பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வழிபாட்டிற்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்காக கோயிலுக்கு உள்ளே உள்ள மண்டபத்தில் தினமும் ருசியான உணவு வழங்கப்படும். ஆயிரக்கணக்கானோர் இந்த அருசுவை உணவை உண்டு, திருப்திகரமாக வழிபட்டு செல்வர். கூட்டு, பொரியல், சாம்பார், ரசம், தயிர், வத்தக்குழம்பு, அப்பளம் என அனைத்து விதமான சைவ உணவுகளும் வேண்டிய அளவு இங்கு பரிமாறப்படும்.




பாகுபாடின்றி பணம் படைத்தவர், எளியவர், வலியவர் என அனைத்து தரப்பினரும் சமபந்தியில் அமர்ந்து வயிராற உணவு உண்டு மகிழ்வர். இதற்காக மதிய நேரத்தில் மீனாட்சி அம்மன் கோயில் அன்னதான மண்டபத்தில் இடம் பிடிக்க பெரிய போட்டியே நடைபெறும். வரும் அனைவருக்கும் உணவு உண்டு என்றாலும், முதலில் பந்தியில் அமர போட்டி போடுவார்கள். அன்னதான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்தாலும், நன்கொடை வழங்கினால் அதுவும் ஏற்றுக்கொள்ளப்படும். அந்த வகையில் எந்த குறையம் இன்றி அன்னதானம் சிறப்பாக நடந்து வருகிறது.


இதுநாள் வரை நடந்த அன்னதானம் இலை போட்டு பந்தியாக அமர வைத்து நடந்து வந்தது. இந்நிலையில் அந்த அன்னதான முறையில் சிறிய மாற்றத்தை கோயில் நிர்வாகம் செய்துள்ளது. அதன் படி மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அன்னதானத்தில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 




திங்கள், செவ்வாய், புதன், வியாழன் கிழமைகளில் இலை போட்டு பந்தி முறையில் அமர்ந்து பக்தர்கள் உண்ணலாம். அதே நேரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் இலை போடும் பந்து முறையை தவிர்க்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதற்கு பதிலாக வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் பார்சல் பொட்டலங்களை பக்தர்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. இன்றிலிருந்து வியாழன் வரை இலை போட்டு பந்தியில் உண்ணும் முறை அமல்படுத்தப்படும். அதன் பின் அறிவித்தபடி பார்சல் அன்னதானம் வழங்கப்படும். 


ஆனால் இந்த அறிவிப்பில் ஒரு காலநிர்ணயம் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 31 வரை இந்த பார்சல் பொட்டலம் முறை வெள்ளி, சனி, ஞாயிறு தேதிகளில் இருக்கும் என்றும், அதுவரை அந்த  கிழமைகளில் வருவோர் பொட்டலங்களாக அன்னதானத்தை பெற்றுக் கொள்ளலாம் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளி, சனி, ஞாயிறு நாட்களில் பக்தர்கள் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதாலும், அன்னதான மண்டபத்தில் அதிக அளவில் எண்ணிக்கை கூடுவதாலும் அதை தடுக்கும் விதமாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. 




இருப்பினும் கோயில் அறிவிப்பில் இந்த முடிவுக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. அடுத்த அக்டோபர் மாதம் வரை இந்த நிலை தொடரும் என்பதால், நவம்பரில் இந்த நிலை மாறுமா... அல்லது இதே நிலை நீட்டிக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.