கிரெடிட் கார்டு வாங்குவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் அதன் பயன்பாடு அதிகம் உள்ளது. தாங்கள் வாங்க வேண்டிய பொருள்களை கிரெடிட் கார்டு மூலம் வாங்கி, பின்னர் மாதத்தின் தொடக்கத்தில் அதற்கான தொகையை செலுத்த வேண்டும். 


கொடுக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் தொகையை செலுத்த வேண்டும். மாதா மாதம் செலுத்த வேண்டிய தொகையே நிலவை தொகை என அழைக்கப்படுகிறது.


கிரெடிட் கார்டுக்கு கட்ட வேண்டிய மொத்த நிலுவை தொகை:


இந்நிலையில், வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு கிரெடிட் கார்டுக்கு கட்ட வேண்டிய மொத்த நிலுவை தொகை உச்சம் தொட்டுள்ளது. 29.6 சதவிகிதம் உயர்ந்து 1.87 லட்சம் கோடி ரூபாயாக நிலுவை தொகை உயர்ந்துள்ளது என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


கொரோனாவுக்கு பிந்தைய காலகட்டத்தில் அதிகரித்த டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் நுகர்வோர் நம்பிக்கையின் காரணமாக கடன் நிலுவை தொகை அதிகரித்துள்ளது. கடந்தாண்டு ஜனவரி மாதம், 1 லட்சத்து 41 ஆயிரத்து 254 கோடி ரூபாயாக இருந்த கிரெடிட் கார்ட் நிலுவை தொகை 2023ஆம் ஆண்டு, ஜனவரி மாதம், 1 லட்சத்து 86 ஆயிரத்து 783 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.


8.25 கோடி கிரெடிட் கார்டுகள்:


2023ஆம் ஆண்டு, ஜனவரி இறுதிக்குள், கிட்டத்தட்ட 8.25 கோடி கிரெடிட் கார்டுகள் பல்வேறு வங்கிகளால் வழங்கப்பட்டுள்ளன. அதிக அளவில் கிரெடிட் கார்டுகள் விநியோகித்த ஐந்து வங்கிகளில் ஹெச்டிஎஃப்சி வங்கி, எஸ்பிஐ கார்டு, ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி மற்றும் கோடக் வங்கி ஆகியவை அடங்கும்.


இதுகுறித்து எஸ்பிஐ கார்டின் தலைமை செயல் அதிகாரியும் நிர்வாக இயக்குநருமான ராம மோகன் ராவ் அமரா, "பல பிரிவுகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தும் செலவுகள் அதிகரித்துள்ளன.


சுகாதாரம் மற்றும் உடல்நலம், கல்வி உள்ளிட்ட துறைகளில் செலவினங்களின் அதிகரிப்புக்கு நிச்சயமாக பங்களித்திருப்பது பணம் செலுத்துவதில் உள்ள எளிமை. ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சியைப் பார்த்தால், 45 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது. உண்மையில், கடந்த 11 மாதங்களில் இருந்து கிரெடிட் கார்டு செலவினங்கள் தொடர்ந்து ரூ. 1 லட்சம் கோடிக்கு மேல் உள்ளன.


விழிப்புணர்வுடன் இருக்கும் புதிய பட்டதாரிகள்:


இதுகுறித்து ஆண்ட்ரோமெடா லோன்சின் நிர்வாக தலைவர் வி. சுவாமிநாதன் கூறுகையில், "அடமானக் கடன்கள் மற்றும் வணிகக் கடன்கள் போன்ற பாதுகாப்பான கடன்கள் சமீப நாட்களில் பின்னடைவை பெற்றிருந்தாலும், தனிநபர் கடன் பிரிவு வளர்ந்து வருகிறது.


புதிய பட்டதாரிகள், இப்போது பணியிடத்தில் நுழைகிறார்கள். அவர்களின் முன்னோடிகளை விட நிதி ரீதியாக அதிக விழிப்புணர்வைக் கொண்டுள்ளனர். கிரெடிட் ஸ்கோர்களை உருவாக்க தீவிரமாக முயற்சி செய்கிறார்கள். அதிக ஃபின்டெக் நிறுவனங்கள் ஆன்லைனில் இருப்பை உருவாக்கி, தகவல்களைப் பகிர்வதால், இளைஞர்கள் அதிக தகவலறிந்த கிரெடிட் கார்டுகளை வாங்குகிறார்கள்" என்றார்.