நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியிருக்கிறது. இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் பேசிய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்  “கற்க கசடற” என தொடங்கும் திருக்குறளை சுட்டிக் காட்டி புதிய கல்வி கொள்கை குறித்து பேசினார். அவரை தொடர்ந்து  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார். நேற்று தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் 27 முறை தமிழகம் என்ற சொல் இடம்பெற்றது. இன்று  தனது நான்காவது பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். 
அவர் ஏற்கெனவே தாக்கல் செய்த பட்ஜெட்டுகளில் புறநானூறு, திருக்குறள் போன்றவற்றை மேற்கோள் காட்டியுள்ளார்.




கடந்த ஆண்டு, 2021  ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது, “ இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த  வகுத்தலும் வல்லது அரசு”  என்ற குறளை மேற்கோள் காட்டி பேசினார்.


அதேபோல அப்போது, பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
    அணியென்ப நாட்டிவ் வைந்து  என்ற குறளையும் சுட்டிக்காட்டினார்


2020-ம் வருடத்தில் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்தபோது  "பூமி திருத்தி உண்" என ஆத்திச்சூடி மேற்கோளுடன் பேசினார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்.




2019 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கலின்போது புறநானூற்றிலிருந்து பிசிராந்தையாரின் யானை புக்க புலம் போல என தொடங்கும் பாடலை மேற்கோள்காட்டினார். இந்நிலையில், பட்ஜெட் தாக்கலில் தமிழ் என்றால் அதன் தயாரிப்பிலும், நிதி நிர்வாகத்திலும் தமிழர்கள் முக்கிய பங்காற்றுகிறார்கள். 


முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம், ஒவ்வொரு முறை பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போதும் திருக்குறளில் இருந்து மேற்கோள் காட்டுவது வழக்கம். இந்த வழக்கத்தை முதன் முறையாக, 1996ம் ஆண்டு நிதியமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து பின்பற்றி வருகிறார்.  2008ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது , ஷேக்ஸ்பியரை மேற்கோள் காட்டினார். 2013ம் ஆண்டு பட்ஜெட் தாக்கலின்போது கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது; தூக்கம் கடிந்து செயல்' என்ற திருக்குறளை வாசித்து அதற்கான ஆங்கில விளக்கத்தையும் அளித்தார்.  அதேபோல நிதியமைச்சர்களாக இருந்த மன்மோகன் சிங், அருண் ஜெட்லி, ஜஷ்வந்த் சிங் போன்றோரும் பட்ஜெட் உரையில் ஏதாவது கவிதைகளை குறிப்பிடுவது வழக்கமாக கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடதக்கது. 


பட்ஜெட்டில் தமிழர்கள் : 


கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நிதித்துறை செயலாளராக நியமிக்கப்பட்ட, தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான  சோமநாதன், இந்த வருடத்தின்  பட்ஜெட் ஒருங்கிணைப்பு பணிகளை முன்நின்று நடத்தினார். இவர் ஏற்கெனவே உலக வங்கியில் பணிபுரிந்தவர். 


அதேபோல போன வாரம் மத்திய தலைமை பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்ட அனந்த நாகேஸ்வரன் மதுரையை சேர்ந்தவர். மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக பொறுப்பேற்கும் நான்காவது தமிழர். இவர் ஏற்கெனவே பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக இருந்தவர்.


இதற்கு முந்தைய தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் தமிழர். அதேபோல அதற்கு முன்பு தலைமைப் பொருளாதார ஆலோசகர்களாக இருந்த அரவிந்த் சுப்பிரமணியன் மற்றும் ரகுராம் ராஜன் ஆகியோரும் தமிழர்களே. பட்ஜெட் சார்ந்து தமிழும், தமிழர்களும் இருப்பது தமிழ்நாட்டின் பெருமைமிகு தருணங்கள்தான்!




நிர்மலா சீதாராமன் தனது 4 வது பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள நிலையில், எதிலிருந்து மேற்கோள் காட்ட உள்ளார் என்ற எதிர்பார்ப்பும் பட்ஜெட்  மீதான எதிர்பார்ப்பு போலவே எழுந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு பட்ஜெட் தாக்கலின்போது மகாபாரதத்தின் ‘சாந்தி பருவ’ அத்தியாய வரிகளை மேற்கோள் காட்டி, வரி விதிப்பு குறித்து நிர்மலா சீதாராமன் பேசினார். 


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண