நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்துள்ள  பட்ஜெட் அறிவிப்புகள் குறித்து இந்திய கட்டுமானத்துறை கூட்டமைப்பின் (CREDAI) சென்னை தலைவர் துகர் படம் கூறுகையில், நடப்பு பட்ஜெட்டில் ரியல் எஸ்டேட் மற்றும் வீட்டு வசதி துறை குறித்த அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. இந்த பட்ஜெட் மூலம் ரியஸ் எஸ்டேட் துறைக்கு நேரடியாக எந்த பலனும் இல்லை, பட்ஜெட்டில் எங்களின் எந்த எதிர்ப்பார்ப்பும் பூர்த்தியாகவில்லை, பட்ஜெட் குறித்து எங்களுக்கு நிறைய எதிர்பார்ப்புகள் இருந்தன. வீடு வாங்குபவர்களுக்கான வீட்டுக்கடன் வரியால் பலரும்  வீடு வாங்குவதில் ஆர்வம் காட்டாமல் இருக்கின்றனர். முன்பு வீட்டுக்கடன்களுக்கு வரிவிதிக்கும் முறைகள் இல்லை இந்த வரிமுறை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர்தான் அறிமுகப்பட்டுத்தப்பட்டது.



இதனால் சம்பளம் வாங்குபவர்களுக்கு வரிச்சலுகை இல்லாததால் வீடுவாங்குவதில் ஆர்வம் காட்டுவதில்லை. வீட்டுவாங்குபவர்கள் எண்ணிக்கை அதிகரித்தால் மட்டுமே கட்டுமானம் மற்றும் அதை சார்ந்து இயங்கும் துறைகள் வளர்ச்சியை பெறும். இந்த பட்ஜெட் நேரடியாக ரியஸ் எஸ்டேட் துறைக்கு எந்த பலனையும் அளிக்கவில்லை. மேலும் சிமெண்ட்டிற்கான 28% ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும் என எதிர்ப்பார்த்து வந்தோம். அளவுக்கு அதிகமான வரி சிமெட்டிற்கு விதிக்கப்பட்டுள்ளது. மதுவுக்கும் சிமெண்ட்டிற்கும் 28% வரி என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருக்கிறது. இதே போல் வருமானவரியிலும் எந்த சலுகையும் அளிக்காததால் வீடு வாங்குவதில் ஆர்வம் காட்டுபவர்கள் எண்ணிக்கை குறையும்.




மேலும் பட்ஜெட்டில் அறிவித்துள்ள ஒரே நாடு ஒரே பத்திரப்பதிவு திட்டதால் எந்த பலனும் இல்லை, இதனால் மாநிலத்தின் வருமானம் கடுமையாக பாதிக்கும். ஏற்கெனவே விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரி வருவாய்க்கான பங்குத்தொகை மாநில அரசுகளுக்கு முறையாக வராததால், ரியல் எஸ்டேட் துறைக்கு மாநில அரசு உதவி செய்வது சிரமமான ஒன்றாக உள்ளது. பத்திரப்பதிவு என்பது மாநில அரசின் கட்டுப்பாட்டில் வரும் நிலையில் பத்திரப்பதிவு சார்ந்த பிரச்னைகளுக்கு தினமும் டெல்லி செல்ல முடியுமா?, இந்த திட்டம் ரியல் எஸ்டேட் துறையை விட மக்களைத்தான் கடுமையாக பாதிக்கும்.




பத்திரப்பதிவு மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும்போது பத்திரப்பதிவுக்கான வரி விகிதங்கள் குறித்து மாநில முதல்வர்களை நேரடியாக சந்தித்து பேச முடியும். வருவாய் பத்திரங்கள், பட்டா, ஆகியவை மாநில அரசின் கட்டுப்பாட்டில் வருகின்றன. அதற்கான தாசில்தார்களும் மாநில அரசு சார்ந்தவர்களாக உள்ள நிலையில் இது மத்திய அரசின் கட்டுப்பாடில் சென்றால் நிறைய முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளது.