சேலம் மாவட்டத்தில் ஒரு வாரமாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு ஏற்காடு பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக சேலம் மாவட்டத்தில் உள்ள திருமணிமுத்தாரில் இணையக்கூடிய கிளை ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பெரமனூர், அரிசி பாளையம், நான்கு ரோடு பகுதியில் உள்ள ஓடை பாலத்தில் குப்பை கழிவுகள் தேங்கி நின்று தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் இந்த கோட்டத்திற்கு உட்பட்ட கோவிந்த கவுண்டர் தோட்டம், மார்க்கபந்து சாலை பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனால் 300 க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டன. அதேபோல் சாமிநாதபுரம் பகுதியிலும் குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்தது. குடியிருப்பு முழுவதும் வெள்ளநீர் சூழ்ந்ததால் வீடுகளில் இருந்தவர்களை தீயணைப்பு வீரர்கள் படகு மூலம் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.



நேற்று முன்தினம் இதேபோன்று ஏற்காடு பகுதியில் பெய்த கனமழையால் இந்த இரண்டு பகுதிகளிலும் வெள்ள நீர் வீடுகளுக்கு புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியது. அதில் இரண்டு மூதாட்டிகள் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து இன்றைய தினம் மீண்டும் அதே நிலை ஏற்பட்டுள்ளது. குடியிருப்புகளுக்குள் புகுந்த தண்ணீரை அகற்றுவதற்கு மாநகராட்சி தொடர்பு கொண்ட போது எந்த ஒரு அலுவலர்களும் அந்த பகுதிக்கு வரவில்லை. சேலம் மாநகராட்சி அதிகாரிகள் இந்த ஓடையை தூர் வாருவதற்கு முறையான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று கூறி கோவிந்த கவுண்டர் தோட்டப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நான்கு ரோடு பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது அதன் பிறகு அங்கு வந்த மாநகராட்சி அலுவலர்கள் பொக்லைன் இயந்திரம் கொண்டு ஓடையில் உள்ள அடைப்புகளை சீர்படுத்தும் பணியினை மேற்கொண்டனர். அதன் பிறகு குடியிருப்புகளுக்குள் புகுந்த தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக வடியத் தொடங்கியது. மழையால் ஏற்பட்ட பாதிப்பை பார்வையிடுவதற்காக சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் கோவிந்த கவுண்டர் தோட்டம் பகுதிக்கு வந்தார். அப்போது அவரை சூழ்ந்து கொண்ட பொதுமக்கள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 



மேலும் ஏன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்றும் கேள்வி எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


இது குறித்து பொதுமக்கள் கூறும் போது, இந்த ஓடையானது இரண்டு பக்கமும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், அதனை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என்றும் குற்றம் சாட்டினர். மேலும் வழக்கத்திற்கு அதிகமான மழை பெய்யும் என்று தெரிந்திருந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஓடைகள் தூர்வாரும் பணி முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினர். நேற்று முன்தினம் இதேபோன்று மழைநீர் குடியிருப்பு பகுதியில் புகுந்த போது முறையான நடவடிக்கை மேற்கொண்டு இருந்தால் மீண்டும் இந்த நிலை ஏற்பட்டு இருக்காது என்றும் பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர் வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீருடன் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் வருவதால் ஆபத்தான சூழ்நிலையில் இருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்தனர். 


இன்றைய தினம் வெள்ளாநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் வீட்டில் உள்ள உணவுப் பொருட்கள் அனைத்தும் சேதமாகிவிட்டதாகவும் இரவு உணவு சமைக்க கூட உணவு பொருட்கள் இல்லை என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.