பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மோடி தலைமையிலான அரசு, மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்ததை தொடர்ந்து முதல்முறையாக தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் என்பதால் இதற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.


கூட்டணி கட்சிகளுக்கு அதிக நிதி: ஆனால், பீகார், ஆந்திர மாநிலங்களுக்கு மட்டுமே பட்ஜெட்டில் அதிக தொகை ஒதுக்கப்பட்டிருப்பது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. மக்களவை தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு பாஜக ஆட்சி நடத்தி வருகிறது.


அந்த வகையில், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆகியோரின் ஆதரவு மத்தியில் ஆட்சி நடத்தி வரும் பாஜகவுக்கு தேவைப்படுகிறது. எனவே, கூட்டணி கட்சிகளை சந்தோஷப்படுத்த அவர்கள் ஆளும் மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது.


இந்த நிலையில், மத்திய பட்ஜெட்டை அரியணையை காப்பாற்றுவதற்கான பட்ஜெட் என கடுமையாக விமர்சித்துள்ளார் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி. இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் குறிப்பிடுகையில், "கூட்டணி கட்சிகளை சமாதானப்படுத்துதல்: மற்ற மாநிலங்களுக்கு தீங்கு விளைவித்துவிட்டு வெற்று வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளது.


ராகுல் காந்தி விமர்சனம்: குரோனி முதலாளிகளை சமாதானப்படுத்துதல்: AAகளுக்கு (அதானி, அம்பானி) பலன்களை தந்துவிட்டு, சாமானிய இந்தியருக்கு எந்த நிவாரணமும் அறிவிக்கவில்லை.


 






காபி பேஸ்ட்: முந்தைய பட்ஜெட்டையும் காங்கிரஸ் வாக்குறுதிகளையும் காப்பி அடித்து வைத்துள்ளனர்" என பதிவிட்டுள்ளார். 


மத்திய பட்ஜெட் குறித்து பேசிய பிரதமர் மோடி, "இந்த பட்ஜெட் சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் அதிகாரம் அளிக்கும். கிராமம், ஏழை மற்றும் விவசாயிகள் பயனடைவார்கள். இது கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுக்கு புதிய உச்சம் தரும். மேலும் இளைஞர்களுக்கு புதிய வழிகளைத் திறக்கும். இந்த பட்ஜெட் நடுத்தர மக்களுக்கு புதிய பலத்தை கொடுக்கும்" என்றார்.