கடந்த சில நாட்களாக சர்வதேச முதலீட்டு சமூகமும் சீனாவின் எவர்கிராண்ட் என்னும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தை குறித்தே விவாதித்து வருகிறது. 1996-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் சீனாவின் இரண்டாவது பெரிய  ரியல் எஸ்டேட் நிறுவனம். செப்டம்பர் 23-ம் தேதி  8.4 கோடி டாலர் தவணையை செலுத்த வேண்டும். ஒரு மாத காலம் அவகாசம் இருந்தாலும் இந்த தொகையை எப்படி செலுத்தபோகிறது என்னும் கேள்வியில்தான் அடுத்த சர்வதேச பொருளாதார சிக்கல் இருக்கிறது.


1996-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் சீனாவின் பெரும்பாலான நகரங்களில் பரந்துவிரிந்து இருக்கிறது. 280 நகரங்களில் 1300 புராஜக்ட்களை கையாளுகிறது. 1.2 லட்சம் பணியாளர்கள், 38 லட்சம் ஒப்பந்த தாரர்கள் உள்ளனர். ஹாங்காங் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட இந்த நிறுவனம் பார்ச்சூன் 500க்குள் உள்ள நிறுவனமாகும். மிக அதிக அளவில் கடன் வாங்கி விரிவாக்கம் செய்துவந்தது. ஆனால் கடந்த சில மாதங்களாகவே விற்பனை தொடர்ந்து குறைந்து வருகிறது. அதனால் நிறுவனத்தின் பணப்புழக்கத்தில் பெரும் சிக்கல் உருவாகி இருக்கிறது.


தர மதிப்பீட்டு நிறுவனங்கள் இந்த நிறுவனத்தின் ரேட்டிங்கை பெருமளவுக்கு குறைத்ததால் இந்த ஆண்டில் மட்டும் இந்த பங்கி சுமார் 80 சதவீதம் அளவுக்கு சரிந்திருக்கிறது. தற்போது இந்த நிறுவனத்தின் கடன் 300 பில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.  வளர்ச்சிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்ததால் இவ்வளவு பெரிய கடன் ஏற்பட்டிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


பணப்புழக்கம் குறைந்ததால் வங்கிகளும் கடன் தர மறுத்துவிட்டன. சப்ளையர்களுக்கு பணம் தர முடியாத சூழலில், டிபால்ட் ஆகும் வாய்ப்பு இருக்கிறது என முதலீட்டாளர்களுக்கும் தகவல் தெரிவித்துவிட்டது எவர்கிராண்ட். கடந்த சில மாதங்களாகவே இந்த சிக்கல் இருப்பதால் 16 லட்சத்துக்கும் மேலான வீடுகள் குறித்த தேதியில் வாடிக்கையாளர்களிடம் ஒப்படைக்க முடியவில்லை.




தாக்கம் என்ன?


ஒரு வேளை இந்த நிறுவனம் திவால் ஆனால் அது சீனாவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அதனுடைய தொடர்விளைவுகள் சர்வதேச சமூகத்துக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.  305 பில்லியன் டாலர் என்பது சீனாவின் ஜிடிபியில் 2 சதவீதம் ஆகும். தவிர சீனாவின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் ரியல் எஸ்டேட் பங்கு சுமார் 29 சதவீதம் என கணிக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் சீனாவின் பெரிய நிறுவனம் சரியும் பட்சத்தில் ரியல் எஸ்டேட் மற்றும் அதனை சார்ந்து உள்ள பல தொழில்களின் எதிர்காலம் கேள்விகுறியாகும்.


தவிர இந்த நிறுவனத்துக்கு 128 வங்கிகள் மற்றும் 121 வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் கடன் கொடுத்துள்ளன. அதனால் வங்கிகளின் நிதி நிலையும் மோசமாக பாதிக்கப்படும். சீனாவை பொறுத்தவரை 2020-ம் ஆண்டு முதல் சுமார் 2 லட்சம் நிறுவனங்கள் திவாலாகி இருக்கின்றன. அடுத்த 12 மாதங்களில் பல நிறுவனங்கள் 1.3 லட்சம் கோடி டாலர் அளவுக்கான கடன் தவணையை செலுத்த வேண்டும். இந்த சுழற்சியில் எங்கேயாவது பாதிப்பு ஏற்பட்டால் வங்கித்துறையிலும் பெரும் சரிவு ஏற்படும் என கணிக்கப்பட்டிருக்கிறது.


