நடப்பு நிதியாண்டில் கடந்த 10ம் தேதி வரையில், 15.67 லட்சம் கோடி ரூபாய் நேரடி வரி வருவாயாக கிடைத்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த 10ம் தேதி வரையிலான நேரடி வரி வசூல், கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தின் மொத்த வசூலை விட 24.09 சதவிகிதம் அதிகமாகும்.
15.67 லட்சம் கோடி வரி வருவாய்:
அந்த அறிக்கையில், ”வரி செலுத்துவோருக்கு திருப்பி அளிக்கப்பட்ட நிகர தொகை போக கிடைத்த நேரடி வரி வசூல் 12.98 லட்சம் கோடி ரூபாய். இது கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தின் நிகர வசூலை விட 18.40 சதவிகிதம் அதிகம். இந்த வரி வருவாய்த் தொகையானது, 2022-23 நிதியாண்டிற்கான நேரடி வரிகளின் மொத்த பட்ஜெட் மதிப்பீட்டில் 91.39 சதவிகிதம். அதோடு, 2022-23ம் நிதி ஆண்டிற்கான நேரடி வரிகளின் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் இது 78.65 சதவிகிதத்தை பூர்த்தி செய்துள்ளது. ஏப்ரல் 1, 2022 முதல் பிப்ரவரி 10, 2023 வரை ரூ. 2.69 லட்சம் கோடி ரூபாய் திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் திருப்பி வழங்கப்பட்ட பணத்தை விட 61.58% அதிகம்.
17% வளர்ச்சிக்கு வாய்ப்பு:
2021-22 நிதியாண்டில் நேரடி வரி ரூ.14.08 லட்சம் கோடியாக இருந்ததைக் காட்டிலும், நடப்பு நிதியாண்டின் முடிவில் நேரடி வரி (வருமானம் மற்றும் கார்ப்பரேட் வரிகளை உள்ளடக்கியது) வருவாய் 17 சதவீதத்திற்கு மேல் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நடப்பு நிதியாண்டின் நேரடி வரி வருவாய் 14.20 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என கணிக்கப்பட்ட நிலையில், திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி அது 16.50 லட்சம் கோடியை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீரான வளர்ச்சி:
மொத்த வருவாய் அடிப்படையில் தனிநபர் வருமான வரி (பிஐடி) மற்றும் பெருநிறுவன வருமான வரி (சிஐடி) ஆகியவற்றின் வளர்ச்சி விகிதத்தைப் பொருத்தவரை, தனிநபர் வருமான வரியின் (பங்கு பரிவர்த்தனை வரியான எஸ்டிடி உட்பட) வளர்ச்சி விகிதம் 29.63 சதவிகிதம் ஆகவும், பெருநிறுவன வருமான வரி வளர்ச்சி விகிதம் 19.33 சதவிகிதம் ஆகவும் உயர்ந்துள்ளது.
வரி செலுத்துவோருக்குப் பணத்தைத் திருப்பி அளித்தல் தொடர்பான சரிசெய்தலுக்குப் பிறகு, தனிநபர் வருமான வரி வசூல் 21.93 சதவிகிதம் அளவிற்கும், எஸ்டிடி உள்ளிட்ட தனிநபர் வருமான வரி வளர்ச்சி 21.23 சதவிகிதம் அளவிற்கும் வளர்ச்சி கண்டுள்ளது. அதேநேரம், பெருநிறுவன வருமான வரி வசூலில் நிகர வளர்ச்சி 15.84 சதவிகிதம் ஆகவும் வளர்ச்சி பெற்றுள்ளது. பிப்ரவரி 10, 2023 வரையிலான நேரடி வரி வசூல்களின் தற்காலிக புள்ளிவிவரங்கள் தொடர்ந்து சீரான வளர்ச்சியைக் காட்டுகின்றன” என மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.