நமது பூமி சுழலும் சூரியக் குடும்பத்தைப்போல, இந்தப் பிரபஞ்சத்தில் இன்னும் பல சூரியக் குடும்பங்கள் இருக்கின்றன. நமது பால் வழிப் பெருவழியில் பல்வேறு சூரியக் குடும்பங்கள் இருக்கின்றன. எனினும், நாம் வாழும்  சூரியக் குடும்பத்தைப் போல அல்லாமல், வெவ்வேறு அம்சங்களுடன் கூடிய சூரியக் குடும்பங்கள் பிரபஞ்சத்தில் உள்ளன. நமது சூரியக் குடும்பத்தில், கிரகங்கள் சூரியனைச் சுற்றி வட்டப் பாதையில் சுழல்கின்றன. இதன்மூலம், கிரகங்கள் உருவானது முதலே, இந்த வட்டப் பாதை மாற்றம் எதுவும் இல்லாமல் இருப்பதை உணர முடிகிறது. எனினும், சில சூரியக் குடும்பங்களில் கிரகங்களால் தெளிவான பாதையில் சுழல முடிவதில்லை. 


எந்தப் பிரச்னையுமின்றி அமைதியாக இருப்பதால், நமது சூரியக் குடும்பத்தின் ஒரு உறுப்பினராக பூமியில் உயிர் இருக்கிறது. வேற்றுகிரகங்களில் உயிர் இருக்கிறதா என்ற தேடலில், பூமியைப் போலவே அமைதியான சூழலில் இருக்கும் கிரகத்தை முதலில் தேட வேண்டும். அதன் பிறகு, அதில் உயிர் இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். 



ஒரு நட்சத்திரமாக உருமாறும் இரு நட்சத்திரங்கள்


 


சர்வதேச விண்வெளி ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் முடிவுபடி, சுமார் 20 முதல் 35 சதவிகிதம் வரை, சூரியனைப் போல இருக்கும் நட்சத்திரங்கள் தன்னைச் சுற்றி சுழலும் கிரகங்களை உண்கின்றன. ஏறத்தாழ 27 சதவிகித நட்சத்திரங்கள் இவ்வாறு செயல்படுவதாக இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதன்மூலம், நான்கில் ஒரு நட்சத்திரம் தன்னைச் சுற்றி சுழலும் கிரகத்தை உண்கிறது எனக் கணக்கிடப்படுகிறது. 


நட்சத்திரங்களால் உண்ணப்படும் கிரகங்களின் புவியீர்ப்பு சக்தியில் மாறுபாடுகள் ஏற்பட்டு, அவை வேறொரு கிரகத்தின் சுற்றுப் பாதையையோ, சுழல முடியாத பாதையையோ தேர்ந்தெடுக்கின்றன. இதன் பிறகு, படிப்படியாக அது சூரியனைப் போல இருக்கும் நட்சத்திரத்தால் விழுங்கப்படுகிறது. புவியீர்ப்பு விசையில் ஏற்படும் மாற்றம் குறித்த காரணத்தை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. 



சூரியனைப் போல இருக்கும் நட்சத்திரங்களின் ஒளியில் இருந்து செய்யப்பட்ட ஆய்வில், கிரகங்களின் வேதியியல் பொருள்கள் ஒளியில் தென்பட்டுள்ளன. மெல்லிய வெளிப்புற அடுக்கைக் கொண்டிருக்கும் நட்சத்திரங்களில் இரும்பு அதிகமாகத் தென்பட்டுள்ளது. இதன்மூலம், அது கிரகங்களை விழுங்கியது தெரிய வந்துள்ளது. இரும்பு, கிரகங்களில் இருக்கும் தாதுப் பொருள்கள் முதலானவற்றை ஒளியில் வெளிப்படுத்தும் நட்சத்திரங்களில் லித்தியம் அதிகமாக காணப்படுகிறது. கிரகங்களில் சேமிக்கப்படும் லித்தியம், நட்சத்திரங்களில் உடனடியாக அழிந்துவிடும். எனினும், நட்சத்திரங்களில் லித்தியம் இருக்கிறது என்றால், அது நட்சத்திரம் தோன்றும் போது உருவானது அல்ல என்பதும், அது கிரகத்தை விழுங்கியதால் அதனுடன் சேர்ந்தது என்பதும் அறியப்படுகிறது, 


இந்த ஆய்வுகளின் மூலம், சூரியனைப் போல இயங்கும் நட்சத்திரங்களால் விழுங்கப்படும் கிரகங்களைக் குறித்தும், அந்த நட்சத்திரங்களின் ஒளி அளவை வைத்து அதன் வேதியியல் கலவையையும் கண்டுபிடிக்க முடியும். இதன்மூலம், அமைதியான சூரியன் இருக்கும் சூரியக் குடும்பத்தையும், பூமியைப் போல மற்றொரு கிரகத்தையும் தேடும் முயற்சிகள் எதிர்காலத்தில் மிக எளிமையாக நிகழலாம்.