மின்வாரிய அலுவலகங்களில் நள்ளிரவில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு மேற்கொண்டபோது, ஊழியர் ஒருவர் மதுப்போதையில் இருந்தது தெரியவந்ததை அடுத்து, அவரை அதிரடியாக பணியிடை நீக்கம் செய்து அமைச்சர் உத்தரவிட்டார்.


சென்னையில் பல இடங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக பொதுமக்கள் புகார்கள் கூறி வந்தனர். இதனைத் தொடர்ந்து, இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மின்வாரிய அதிகாரிகளுக்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி உத்தரவிட்டிருந்தார். இந்தநிலையில், நேற்றுமுன்தினம் இரவு 11 மணியளவில் சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி திடீரென்று ஆய்வு மேற்கொண்டார்.


கட்டுப்பாட்டு அறைக்கு சென்ற அமைச்சர் செந்தில் பாலாஜி, அங்கு நடைபெற்றுக்கொண்டிருந்த பணிகளை ஆய்வு செய்து கொண்டிருந்தார். அப்போது, பொதுமக்களிடம் இருந்து ஒரு போன்கால் வந்தது. உடனே அதை எடுத்து பேசிய அமைச்சர் பேசினார். எதிர்முனையில் இருந்தவர், தங்கள் பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாகவும், அதை சரி செய்ய வேண்டும் என்றும் கூறினார். இதுதொடர்பாக உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் கூறினார். 




 மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஆய்வு முடித்த அமைச்சர், கொருக்குப்பேட்டை துணை மின்வாரிய அலுவலகத்துக்கு நள்ளிரவு 12 மணிக்கு வந்தார். அங்கு ஆய்வு செய்தபோது, ஊழியர் ஜெகன் என்பவர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. உடனே அவரை அதிரடியாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, தண்டையார்பேட்டை பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதை அறிந்த  அமைச்சர் அங்கு சென்று மின் இணைப்பை சரி செய்யும் பணியை பார்வையிட்டார். அப்போது தங்கள் பகுதியில் அடிக்கடி மின்சாரம் தடை செய்யப்படுவதாகவும், மின்வாரியத்துக்கு தகவல் கூறினால் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை எனவும் அந்தப் பகுதி மக்கள் புகார் கூறினார்கள். இதன்பின்னர், இனி புகார் தெரிவித்தால், சில மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.


இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, கடந்த ஆட்சியில் மின்மாற்றிகள் பல இடங்களில் மாற்றப்பட வேண்டிய சூழல் இருந்தும் அவை மாற்றப்படவில்லை என்றும், தற்போது முதலமைச்சரின் அனுமதி பெற்று 6800 மின்மாற்றிகள் 625 கோடி ரூபாயில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதனை நிறுவும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் அதிகாரிகள் ஆய்வு கூட்டத்தில் கூறி உள்ளதாகவும் கூறினார்.


மேலும், ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பொதுமக்கள் புகார் மீது மின்வாரிய அலுவலர்கள் அலட்சியமாக செயல்பட்டு இருப்பது  தெரியவந்துள்ளதாகவும், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். மேலும், அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற