சமையல் எரிவாயு சிலிண்டர் புக் செய்வதில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பொது மக்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தொழில்நுட்ப கோளாறு
தமிழ்நாட்டில் சமையல் எரிவாயு சிலிண்டரை வழங்கி வரும் பொதுத்துறை நிறுவனமான இந்திய எண்ணெய் நிறுவனத்தின் இணையதளத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
வழக்கமாக சமையல் எரிவாயு சிலிண்டரை புக் செய்தால், புக் செய்யப்பட்டதை உறுதி படுத்தும் விதமாக குறுஞ்செய்தி ஒன்று பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும். ஆனால் தற்போது உறுதி செய்யப்பட்டதற்கான குறுஞ்செய்தி வரவில்லை என்று வாடிக்கையாளர்கள் தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக, புக் செய்யப்பட்டதா அல்லது புக் செய்யப்படவில்லையா என்ற குழப்பம் மக்களிடையே நீடித்துள்ளது
தொழில்நுட்ப நிறுவனங்களுடன் ஆலோசனை
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள எண்ணெய் நிறுவனம், இணையதளத்தில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக குறுஞ்செய்தி வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்வதில் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் ஆலோசித்து வருகிறோம் என்றும் கூடிய விரைவில் சரி செய்யப்படும் என தெரிவித்துள்ளது.
மேலும் பதிவு செய்த வாடிக்கையாளர்களின் பதிவுகள், இணைய தளத்தில் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் கூடிய விரைவில் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.