Indian Budget History: இந்திய பொருளாதாரத்தை மாற்றி அமைத்த 5 முக்கிய பட்ஜெட்களின், முக்கிய அம்சங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.


மத்திய அரசு பட்ஜெட்:


மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25 நிதியாண்டிற்கான,  பட்ஜெட்டை இன்று காலை 11 மணிக்கு மக்களவையில் தாக்கல் செய்கிறார். தொடர்ச்சியாக அவர் தாக்கல் செய்ய உள்ள ஏழாவது பட்ஜெட் இதுவாகும். முன்னதாக, கடந்த 1947 ஆம் ஆண்டு சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டை ஆர்.கே.சண்முகம் செட்டி தாக்கல் செய்தபோது, ​​மத்திய பட்ஜெட் ஒரு வளமான வரலாற்றைக் கொண்டுள்ளது. அதன் பின்னர், நாட்டின் பொருளாதாரத்தை மாற்றியமைத்த பல முக்கிய வரவு செலவுத் திட்டங்களை நாடு கண்டுள்ளது.


இந்தியாவின் மிக முக்கியமான 5 பட்ஜெட்கள்:


1957-58 பட்ஜெட்:


1957-58 ஆம் ஆண்டுக்கான டி.டி.கிருஷ்ணமாச்சாரியின் பட்ஜெட்டில் செல்வ வரி உட்பட அற்புதமான வரி சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்தியாவின் வரிக் கொள்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கும் வகையில், தனிநபர் சொத்துக்களின் மொத்த மதிப்பில் இந்த வரி விதிக்கப்பட்டது. கடந்த 2015ம் ஆண்டில் ஒழிக்கப்படும் வரை,  பல்வேறு வடிவங்களில் செல்வ வரி இந்திய வரி முறையின் ஒரு பகுதியாக இருந்தது.


1991-92 பட்ஜெட்:


மன்மோகன் சிங் தாக்கல் செய்த 1991 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட், நாடு எதிர்கொண்டிருந்த கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது. பொருளாதார நிபுணரான அவர், இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்திருத்த தனது நிபுணத்துவத்தை பயன்படுத்தினார். இறக்குமதி-ஏற்றுமதி கொள்கையை மறுசீரமைப்பதற்காக திட்டக் கமிஷனின் தலைவராகவும், தலைமைப் பொருளாதார ஆலோசகராகவும் இருந்த அனுபவத்தை பயன்படுத்தினார்.


அதன்படி அவர் தாக்கல் செய்த பட்ஜெட், சுங்க வரியை 220 சதவிகித்தில் இருந்து 150 சதவிகிதமாக குறைத்து, இந்திய வர்த்தகத்தை உலகளவில் போட்டித்தன்மையுடன் மாற்றியது. பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் அரசாங்கத்தின் கீழ், புதிய தாராளமயக் கொள்கைகளை அறிமுகப்படுத்தினார், அரசாங்கக் கட்டுப்பாட்டைக் குறைத்து பொருளாதார சுதந்திரத்தை மேம்படுத்தினார்.


இந்த மைல்கல் பட்ஜெட் இந்திய பொருளாதாரத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது.  உலகளவில் இந்தியாவின் நற்பெயரை மேம்படுத்தியது மற்றும் "லைசென்ஸ் ராஜ்" முடிவுக்கு வந்தது. இந்த பட்ஜெட் வெளிநாட்டு முதலீட்டையும் ஈர்த்ததோடு, பொருளாதார நம்பிக்கையை உயர்த்தி, இந்தியா ஒரு பெரிய பொருளாதார சக்தியாக மாற வழி வகுத்தது.


1997-98 பட்ஜெட்:


நரசிம்மராவ் அமைச்சரவையில் மன்மோகன் சிங்கின் கீழ், ப சிதம்பரம் நிதியமைச்சராக பணியாற்றினார். அந்த அனுபவத்தின் மூலம், 1997 ஆம் ஆண்டு நிதியமைச்சராக பதவி உயர்வு பெற்றபோது, பட்ஜெட்டில் தனது பொருளாதார மற்றும் நிதி நிபுணத்துவத்தை வெளிப்படுத்தினார்.


நிபுணர்களால் "கனவு பட்ஜெட்" என்று பெயரிடப்பட்ட இந்த பட்ஜெட்டில், தனிநபர் மற்றும் கார்ப்பரேட் வரிகளில் குறிப்பிடத்தக்க குறைப்புகளை அமைச்சர் அறிமுகப்படுத்தினார், அதிகபட்ச தனிநபர் வருமான வரி விகிதத்தை 40 சதவிகிதத்தில் இருந்து 30 சதவிகிதமாகக் குறைத்தார். இந்த நடவடிக்கை, கூடுதல் கட்டணங்கள் மற்றும் குறைக்கப்பட்ட ராயல்டி விகிதங்கள் ஆகியவற்றுடன் தொகுக்கப்பட்டது. வரி செலுத்துவோருக்கு குறிப்பிடத்தக்க நிவாரணம் அளித்தது. இதனால், ப. சிதம்பரம் தாக்கல் செய்த 1997-98 பட்ஜெட்,  இந்தியாவின் சிறந்த பட்ஜெட்டுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.


2000-01 பட்ஜெட்:


அடல் பிஹாரி வாஜ்பாய் ஆட்சியில் யஷ்வந்த் சின்ஹா ​​ஒரு முக்கிய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அது, கணினி உட்பட 21 பொருட்களுக்கான சுங்க வரியைக் குறைத்து தகவல் தொழில்நுட்பத் துறையில் புரட்சியை ஏற்படுத்தியது. இது தொழில்துறையின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது, இந்தியாவை ஐடி துறைக்கான மையமாக மாற்றியது.


2016-17 பட்ஜெட்:


2017-18ஆம் ஆண்டு அருண் ஜெட்லி தாக்கல் செய்த பட்ஜெட், 92 ஆண்டுகால பாரம்பரியத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து. காரணம், அதுவரை தனியாக சமர்பிக்கப்பட்ட வந்த ரயில்வே பட்ஜெட், அந்த ஆண்டு முதல் பொது பட்ஜெட் உடன் இணைக்கப்பட்டது.  நிதியமைச்சர் என்ற முறையில், அருண் ஜெட்லி இந்த செயல்முறையை நெறிப்படுத்தி, ருங்கிணைந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.  பின்னர் அது நிலையான நடைமுறையாக மாறிவிட்டது.