புதுச்சேரி: புதுச்சேரியில் வழக்கமாக மார்ச் மாதம் சட்டபேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். கடந்த 12 ஆண்டாக பல்வேறு இடையூறுகளால் மார்ச் மாதம் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. இடைக்கால பட்ஜெட்தான் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் இந்த நிதியாண்டில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய முதல்வர் ரங்கசாமி நடவடிக்கை எடுத்தார். கடந்த மாதம் ஆளுநர் தமிழிசை தலைமையில் திட்டக்குழு கூடி 2023-24-ம் ஆண்டுக்கு பட்ஜெட் தொகையாக ரூ.11 ஆயிரத்து 600 கோடியை நிர்ணயம் செய்தது. இதற்கான அனுமதிகோரி கோப்பு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 


கடந்த 3-ந் தேதி புதுவை சட்டபேரவையின் குளிர்கால கூட்டம் நடந்தது. தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற மார்ச் 9-ந் தேதி காலை 9.45 மணிக்கு கூடுகிறது. அன்றைய தினம் ஆளுநர் தமிழிசை உரையாற்றுகிறார். தொடர்ந்து 2 நாட்கள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடக்கிறது. 13-ந் தேதி காலை 9.45 மணிக்கு நிதி பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி, முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்த தகவலை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தெரிவித்தார். ஆளுநர் உரைக்கு பிறகு சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு கூடி எத்தனை நாட்கள் சபையை நடத்துவது என முடிவு செய்யும். சட்டசபை நீண்டநாட்கள் நடைபெறும். வித்தியாசமான சட்டமன்றமாக இருக்கும். 10 சதவீத அரசு அதிகாரிகள் அரசுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என கூறிவந்தேன். 


அதேநிலை தற்போதும் நீடிக்கிறது. இத்தகைய அதிகாரிகளுக்கு சட்டசபையில் உரிய தண்டனை அளிக்கப்படும். திட்டங்களை கெடுப்பது உள்ளூர் பி.சி.எஸ். அதிகாரிகள்தான். அவர்கள் திட்டங்களுக்கான கோப்புகளில் எதிர்மறையான கருத்துகளை எழுதுகின்றனர். இத்தகைய அதிகாரிகளுக்கு சட்டபேரவையில் தண்டனை அளிக்கப்படும். 3 அரசு துறைகள் 50 சதவீதத்துக்கும் குறைவாக பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதியை செலவு செய்துள்ளனர். அவர்களிடம் விளக்கம் கேட்டுள்ளோம். மார்ச் மாதம் இறுதிக்குள் நிதியை முழுமையாக செலவு செய்வதாக உறுதியளித்துள்ளனர். சிறப்புக்கூறு நிதியும் முழுமையாக செலவிடவில்லை. இதையும் செலவு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம் என அவர் கூறினார்.