நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று (ஜன.31) குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8- 8.5 சதவிகிதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 


அதைத் தொடர்ந்து இன்று (பிப்.1) மக்களவையில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். 


அதில் கல்வித்துறையில் டிஜிட்டல் பல்கலைக்கழகம், 1 பாடத்துக்கு 1 தொலைக்காட்சி சேனல் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. 


கல்வித்துறை அறிவிப்புகள் குறித்த முழுமையான பார்வை இதோ:


கொரோனா பெருந்தொற்று காரணமாகக் கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு, பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது. தனியார் கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் கல்வியை அறிமுகம் செய்தன. ஆன்லைன் கல்வியைப் பெறுவதில், விளிம்பு நிலை மாணவர்களுக்கு சிக்கல் இருந்தது.


இதனால் மத்திய, மாநில அரசுகள் தொலைக்காட்சி மூலம் கல்வி அளிக்கத் தொடங்கின. டிஜிட்டல் கல்விக்காக பிரதமர் இ-வித்யா திட்டம் தொடங்கப்பட்டு, ஆன்லைன் கல்விக்கு அதிகமான முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.


பிரதமர் இ-வித்யா டிஜிட்டல் கல்வி திட்டத்தில் அனைத்து வகுப்பினருக்கும் இணையவழி பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. க்யூஆர் கோட் மூலம் புத்தகங்களைப் பதிவிறக்கம் செய்வது அறிமுகம் செய்யப்பட்டது. அதேபோல ஒரு வகுப்புக்கு, ஒரு தொலைக்காட்சி தளம் என்ற வகையில், ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஒரு வகுப்புக்கு ஒரு சேனல் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்காக  12 சேனல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. 


கல்வி நிபுணர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடல், கல்வித் தொடர்கள், ஸ்கைப் மூலம் நேரடியாகப் பாடங்களை நடத்தி உரையாட வசதி ஆகியவை மேற்கொள்ளப்பட்டது.


இந்த சூழலில்  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கல்வித்துறை சார்ந்து அறிவித்துள்ளவை:


" * பள்ளிக் கல்வித் துறைக்கு 2022-23 ஆம் கல்வியாண்டில் ரூ.63,449.37 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் 9 ஆயிரம் கோடி அதிகமாக அதாவது 9% அதிகமாகும். 


 *பள்ளிக் கல்விக்கான முக்கியத் திட்டமான சம்க்ர சிக்‌ஷ அபியான் திட்டத்துக்காக ரூ.37,383.36 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.


 *அதேபோல கேந்திரிய வித்யாலயா (கேவி) மற்றும் ஜவஹர் நவோதயா வித்யாலயா (ஜேஎன்வி) பள்ளிகளுக்கும் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கேவி பள்ளிகளுக்கு ரூ.7,650 கோடியும் ஜேஎன்வி பள்ளிகளுக்கு ரூ.4,115 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.


 *உயர் கல்வித்துறைக்கு ரூ.40,828 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டைக் காட்டிலும் 6.6% அதிகமாகும்.




* தொழிற்கல்வி வகுப்புகளில் சிந்தனைத் திறன்களை வளர்க்கவும், அறிவியல் மற்றும் கணிதத் துறையில் படைப்பாக்கத் திறனை ஊக்கப்படுத்தவும் 750 மெய்நிகர் ஆய்வகங்கள் உருவாக்கப்படும். 


* அதேபோல 2022-23 ஆம் கல்வியாண்டில், கற்றல்மிகு சூழலை உருவாக்க 75 மின்னணு திறன் மேம்பாட்டு ஆய்வகங்கள் உருவாக்கப்படும். 


* மக்களால் பேசப்படும் அனைத்து மொழிகளிலும் டிஜிட்டல் ஆசிரியர்கள் மூலம் மொபைல் போன்கள், தொலைக்காட்சி, ரேடியோ ஆகியவை வழியாக உயர் தர மின்னணு உள்ளடக்கங்கள் உருவாக்கப்படும். 


* நகர்ப்புறத் திட்டமிடல் மற்றும் வடிவமைப்பில் இந்தியா சார் அறிவை வளர்க்கவும், நிபுணத்துவத்தை ஏற்படுத்தவும் பயிற்சிகள் அளிக்கப்படும். இதற்காகப் பல்வேறு பிராந்தியங்களில் அதிகபட்சம் 5 கல்வி நிறுவனங்கள் நிபுணத்துவம் பெற்ற மையங்களாக நியமிக்கப்படும். இந்த மையங்களுக்குத் தலா ரூ.250 கோடி செலவிடப்படும். ஏஐசிடிஇ அமைப்பு, கல்வி நிறுவனங்களில் நகர்ப்புற வடிவமைப்பு குறித்த பாடத்திட்டம், பாடப்பிரிவு ஆகியவற்றை மேற்பார்வை இடும். 


* உலகத் தரம் வாய்ந்த வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்விநிறுவனங்கள், குஜராத் சர்வதேச நிதி தொழில்நுட்ப (கிஃப்ட்) நிறுவனத்தில் கற்பிக்க அனுமதி வழங்கப்படும். குறிப்பாக நிதி மேலாண்மை, நிதி தொழில்நுட்பம், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகியவற்றில் பாடப்பிரிவுகளைத் தொடங்க அனுமதி வழங்கப்படும்.




200 சேனல்களாக உயர்வு


கொரோனா தொற்று பல்வேறு வடிவங்களில் தொடர்வதால், ஆன்லைன் கல்வியின் தேவை கருதி, தற்போது 12 சேனல்கள் 200 சேனல்களாக உயர்த்தப்படும். இதன் மூலம் மாநில மொழிகளிலேயே அனைத்து வகுப்புகளுக்கான பாடங்கள் தனித்தனி சேனல்களில் நடத்தப்படும்.


டிஜிட்டல் பல்கலைக்கழகம் 


இந்திய மாணவர்களின் வீட்டிலேயே உலகத் தரம் வாய்ந்த கல்வி கிடைக்கும் வகையில், டிஜிட்டல் பல்கலைக்கழகம் அமைக்கப்படும். ஐஎஸ்டிஇ தரத்தின் அடிப்படையில் இந்தப் பல்கலைக்கழகம் இருக்கும். இதற்கான உள்ளடக்கம் வெவ்வேறு இந்திய மொழிகளில், ஐசிடி முறையில் தயாரிக்கப்படும். தலைசிறந்த பல்கலைக்கழககங்களும் அரசு கல்வி நிறுவனங்களும் இணைந்து இந்தப் பணியை மேற்கொள்ளும்." 


இவ்வாறு கல்வித் துறை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.