வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, மற்றும் பல வாய்ப்புகளை உருவாக்கி தருவதற்காக அடுத்த 5 ஆண்டுகளில் 4.1 கோடி இளைஞர்கள் பயன் பெறும் வகையில் 2 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.


கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம்: கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுக்காக இந்தாண்டு 1.48 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய நிதிநிலை அறிக்கையின்போது, இந்திய பொருளாதாரம் குறித்து பேசிய நிதியமைச்சர், "மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் விதிவிலக்காக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து பிரகாசமாக இருக்கிறது. 


மேலும் வரும் ஆண்டுகளில் அது அப்படியே இருக்கும். இந்தியாவின் பணவீக்கம் தொடர்ந்து குறைந்து வருகிறது. நிலையானதாக 4% இலக்கை நோக்கி நகர்கிறது. இடைக்கால பட்ஜெட்டில் குறிப்பிட்டுள்ளபடி, ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் ஆகிய 4 வெவ்வேறு சமூகத்தினர் மீது கவனம் செலுத்த வேண்டும்.


விவசாயிகளுக்கு, அனைத்து முக்கிய பயிர்களுக்கும் குறைந்த பட்சம் 50% வித்தியாசத்தில் அதிக குறைந்தபட்ச ஆதரவு விலையை அறிவித்தோம். 80 கோடிக்கும் அதிகமான மக்கள் பயனடையும் வகையில் பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது" என்றார்.


மற்ற துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு? மத்திய பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு 1.5 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சிக்கு என்று 2.6 லட்சம் கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது.


பழங்குடியின சமூகத்தவரின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக பிரதான் மந்திரி ஜன்ஜாதிய உன்னத் கிராம் அபியான் திட்டம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 63,000 கிராமங்களில் உள்ள 5 கோடி பழங்குடியினர் பயன்பெறுவார்கள் என கூறப்பட்டுள்ளது.