EPFO Interest: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி மத்திய நிதியமைச்சம் உத்தரவிட்டுள்ளது.


தொழிலாளர்  வருங்கால வைப்பு நிதி:


இந்தியாவில் ஊதியம் பெறும் பெரும்பாலான ஊழியர்களுக்குத் தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனத்தில் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலமாக தொழிலாளர்களின் ஓய்வுக்குப் பிறகு, அவர்களுக்கான வாழ்வாதாரம் உறுதி செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாதமும், தொழிலாளர்கள் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் குறிப்பிட்ட தொகை, அவரின் ஓய்வுக்குப் பிறகு, அவர்களுக்கே வழங்கப்படுகிறது. மேலும், ஒவ்வொரு மாதமும் அதே அளவிலான தொகையை தொழிலாளி பணியாற்றும் நிறுவனமும் அந்தக் கணக்குகளில் செலுத்துகிறது. 


தங்கள் அடிப்படைக் கூலியில் இருந்து சுமார் 12 சதவிகிதம் என்பதே வைப்பு நிதியாக கருதப்பட்டாலும், அது குறைந்தபட்சத் தொகை மட்டுமே. தொழிலாளர்கள் தங்களுக்கு விருப்பம் இருந்தால், தங்கள் ஊதியத்தில் இருந்து 100 சதவிகிதம் வரை வைப்பு நிதிக்காக ஒதுக்க முடியும். எனினும் அதே அளவை அவர் பணியாற்றும் நிறுவனமும் வழங்க வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லை. இந்த இரண்டு ஒதுக்கீடுகளும் கூட்டப்பட்டு, அதோடு வட்டித் தொகையும் சேர்க்கப்பட்டு தொழிலாளர்களுக்கு இறுதியில் வழங்கப்படுகிறது. 


EPFO வட்டி விகிதம் உயர்வு:


இந்நிலையில், 2022-2023ஆம் நிதியாண்டுக்கான வருங்கால  வைப்பு நிதி வட்டி 8.15 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொரோனா  தொற்றால் கடந்த 2021-2022ஆம் ஆண்டுக்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்) மீதான வட்டி 8.19 சதவீதம் குறைக்கப்பட்டது. இதனை அடுத்த, கடந்த மார்ச் மாதம் டெல்லியில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மத்திய அறக்கட்டளை வாரியக் குழு கூட்டம் நடத்தியது. அதில் 2022-2023ஆம் நிதியாண்டுக்கான வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம்  உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.  அதன்படி, இந்த வட்டி விகிதத்தை 8.10 சதவீதத்தில் இருந்து 8.15 சதவீதமாக உயர்த்ததப்பட்டுள்ளது. 2022-23ஆம் ஆண்டு வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகித உயர்வு நிதியமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு வட்டி விகிதத்தை உறுதிப்படுத்திய பிறகு, EPFO ​நடப்பு மற்றும் இனிவரும்​ நிதியாண்டிற்கான நிலையான வட்டி விகிதத்தை EPF கணக்குகளில் வரவு வைக்கத் தொடங்கும்.


EPF இருப்புத் தொகையை எப்படி பார்ப்பது? 


பல்வேறு ஆப்ஷன்கள் மூலம் உங்களுடைய பிஎஃப் இருப்புத் தொகையை சரிபார்க்க முடியும். அதன்படி,


மொபைல் எண்


எஸ்எம்எஸ் மூலமாக உங்களுடைய பிஎஃப் இருப்புத் தொகையை அறிந்து கொள்ள 7738299899 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். அதில் 'EPFOHO UAN ENG' என்று டைப் செய்து அனுப்ப வேண்டும். 


மிஸ்ட் கால்


011-22901406 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தும் உங்களது பிஎஃப் இருப்புத் தொகையை அறிந்துக் கொள்ளலாம்.


M-Sewa செயலி


உங்களுடைய மொபைலில் M-Sewa செயலியை பதிவிறக்கம் செய்து, அதில் Member என்பதற்குள் சென்று Balance/passbook  என்பதை கிளிக் செய்து உங்களின் இபிஎஃப் தொகையை சரி பார்த்துக் கொள்ளலாம்.


Umang செயலி


உங்களுடைய மொபைலில் Umang செயலியை பதிவிறக்கம் செய்து, Employee centric services என்பதற்குள் நுழைந்து EPFO ஆப்ஷனை கிளிக் செய்து உங்களின் இபிஎஃப் இருப்புத் தொகையை அறிந்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.