சீனாவை சேர்ந்த பிரபல எவர்கிரேண்ட் நிறுவனம் தனது சொந்த ஊழியர்களிடமே கடன் தர வேண்டும் எனக் கேட்டுள்ளது. ஆனால் அது கேட்ட முறைதான் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. நிறுவனத்திற்கு லோன் தராத ஊழியர்களுக்கு போனஸ் கிடையாது என தெரிவித்துவிட்டது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் கடனில் மூழ்கிய நிலையில் இப்படியான அறிவிப்பை தனது ஊழியர்களிடம் செய்தது எவெர்கிரேண்ட் நிறுவனம்.
இந்த நிறுவனத்தில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். தற்போது வரலாறு காணத கடனில் மூழ்கியிருக்கிறது எவெர் கிரேண்ட். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு சீனாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமாக இருந்தது. நிறுவனம் வளர வளர பாட்டில் தண்ணீர், விளையாட்டு, எலக்ட்ரிக் வாகனங்கள் என ஒவ்வொரு துறையிலும் முதலீடு செய்து வளர்ந்துக்கொண்டே சென்றது. ஒரு காலத்தில் செழிப்பான ப்ராபர்ட்டி டெவலப்பர் நிறுவனமாக இருந்த எவெர்கிரேண்ட் நாட்டின் அதிக கடன்பட்ட நிறுவனமாக தற்போது மாறியுள்ளது. பல்வேறு வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமிருந்தும் இந்நிறுவனம் கடன் வாங்கியுள்ளது.
தனது முடிக்கப்படாத அடுக்குமாடி குடியிருப்புகளின் காரணமாக வீடு வாங்குபவர்களுக்கு கடன்பட்டிருக்கிறது. 300 பில்லியன் டாலருக்கும் அதிகமான பில்கள் இன்னும் திரும்ப செலுத்தப்படவில்லை. மேலும் கடன் வழங்குநர்களிடமிருந்து ஏராளமான வழக்குகளை எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில் நிறுவனத்தின பங்குகள் இந்த ஆண்டு 80% க்கும் அதிகமான மதிப்பை இழந்துள்ளன.
அதனை தொடர்ந்து, கடந்த வாரம் சீனாவில் இருக்கும் எவெர்கிரேண்ட் நிறுவனத்தின் ஒவ்வொரு அலுவலகத்தின் முன்பும் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் திரண்டனர். தங்கள் பணத்தை நிறுவனம் திருப்பியளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
ஃபார்ட்டியூன் 500 கம்பெனிகளின் வரிசையில் இருந்த ஒரு நிறுவனத்தின் சரிவு ஒட்டுமொத்த சீனாவின் நிதி அமைப்புக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. ஆனால் பெய்ஜிங் அரசு சார்பில் இதுவரை எதுவும் சொல்லப்படவில்லை. இந்நிறுவனத்தில் வீடு வாங்க பணம் செலுத்தி வீடு கிடைக்காதவர்களும், கடன் கொடுத்த நிறுவனத்தின் ஊழியர்களும் தற்போது போராடி வரும் நிலையில் அரசின் கவனத்தை பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் நிறுவனத்தின் சார்பில் இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. சமீபத்தில் மிகப்பெரிய, நிதி அழுத்தத்தில் இருப்பதாகவும் அதன் எதிர்காலத்தை நிர்ணயிக்க மறுசீரமைப்பு நிபுணர்களை நியமித்ததாக எவர்கிரேண்ட் தெரிவித்தது குறிப்பிடதக்கது.