மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் 2022-23ஆம் ஆண்டுக்கான யூனியன் பட்ஜெட்டை அறிவித்தார். இதுவரை வாசிக்கப்பட்ட பட்ஜெட் உரைகளிலேயே குறைந்த நேரம் கொண்ட உரையாக, நிர்மலா சீதாராமன் சுமார் 92 நிமிடங்கள் உரையாற்றினார். 


பல்வேறு துறைகளின் வளர்ச்சி சதவிகிதம் குறித்து பேசிய நிதியமைச்சர், மொத்தமாக இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 9.2 சதவிகிதமாக இருப்பதாகக் கூறியுள்ளார். இது தற்போதைய நிதியாண்டில் உலகத்திலேயே அதிகமான விகிதங்களுள் ஒன்று. 


வரும் ஏப்ரல் 1 முதல் கடந்த ஆண்டை விட இந்திய ஆண்டில் இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் விலை உயரும் எனவும், சில பொருள்களில் விலை குறையும் எனவும் கூறியுள்ளார். மேலும், வரும் நிதியாண்டில் துணிகளின் விலை குறையும் எனக் கூறியுள்ளார். 


2022ஆம் ஆண்டின் யூனியன் பட்ஜெட்டில் எந்தெந்த பொருள்களின் விலை உயரும்? எந்தெந்த பொருள்களின் விலை குறையும்? இதோ முழுப் பட்டியல்...



விலை குறையும் பொருள்கள்:


துணிகள்
ரத்தினக் கற்கள், வைரம்
மொபைல் ஃபோன்கள்
மொபைல் ஃபோன் சார்ஜர்கள்
மொபைல் ஃபோனின் கேமரா லென்ஸ்
கோகோ பீன்ஸ்
பெருங்காயம்
அசிடிக் அமிலம்
பெட்ரோல் சார்ந்த பொருள்களுக்குத் தேவையான வேதிப்பொருள்களின் மீதான சுங்க வரி
மெத்தனால் உள்ளிட்ட வேதிப்பொருள்களின் மீதான சுங்க வரி
இரும்பு ஸ்க்ராப் மீதான சுங்க வரி


விலை அதிகரிக்கவுள்ள பொருள்கள்:


அனைத்து இறக்குமதி பொருள்கள்
எலக்ட்ரானிக் பொம்மைகளின் பாகங்கள்
கவரிங் நகைகள்
குடைகள் மீதான சுங்க வரி அதிகரிப்பு
லவுட்ஸ்பீக்கர்கள்
சோலார் செல்கள்
எக்ஸ் ரே இயந்திரங்கள்



மத்திய அரசின் பட்ஜெட் அறிக்கை குறித்தும், மொபைல் ஃபோன் விலை குறைவு குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார் மொபைல் ஃபோன் விநியோகிக்கும் நிறுவனமான `உபான்’ நிர்வாக இயக்குநர் மந்தீப் அரோரா. அவர் `எலக்ட்ரானிக் பொருள்கள், செல்ஃபோன் பாகங்கள் மீதான வரியை மத்திய அரசு இந்த ஆண்டு பட்ஜெட்டில் குறைத்துள்ளது. இது உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் முயற்சியாக தெரிகிறது. மேலும், இதனால் செல்ஃபோன், சார்ஜர் முதலானவற்றின் விலை குறையும்’ எனக் கூறியுள்ளார்.


யூனியன் பட்ஜெட்டைத் தாக்கல் செய்த போது, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தியப் பொருளாதாரத்தின் விரைவான வளர்ச்சிக்குக் காரணம் இந்தியாவின் எதிர்ப்புத் திறன் எனக் கூறியுள்ளார். மேலும், இந்த ஆண்டின் பட்ஜெட்டில் வருமான வரி குறைவு குறித்த அறிவிப்புகள் வெளியாகவில்லை. எனினும் ஒரு ஆண்டின் மதிப்பீட்டை சரிசெய்வதற்கான வாய்ப்பை இரண்டு ஆண்டுகளுக்கு உயர்த்தியுள்ளது மத்திய அரசு. 


இந்த பட்ஜெட்டில் வரியை எளிதாக செலுத்துவது, டிஜிட்டல்மயமாக்கல், கிராமப் பொருளாதாரம் முதலான விவகாரங்கள் கவனம் செலுத்தப்பட்டுள்ளன.