கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள மருதூர் என்னும் கிராமத்தில் பிறந்தவர் ராமலிங்க அடிகளார். இறைவன் ஒளி வடிவில் உள்ளார் என்பதை உலகுக்கு எடுத்துரைக்கும் வகையில் வடலூரில் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது. 

 

வள்ளலார், ஏழை எளிய மக்களின் பசியைப் போக்க, சத்தியஞான சபையில் தர்மசாலையை நிறுவினார். அன்று முதல் இன்றுவரை அணையா அடுப்பு எரிந்து பசிப்பிணி நீக்கிவருகிறது.

 

வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 152 - ம் ஆண்டு தைப்பூசப் பெருவிழா கடந்த சனிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தை மாதத்தில் வரும் பூச நட்சத்திர நாளன்று, சத்திய ஞான சபையில் ஏழு திரைகள் நீக்கி 6 காலங்கள் ஜோதி தரிசனம் காட்டப்படுவது வழக்கம். பொதுவாக தைமாசம் தவிர்த்த பிற மாத பூசநட்சத்திர தினத்தில் ஆறு திரைகள் மட்டுமே நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்படும். தைப்பூசத்தன்று ஏழு திரைகளையும் நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்படும். காலை 6 மணி 10 மணி நண்பகல் ஒரு மணி, இரவு 7 மணி, 10 மணி, நாளை அதிகாலை ஐந்து முப்பது மணி என ஆறு காலங்களில் ஜோதி தரிசனத்தை காணும் பக்தர்கள் 

அருட்பெரும் ஜோதி தனிப்பெருங்கருணை என கோஷத்துடன்  தரிசனம் செய்தனர்.

 



கருப்புத்திரை, நீலத்திரை,பச்சைத்திரை, சிவப்புத்திரை, பொன்மைத்திரை, வெண்மைத்திரை,

கலப்புத்திரை ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. 800 போலீஸாா் சுழற்சி முறையில் பணியாற்ற உள்ளனா். 10 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 60 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.



 

இதனிடையே வடலூர் தைப்பூச திருவிழா ஜோதி தரிசனத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டம் முழுவதும் மது மற்றும் மாமிசக் கடைகளை நாளை முழுவதுமாக மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.