கேரளாவில் அதிக அளவில் விவசாயம் செய்யப்படும் ஏலக்காய், நறுமண பொருட்களில் ஒன்றாகும். கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் சுமார் லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் இந்த ஏலக்காய் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த  விவசாயத்தில் பெரும்பாலும் தமிழக தோட்ட தொழிலாளர்களை ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக ஒரு நாளைக்கு ஒரு லட்சம் கிலோ வரை ஏலக்காய் வர்த்தகம் என்பது நடைபெறுவது வழக்கமாக இருந்து வந்தது. இந்த விற்பனையானது கேரள மாநிலம் புத்தடி மற்றும் தேனி மாவட்டம் போடியில் உள்ள நறுமணப் பொருள் வாரியத்தில் ஆன்லைன் மூலம் ஏல முறையில் விற்பனை செய்யப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.




தினமும் காலை மற்றும் மாலை  நேரங்களில் இரு முறை ஆன்லைன் மூலம் ஏலம் முறையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஏலத்தில் போடி ,தேவாரம், கோம்பை, கம்பம் ,குமுளி கட்டப்பனை  மற்றும் தமிழகத்தின் இதர வெளி மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு ஏலக்காய்களை கொள்முதல் செய்து வருகின்றனர். கடந்த 8தேதி முதல் தற்போது வரை கேரள மாநிலத்தில் முழு ஊரடங்கு அமல் படுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இரு மாநிலங்களிலும் தொடர்ந்து முழு ஊரடங்கு என்பது அமலில் இருந்து வருகிறது.




இதன் எதிரொலியாக புத்தடி, போடி நறுமணப் பொருட்கள் வாரியத்தில் ஏலக்காய் ஏலம் விடாமல்  தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பல லட்சம் கிலோ ஏலக்காய் கொள்முதல் செய்ய ஆள் இல்லாமல் தேக்கம் அடைந்துள்ளது . இதனால் வியாபாரிகளுக்கும் விவசாயிகளுக்கும் என 300 கோடி ரூபாய்க்கு மேல் ஏலக்காய் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. குறிப்பாக தமிழகம், கேரளா மற்றும் வடமாநிலங்களில் உள்ள ஏலக்காய் கடைகள் மூடப்பட்டு உள்ளதால் ஏலக்காய் ஏற்றுமதி நடைபெறாமல் ஏலக்காய் விற்பனை கடுமையாக குறைந்துள்ளது. ஒரு கிலோ 350 ரூபாய் வரை மட்டுமே குறைந்த விலையில் விற்கப்பட்டு வருகிறது. மேலும் இரு மாநில போக்குவரத்து தடை என்பதால் தமிழகத்திலிருந்து  ஏலக்காய் தோட்டங்கள் வைத்துள்ள தமிழக விவசாயிகள் தங்களது தோட்டங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.




மேலும் ஏல தோட்ட தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் இருப்பதாலும் தமிழக-கேரள எல்லையை  சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்களும் வேலை இழந்து உள்ளனர். வாழ்வாதரம் முழுதும் பாதிக்கப்பட்டுள்ள ஏலக்காய் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கருதி அவற்றை விற்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. குறைந்தபட்சம் தேங்கியுள்ள ஏலக்காய்களயைாவது விற்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் இல்லையென்றால் நறுமணப்பொருள், நாறிவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது.