கொரோனா மூன்றாம் அலை காரணமாக இந்தியாவின் ஜி.டி.பி., 7 சதவிகிதம் வரை குறையும் என 
நோபல் பொருளாதார வல்லுநர் அபிஜித் பானர்ஜி கணித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம் கணித்த 9.5 சதவிகித வீழ்ச்சி என்பதை விட இது குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.முன்னதாக இதே நிதியம்தான் நமது உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 12.5 சதவிகிதமாக இருக்கும் எனக் கணித்திருந்தது. 






மேற்கு வங்கத்தின் பெருந்தொற்று கால பொருளாதார மேம்பாடு தொடர்பான ஆலோசனைக்குழுவிலும் அந்த மாநிலத்தில் சர்வதேச ஆலோசனை வாரியத்திலும் பானர்ஜி இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘கொரோனா சூழல் காரணமாக பொருளாதாரம் சரிந்து வருகிறது. மேலும் நிதியம் முன்பு நமது உள்நாட்டு உற்பத்தி 12.5 சதவிகிதமாக இருக்கும் என்று சொன்னது. தற்போது 9.5 சதவிகிதம் என்கிறார்கள். அது இன்னும் குறைந்து 7 சதவிகிதமாகும் என நான் சொல்கிறேன். இன்னும் ஒரு அலை ஏற்படுமானால் இது நிச்சயம் நடக்கும். நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கவில்லையென்றால் மாநிலங்களால் மட்டுமே அதனைத் தலைநிமிர்த்த முடியாது’ என அவர் தெரிவித்துள்ளார். 


கடந்த மாதத்தில் சர்வதேச நாணய நிதியம் 2022ம் நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சியை 9.5 சதவிகிதம் எனக் கணித்திருந்தது. இரண்டாம் அலை கொரோனா பாதிப்பு காலக்கட்டத்தில் தடுப்பூசி தொடர்ச்சியாகப் போடப்பட்டு வருவது தேசிய அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையைக் குறைத்திருந்தாலும் மற்றொரு பக்கம் கொரோனாவுக்கு எதிரான கூட்டு எதிர்ப்பு சக்தியை உருவாக்கியுள்ளது (Herd Immunity) இதற்கிடையேதான் மூன்றாம் அலை குறித்த இந்த கணிப்பை வெளியிட்டிருக்கிறார் நாணய நிதியம். 


அதே சமயம் 2022-23 நிதியாண்டுக்கான வளர்ச்சி 8.5 சதவிகிதமாக இருக்கும் என்றும் அது ஏப்ரலில் கணிக்கப்பட்ட 6.9 சதவிகிதம் என்பதை விட அதிகம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


’நான் எழுதிக் கூடத் தருகிறேன். நமது மொத்த உள்நாட்டு உற்பத்தி எண்ணிக்கை 6லிருந்து 7 சதவிகிதம் வரைக் குறையும். ஆனால் மற்றொரு அலை உருவானால் அது இன்னும் குறையும்’ எனத் தெரிவித்துள்ளார்.



மேலும் மேற்கு வங்கம் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் பொருளாதாரமும் இந்தியப் பொருளாதாரத்தை நம்பியிருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார், ‘ஒருவேளை நாட்டின் பொருளாதாரம் முன்னேறவில்லையென்றால் அதற்காக மேற்கு வங்கம் மட்டும் தனியாக எதுவும் செய்துவிட முடியாது. மொத்த பொருளாதாரமும் ஆக்டிவாக இருந்தால்தான் நமது பொருளாதாரத்தில் தாக்கம் இருக்கும். அதிக மேற்கு வங்கத்தினர் வெளி மாநிலங்களில் வேலை செய்துவருகின்றனர். இப்படிப் புலம்பெயர்ந்தவர்களால்தான் அதிக வருமானம் கிடைக்கிறது. இதை நாம் மட்டும் தீர்த்துவிட முடியாது.மாநிலங்கள் உதவிக்கொண்டுதான் இருக்கின்றன அதே சமயம் மத்திய ஆட்சியும் கைகொடுக்க வேண்டும்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.