மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு பெண்களின் வளர்ச்சிக்கென ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதை எதிரொலிக்கும் விதமான, பட்ஜெட்டிலும் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. அவற்றை இங்கே காணலாம்.


விடியல் பயணம் திட்டத்திற்கு ரூ.3,600 கோடி ஒதுக்கீடு


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதவியேற்றபோது கையெழுத்திட்ட முதல் 5 கோப்புகளில், மகளிர் கட்டணமில்லாமல் பேருந்தில் பயணம் செய்யும் ‘விடியல் பயணம்‘ திட்டமும் ஒன்று. தமிழ்நாட்டு பெண்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ள இந்த திட்டதின் மூலம், பேருந்து பயணம் செய்வோரில், பெண்களின் சதவீதம் 40-லிருந்து 65 சதவீதமாக உயர்ந்துள்ளதாக, பட்ஜெட் உரையின்போது தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.


இத்திட்டத்தினால், பெண்கள் சராசரியாக மாதம் ஒன்றிற்கு ரூ.888 சேமிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த 2025-26-ம் ஆண்டிற்கு, இத்திட்டத்திற்காக பட்ஜெட்டில் ரூ.3,600 கோடி ஒதுக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.


கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு ரூ.13,807 கோடி


மகளில் நலத்திட்டங்களுக்கெல்லாம் மகுடம் வைத்தது போல் அறிவிக்கப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாதமும் 1 கோடியே 15 லட்சம் குடும்பத் தலைவிகள் பயனடைந்து வருகிறார்கள். இதுவரை மகளிர் உரிமைத் தொகை பெறாத தகுதிவாய்ந்த இல்லத்தரசிகள், இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரைவில் உரிய வாய்ப்பு வழங்கப்படும் என பட்ஜெட் உரையின்போது நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.


மேலும், இந்த பட்ஜெட்டில், இத்திட்டத்திற்கென ரூ.13,807 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.


புதுமைப்பெண் திட்டத்திற்கு ரூ.420 கோடி ஒதுக்கீடு


ஏழைக் குடும்ப மாணவிகள் உயர்கல்வி பயில்வதை உறுதி செய்யும் வகையில் கொண்டுவரப்பட்ட திட்டம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைப் பெண் திட்டம். இதன் கீழ் தற்போது 4 லட்சத்து 6 ஆயிரம் மாணவியர் மாதம் தோறும் ரூ.1000 பெற்று பயனடைந்து வருகின்றனர்.


இத்திட்டத்தால், உயர்கல்வியில் சேரும் மாணவியரின் எண்ணிக்கை 19% அதிகரித்து, சென்ற கல்வியாண்டில் கூடுதலாக 40,276 மாணவிகள் கல்லூரிகளில் சேர்ந்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு. இதைத் தொடர்ந்து, இத்திட்டத்தை செயல்படுத்த 2025-26 பட்ஜெட்டில், ரூ.420 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்தார்.


சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.37,000 கோடி வங்கிக்கடன் வழங்க இலக்கு


சுய உதவிக் குழுக்கள் பெண்களின் வாழ்வை மேம்படுத்தும் ஒரு சிறந்த திட்டமாக உருவெடுத்துள்ளது. மகளிரிடையே சேமிப்பு பழக்கத்தை ஊக்குவித்து, அவர்களை தொழில் முனைவோராக்கி, சமூகத்தில் பெண்களுக்கு உரிய இடத்தை உறுதி செய்யும் நோக்கில் செயல்படும் இத்திட்டத்தால், தற்போது 4.76 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் இயங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதில் இதுவரை இணையாதவர்கள் மற்றும் விளிம்புநிலை குடும்ப உறுப்பினர்களை கொண்டு, வரும் நிதியாண்டில், 10,000 புதிய சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் நிதியாண்டில், சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.37,000 கோடி அளவிற்கு வங்கிக் கடன் வழங்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.


மேலும், ரூ.10 லட்சம் மதிப்பில் வாங்கப்படும் வீடு, நிலம், விவசாய நிலம் போன்றவை, பெண்களின் பெயரில் பதிவு செய்யப்பட்டால், அதற்கு பதிவுக் கட்டணத்தில் 1 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேபோல், 20 சதவீத மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. பெண் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில், தொடங்கப்படும் இத்திட்டத்தால், 1 லட்சம் பெண்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ரு.77 கோடியில் மேலும் 10 இடங்களில் ‘தோழி‘ பணிபுரியும் மகளிர் விடுதிகள்


தமிழ்நாட்டில், பணிபுரியும் பெண்களுக்காக அரசால் உருவாக்கப்பட்ட தோழி விடுதிகள், தாம்பரம், திருச்சி உள்ளிட்ட 13 இடங்களில் செயல்பட்டுவருகின்றன. அதன் மூலம், 1,303 மகளிர் பயனடைந்து வருகின்றனர்.


இந்நிலையில், வரும் நிதியாண்டில், காஞ்சிபுரம், ஈரோடு, கரூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 10 இடங்களில், 800 பெண்கள் பயன்பெறும் வகையில், ரூ.77 கோடியல் மதிப்பீட்டில் தோழி விடுதிகள் கட்டப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டம்தோறும் தோழி விடுதிகளை அமைக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


சென்னை, கோவை, மதுரையில் ரூ.275 கோடியில் 3 மாணவியர் விடுதிகள்


அதோடு, குக்கிராமங்களிலிருந்து உயர்கல்வி பயில பெருநகரங்களுக்கு வரும் மகளிருக்காக, வரும் நிதியாண்டில், சென்னை, கோவை மற்றும் மதுரையில், தலா 1000 மாணவிகள் தங்கும் வகையில், நவீன வசதிகளுடன் கூடிய மாணவியர் விடுதிகள் ரூ.275 கோடியில் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனத்தால் பராமரிக்கப்படவிருக்கும் இந்த விடுதிகளில், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் சிறுபாண்மை மாணவர்கள் சேர்க்கைக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மூன்றாம் பாலினத்தவர்களுக்கு விரிவுபடுத்தப்படும் புதுமைப் பெண், தமிழ் புதல்வன் திட்டங்கள்


மூன்றாம் பாலினத்தவர்களின் நல்வாழ்விற்காக, அவர்கள் உயர்கல்வி பயில்வதை ஊக்குவிக்க, புதுமைப் பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டங்களின் கீழ் மாதம்தோறும் வழங்கப்படும் ரூ.1000 உதவித் தொகை இவர்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், மூன்றாம் பாலினத்தவர்களின் கண்ணியமாக வாழ்வை உறுதி செய்யும் வகையில், போக்குவரத்து மேலாண்மை, திருவிழாக் காலங்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவது போன்ற பணிகளில் ஈடுபட உரிய பயிற்சிகள் வழங்கி, ஊர்க்காவல் படையில் அவர்கள் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன் முதற்கட்டமாக, 50 மூன்றாம் பாலினத்தவர்களைக் கொண்டு, சென்னை, தாம்பரம், ஆவடி மாநகரங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பணிபுரிபவர்களுக்கு மதிப்பூதியம், பயிற்சி மற்றும் சீருடை போன்றவை ஊர்க்காவல் படையினருக்கு சமமான வகையில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இப்படி, மகளிருக்காக ஏராளமான திட்டங்களை, பல கோடி ரூபாயில் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருவதும், அதற்காக நிதி ஒதுக்கீடு செய்வதும், பெண்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.