கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி, ஆறு உறுப்பினர்கள் கொண்ட நாணய கொள்கை குழு கூட்டம் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நடைபெற்றது. அப்போது, பணவீக்கத்தை கட்டுப்படுத்த குறுகிய கால வட்டி விகிதமான ரெப்போ தொடர்ந்து மூன்றாவது முறையாக 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்பட்டு 5.9 விழுக்காடாக நிர்ணயிக்கப்பட்டது.
நாணய கொள்கை குழு உறுப்பினர்களில் ஒருவரான அஷிமா கோயல், 35 அடிப்படை புள்ளிகள் உயர்வுக்கு ஆதரவளித்த நிலையில், மற்ற ஐந்து உறுப்பினர்களும் ரெப்போ விகிதத்தில் 50 அடிப்படை புள்ளிகள் அதிகரிப்புக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். முன்னதாக, மே மேதம் நடைபெற்ற கூட்டத்தில், 40 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்பட்டது.
அப்போது பேசிய சக்திகாந்த தாஸ், புவிசார் அரசியல் கொந்தளிப்புக்கு மத்தியிலும் இந்தாண்டு, வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியாவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்திருந்தார். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ரிசர்வ் வங்கி
நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தது.
"கலவையான சமிக்ஞைகள் இருந்தபோதிலும், பொருளாதார நடவடிக்கைகள் சீராக மேம்பட்டன. உயர் அதிர்வெண் குறிகாட்டிகள் செயல்பாட்டில் தொடர்ந்து வேகத்தைக் காட்டுகின்றன. உலகளாவிய காரணிகள் வெளிப்புற தேவைக்கு அழுத்தம் கொடுக்கின்றன. 2022-23க்கான 7.0 சதவீத வளர்ச்சிக் கணிப்பு, பரந்த அளவில் சமநிலையான அபாயங்களைக் கொண்டுள்ளது.
வெளிவரும் சூழ்நிலை எதுவாக இருந்தாலும், உலகில் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என சக்திகாந்த தாஸ் பேசியதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநரும் நாணய கொள்கை குழு உறுப்பினருமான தேபப்ரதா பத்ரா பேசுகையில், "புதிய வளர்ச்சி பாதைக்கு வழிவகுத்து பொருளாதாரத்தை சீர் செய்வதற்கான பங்கினை நாணய கொள்கை குழு செய்ய வேண்டும. இலக்குடன் பணவீக்கத்தை சீரமைப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
இந்தச் சூழலில், பணவீக்கக் கொள்கை நடவடிக்கைகளின் மூலம் நிதி ஒதுக்கப்படுவது பணவீக்க எதிர்பார்ப்புகளை உறுதியாக நிலைநிறுத்தலாம். விநியோகத்திற்கு எதிராக தேவையை சமநிலைப்படுத்தலாம், இதனால் பணவீக்க அழுத்தங்கள் எளிதாகும்" என்றார்.
சில்லறை பணவீக்கம் 4 சதவீதமாக இருப்பதை உறுதி செய்ய பணிக்கப்பட்ட ரிசர்வ் வங்கி, தொடர்ந்து மூன்று காலாண்டுகளாக இலக்கை அடையத் தவறியதால், இப்போது இது தொடர்பாக அரசாங்கத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டியிருக்கிறது.