நாடாளுமன்றத்தின்  பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31ஆம் தேதி தொடங்கியது. ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத் தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். இதைத் தொடர்ந்து இன்று மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். 


இந்நிலையில் மத்திய பட்ஜெட் தயாரிப்பு முதல் தாக்கல் ஆவது வரை என்னென்ன நடைபெறும்?


மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சகத்திலுள்ள பொருளாதார விவகாரங்கள் துறையின் பட்ஜெட் பிரிவு தயார் செய்யும். இந்தப் பிரிவு பட்ஜெட் தயாரிப்பதற்கு முன்பாக ஒவ்வொரு மத்திய அமைச்சகத்திடம் தங்களுடைய அடுத்த ஆண்டு தேவை தொடர்பாக ஒரு கோரிக்கையை வைக்கும். அந்தக் கோரிக்கைக்கு மத்திய அமைச்சகங்கள் தங்களுடைய பதிலை அனுப்பும். அதன்பின்னர் இந்த துறைகளின் கோரிக்கையை பரிசீலித்து பட்ஜெட் பிரிவு விரிவாக ஒரு துறை மாணிய கோரிக்கையாக தயாரிக்கும். 


அத்துடன் மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் அதற்கான செலவினங்கள் ஒதுக்கீட்டு ஆகியவை தொடர்பாகவும் பட்ஜெட் அறிக்கையில் தயாரிக்கும். இதைத் தொடர்ந்து மத்திய பட்ஜெட் உரை கடைசியாக தயாரிக்கப்படும். இவை அனைத்தும் முடிந்த பிறகு மத்திய பட்ஜெட்டை அச்சடிக்கும் நிகழ்வு நடைபெறும். இந்த நிகழ்வை மத்திய நிதியமைச்சர் அல்வா கிண்டி தொடங்கி வைப்பார். பட்ஜெட் ஆவணம் மிகவும் முக்கியமானது என்பதால் இதை அச்சடிக்கும் பணியில் ஈடுபடுபவர்கள் அனைவரும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் வரை வெளியே செல்ல முடியாது. 


பட்ஜெட் அச்சிடப்பட்ட பிறகு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும். நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்படும். அதன்பின்னர் குடியரசுத் தலைவரை சந்தித்து நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்ய நிதியமைச்சர் ஒப்புதல் பெறுவார். அதன்பின்னர் மக்களவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். 




நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு சில நாட்கள் நாடாளுமன்றம் கூட்டம் நடைபெறும். அதன்பின்னர் நாடாளுமன்ற கூட்டம் சில நாட்கள் ஒத்திவைக்கப்படும். அப்போது துறை ரீதியிலாக நாடாளுமன்ற நிலைக்குழு ஒவ்வொரு துறையின் மாணிய கோரிக்கை மீது விவாதம் நடத்தும். அந்த அறிக்கை மீண்டும் நாடாளுமன்றம்  கூடிய பிறகு விவாதிக்கப்படும். கடைசியாக ஒவ்வொரு துறை ரீதியிலான கோரிக்கைகள் மக்களவையில் நிறைவேற்றப்படும். அதன்பின்னர் ஃபைனாஸ் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். இத்துடன் மத்திய பட்ஜெட் முழுமையாக நிறைவேற்றப்படும். 


1924ஆம் ஆண்டு ஏக்வோர் குழுவின் பரிந்துரையின் பெயரில் மத்திய பட்ஜெட்டில் இருந்து ரயில்வே பட்ஜெட் பிரிக்கப்பட்டது. 2017ஆம் ஆண்டு வரை மத்திய பட்ஜெட் மற்றும் ரயில்வே பட்ஜெட் தனித் தனியாக தாக்கல் செய்யப்பட்டது. 2017ஆம் ஆண்டு முதல் மத்திய பட்ஜெட் உடன் ரயில்வே பட்ஜெட் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.