தமிழ்நாட்டின் பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார். பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் புதியதாக தோழி விடுதிகள் மற்றும் மூன்று மாணவியர் விடுதிகள் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


தோழி விடுதிகள்


தமிழ்நாட்டின் முத்திரை பதிக்கும் திட்டங்களில் ஒன்றான 'தோழி' பணிபுரியும் மகளிர் விடுதிகள் ஏற்கெனவே தாம்பரம், திருச்சி உள்ளிட்ட 13 இடங்களில் 1,303 மகளிர் பயன்பெறும் வகையில் வெற்றிகரமாக இயங்கி வருகின்றன. 


10 இடங்களில் அமைக்கப்படுகிறது


எதிர்வரும் நிதியாண்டில், காஞ்சிபுரம், ஈரோடு, கரூர் மற்றும் இராணிப்பேட்டை உள்ளிட்ட மேலும் 10 இடங்களில் 700 பெண்கள் பயன்பெறும் வகையில் 77 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். 


பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பினை உறுதிசெய்திடும் நோக்கத்துடன், நாட்டிற்கே வழிகாட்டும் வகையில், மாவட்டந்தோறும் தோழி விடுதிகள் அமைக்கப்படும் என்ற இலக்கை நோக்கி தமிழ்நாடு வெற்றிகரமாகச் சென்று கொண்டிருக்கிறது எனவும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.


மாணவியர் விடுதி


தமிழ்நாட்டில் கிராமங்களில் இருந்து மாணவிகள் உயர்கல்வி கனவை நினைவாக்கிடும் வகையில், பெருநகரங்களுக்கு வரும்போது தரமான மற்றும் பாதுகாப்பான விடுதி வசதிகளை தேவையை அரசு உணர்ந்துள்ளது. எனவே சென்னை, கோவை, மதுரை ஆகிய மாநகரங்களில் தலா 1000 மாணவிகள் தங்கும் வகையில் அனைத்து நவீன வசதிகளும் செய்யப்பட்ட விடுதிகள் கட்டப்பட்ட உள்ளது. 775 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மூன்று மாணவியர் விடுதிகள் அமைக்கப்பட உள்ளது.


மாணவியர் விடுதி யார் யாருக்கு முன்னுரிமை கிடைக்கும்?


பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையின மாணவர்களுக்கு உரிய முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.