அனைத்து நகர் புறங்களிலும் சாலைகளை மேம்படுத்த ரூ.3,700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2025- 2026ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதில் சாலை மேம்பாட்டுக்கு நிதியை ஒதுக்கி அறிவிப்பு வெளியிட்டார்.

அதன்படி அனைத்து நகர் புறங்களிலும் சாலைகளை மேம்படுத்த ரூ.3,700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

அதேபோல், நகர் பகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு மேம்பாடு கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ. 2000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

570 கிலோமீட்டர் சாலைகள் 486 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னையில், 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோயம்புத்தூரிலும் 130 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மதுரை பகுதியிலும் சாலை பணிகள் மேற்கொள்ளப்படும்.

வேளச்சேரி, கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் வேளச்சேரி சந்திப்பு முதல் குருநானக் கல்லூரி வரை 3 கி.மீ தூரத்துக்கு ஒரு மேம்பாலம் அமைக்கப்படும். இந்த பாலம் 310 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 6100 கி.மீ நீளத்தில் ரூ.2,200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் கடைக்கோடி குக்கிராமங்களையும் சென்றடையும் வகையில் தரமான சாலை வசதிகளை உருவாக்கிடும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2025-26 ஆம் ஆண்டு 6,100 கிலோமீட்டர் நீளமுள்ள கிராமச் சாலைகள் 2,200 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும். மேலும், கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளின் தொடர் பராமரிப்பிற்கென ஒவ்வொரு ஆண்டும் மாநில நிதிக் குழு மானியத்திலிருந்து உரிய நிதி ஒதுக்கிட முடிவு செய்து 2025-26 ஆம் ஆண்டிற்கு 120 கோடி ரூபாய் விடுவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.