட்குறைப்பு நடவடிக்கையை எடுத்துள்ளன.  அதைதொடர்ந்து, சிஸ்கோ நிறுவனம் 4000 ஊழியர்களை வெளியேற்றியது. அதேபோன்று, ஓயோ நிறுவனமும் 600 பேரை பணியில் இருந்து அதிரடியாக நீக்கியது. இதேபோன்று, ஸ்பாட்டிஃபை, பைஜூஸ் மற்றும் ஷாப்பி ஆகிய பெருநிறுவனங்களும், பணிநீக்க நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன.