தனது இரண்டாவது பட்ஜெட் உரைக்காகத் தயாராகிக் கொண்டிருக்கிறார் தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். மாநிலத்தின் வருவாய் பிரச்னையை சரிசெய்து மாநிலப் பொருளாதாரத்தை மீண்டும் அதன் வழக்கமான பாதைக்குள் கொண்டு வர முயன்று வரும் அவர் நிதித்துறையின் நிர்வாக மாடலை மாற்றியிருப்பதாகவும் அது குறித்த அறிவிப்புகள் அறிவிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 


`தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆங்கில இதழுக்குத் தமிழ்நாடு மாநில நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அளித்துள்ள நேர்காணலில் அவர் பேசியதில் இருந்து சிலவற்றை இங்கே கொடுத்துள்ளோம்...  


தமிழ்நாட்டின் மாநில வருவாய் பிரச்னையை எவ்வாறு சரிசெய்ய இருக்கிறீர்கள்? மாநில வரிகளில் ஏற்றம் இருக்குமா?


நமது பொருளாதாரத்திற்கேற்ற விகிதத்தில் நமது வருவாய் இருப்பதில்லை. வணிக வரி, சுரங்க வரி, மது அமலாக்க வரி முதலானவற்றில் இருந்து நமக்கு வருவாய் கிடைப்பதில்லை. டாஸ்மாக் நிர்வாகத்தில் சுமார் 50 சதவிகித வருவாய்க் குறைவும், வணிக வரியில் சுமார் 50 சதவிகித வருவாய்க் குறைவும் ஏறட்டிருக்கின்றன. இங்கு நிர்வாகப் பிரச்னைகள் இருக்கின்றன. அதனை சரிசெய்ய ஏற்கனவே சில திட்டங்களை அறிவித்திருக்கிறோம். பட்ஜெட்டிலும் சிலவற்றை அறிவிப்போம். 



இந்தக் கசிவுகளை எப்படி சரிசெய்ய போகிறீர்கள்? 


அமலாக்கத்துறையின் கண்காணிப்புக்கு வெளியே அதிகளவில் மது புழங்குகிறது. அதனைத் தடுக்க புதிய தொழில்நுட்பங்களையும், சில நிர்வாக முறைகளையும் அடிப்படையில் இருந்து மாற்ற வேண்டும். இதைப் போல அரசின் நிர்வாகத்திலும் நிதி ஒதுக்கத் தொடங்கியுள்ளோம். ஒரே இரவில் அவை மாறாது. கடந்த ஆண்டு பெருந்தொற்று, கனமழை காரணமாக இவற்றை அமல்படுத்த முடியவில்லை. அடுத்த ஆண்டில் மாற்றங்களை எதிர்பார்க்கலாம். 


கடந்த 10 மாதங்களாக உங்கள் ஆட்சியின் செயல்திறன் மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கிறதா?


மாநிலப் பொருளாதாரம் தவறான திசையில் சென்று கொண்டிருந்தது. அதனை நிறுத்தியுள்ளோம். மேலும், தொடக்க காலமான 10 மாதங்களில் பல்வேறு இடையூறுகள் இருந்தன. கொரோனா தொற்றின் இரண்டாம் அலை முதல் அலையை விட அதிகமாக இருந்தது. நாங்கள் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்திருந்தோம். எங்கள் அமைச்சரவையின் பெரும்பாலானோர் புதியவர்கள். நாங்கள் அனைவரும் கற்றுக் கொண்டு முன்னேறி வருகிறோம். மொத்தமாக நான் திருப்தியடைந்திருக்கிறேண். எனினும் இத்தனை பிரச்னைகளுக்கு நடுவில் சிறப்பாக வளர்ந்திருக்கிறோம். சிறப்பாக, வேறு விதமான ஆட்சியைத் தருவோம் என நம்புகிறேன். 


அடுத்த கட்ட திட்டங்கள் என்ன?


சில புதிய விவகாரங்களில் கவனம் செலுத்துகிறோம். கட்டமைப்புக்கான நிதி, முதலீடுகளைப் பெருக்குவது, பொதுத்துறை நிறுவனங்களின் மேலாண்மையில் கூடுதல் கவனம், நிர்வாகத்தை மேம்படுத்துவது, வருவாய் அதிகரிப்பது, கடன் தொகையைக் குறைப்பது முதலானவற்றில் கவனம் செலுத்தி வருகிறோம். ஆனால் விரைவில் எவ்வளவு வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறோம், எப்படி மாநில் வட்டியைக் குறைக்கிறோம், எப்படி புதிய முதலீட்டாளர்களைக் கொண்டு வருகிறோம் என்பதை நீங்கள் பார்க்கலாம். 



கடந்த சில ஆண்டுகளில் மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகள் தமிழ்நாட்டில் என்ன விளைவுகளை ஏற்படுத்தியிருக்கின்றன?


தேசிய அளவில் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்புகள் உருவாக்கம் முதலானவை கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக குறைந்து வருகின்றன. நாட்டின் மொத்த வருவாய் விகிதத்தைக் கணிக்கும் மாடலை பாஜகவினர் மாற்ற முயன்றதோடு, அதனைத் தொடர்ந்து மீண்டும் மீண்டும் மாற்றி வருகின்றனர். இதனால் விளைவுகள் மோசமாக ஏற்படுகின்றன. புதிதாக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்குப் பதிலாக இழக்கப்பட்டிருக்கின்றன. எனவே இது பொருளாதாரக் கொள்கையின் தோல்வியைக் காட்டுகிறது. 


2022ஆம் ஆண்டுக்கான யூனியன் பட்ஜெட் பற்றிய உங்கள் கருத்து என்ன?


சில நல்லவை இருந்தாலும், அதிகமாக நல்லவை அல்லாத விஷயங்கள் இருக்கின்றன. பட்ஜெட்டை ஆங்கிலத்தில் படித்தது நல்வாய்ப்பாஅ அமைந்தது. இது முதலீட்டாளர்களை ஈர்க்கும். எலக்ட்ரிக் வாகனத் துறையில் அறிவிக்கப்பட்டுள்ள மாற்றங்கள் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்பதில் மகிழ்ச்சி. 


ஆனால் இது பணக்காரர்களின் பட்ஜெட்டாக இருப்பது கவலை தருகிறது. இதில் ஏழை, நடுத்தர மக்கள் மீதான கவனம் இல்லை. பள்ளிக்கல்வி என்பது மாநிலப்பட்டியலில் இருப்பது. தொலைதூரக் கல்வியின் வரம்புகளை உணராமல் ஏன் நாட்டின் ஒவ்வொரு பள்ளிக்கும் தொலைகாட்சி மூலமாக ஒளிபரப்புகளைத் தொடங்கும் திட்டம்? `ஒரே தேசம் ஒரே தொலைக்காட்சி’ என்ற பெயரில், 2000 ஆண்டுகளுக்கு முன்னால் இதய மாற்று அறுவை சிகிச்சைகள் நடைபெற்றன என்று முட்டாள்தனத்தைப் பரப்பவா? 


இதைப் போலவே `ஒரே நாடு, ஒரே பதிவு’ திட்டமும் மோசமானது. அது பணமதிப்பு நீக்கலைச் சிறிய பிரச்னையாக ஒப்பீட்டளவில் கருதச் செய்வதாக இருக்கப் போகிறது.