ரியல் எஸ்டேட்டில் மட்டுமல்லாமல் இதர தொழில்களிலும் இந்த குழுமம் ஈடுபட்டது. 2010-ம் ஆண்டு கால்பந்து அணியை வாங்கியது. 18.5 கோடி டாலர் செலவில் கால்பந்து பயிற்சி பள்ளியை அமைத்தது. மேலும் 170 கோடி டாலர் செலவில் கால்பந்து மைதானத்தையும் அமைத்தது. இதுதவிர வாட்டர் பாட்டில் தொழில், எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு மையத்தையும் அமைத்தது. மிகப்பெரிய முதலீடு செய்த போதிலும் கடந்த ஏப்ரல் வரையில் விற்பனை தொடங்கவில்லை. இதுபோல சம்பந்தம் இல்லாத தொழில்களில் களம் இறங்கியது எவர்கிராண்ட்.


இதுவரை சொத்துகளின் மதிப்பை அதிகமாகவும், கடனை குறைவாகவும் இந்த நிறுவனம் காண்பித்துவந்தது. ஆனால் பணப்புழக்கம் குறைந்த பிறகு இதனை செய்ய முடியவில்லை. இதுவரை இந்த நிறுவனம் நஷ்டம் சந்தித்ததாக வெளியிடவில்லை. ஆனால் சிக்கலில் தான் இருந்துவந்தது. ஒரு கட்டத்தில் போனஸ் வேண்டும் என்றால் பணியாளர்கள் நிறுவனத்துக்கு கடன் கொடுக்க வேண்டும் என கூறியதால் பணியாளர்களிடம் இருந்தும் கடன் வாங்கி இருக்கிறது.


இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?


சர்வதேச கட்டுமான துறையே சீனாவை நம்பி இருக்கிறது. அங்கு ரியல் எஸ்டேட் வீழ்ந்துவிட்டால், ஸ்டீல், சிமெண்ட், பெயிண்ட் என கட்டுமான பொருட்களின் சந்தை வீழ்ந்துவிடும். கடந்த திங்கள் கிழமை சந்தையில் அனைத்து ஸ்டீல் பங்குகளும் கடுமையான சரிவை சந்தித்தன. டாடா ஸ்டீல், ஜிண்டால், ஜே.எஸ்.டபிள்யூ உள்ளிட்ட பல ஸ்டீல் நிறுவனங்களும் சரிவை சந்ததன.


உலகில் தயாரிகப்படும் ஸ்டீல்களில் 50 சதவீதம் அளவுக்கு சீனா பயன்படுத்துகிறது. இதுவரை பெரிய அளவிலான சர்வதேச பொருளாதார நெருக்கடி வந்தபிறகு அடுத்த பல ஆண்டுகளுக்கு அங்கு ஸ்டீல் தேவை உயரவில்லை என்றே புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.




இந்த நிலையில் சீன அரசு எவர்கிராண்ட் நிறுவனத்தின் சிக்கலை தீர்க்கும் என்றே தெரிகிறது. ஒருவேளை தீர்க்கப்படாவிட்டால்  சீன பொருளாதாரம், சர்வதேச ரியல் எஸ்டேட், முக்கிய கமாடிட்டிகளின் விலை, வீடு வாங்குபவர்களின் நம்பிக்கை, கால்பந்து அணி என பல சிக்கல்கள் தீர்க்கப்படும். ஆனால் சீனாவில் மேலும் சில பெரிய கட்டுமான நிறுவனங்களும் பெரும் கடனில் உள்ளதால் சீனா என்ன முடிவெடுக்கும் என சர்வதேச சமூகமும் காத்திருக்கிறது.