மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 ஆம் தேதி  2023 -24 ஆம் ஆண்டுக்கான  பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட்டானது, 2017 ஆம் ஆண்டில் ரயில்வே பட்ஜெட்டானது, மத்திய பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டதிலிருந்து ஆறாவது ஒருங்கிணைந்த பட்ஜெட்டாகும்.


அப்படியென்றால், இதற்கு முன்பு எப்படி இருந்தது என்பதை தெரிந்து கொள்வோம். அதற்கு முன்பு பட்ஜெட் என்றால் என்ன என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.


மத்திய பட்ஜெட்:


அடுத்த ஒரு கால ஆண்டுக்கு எவ்வளவு வருமானம் வரும் எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்பது குறித்தான அறிக்கையே பட்ஜெட் ஆகும். சில தருணங்களில் நீண்ட காலத்திற்கான திட்டத்துக்கும் நிதி ஒதுக்கப்படும்.


2023 ஆம் ஆண்டு பட்ஜெட் கூட்ட தொடரானது பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. பிப்ரவரி 1 ஆம் தேதி 2023- 24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா தாக்கல் செய்யவுள்ளார்.


பிரதமர் மோடி தலைமையிலான 5 வருட ஆட்சியின் கடைசி முழு பட்ஜெட்டாகும். அடுத்த வருடம் தேர்தல் நடைபெறவுள்ளதால் இடைக்காலத்துக்கான பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட வேண்டும் என்பது விதியாகும்.


92 வருட வரலாறு முடிவு:


2017 ஆம் ஆண்டுக்கு முன்பு ரயில்வே பட்ஜெட் மற்றும் பொது பட்ஜெட் என இரண்டு வகையாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. ரயில்வே பட்ஜெட்டை, ரயில்வே துறை அமைச்சர் தாக்கல் செய்வார். பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் தாக்கல் செய்வார்.


பிப்ரவரி 25, 2016 அன்று, சுரேஷ் பிரபு ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்த கடைசி ரயில்வே அமைச்சர் ஆவார் . அதைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டில், பிப்ரவரி 1, 2017 அன்று ரயில்வே மற்றும் பொது பட்ஜெட் இணைக்கப்பட்ட மத்திய அரசின் ஒருங்கிணைந்த பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல் நிதி அமைச்சர் என்ற பெருமையை அருண் ஜெட்லி பெற்றார்.


இதன் மூலம், 1924 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் தொடங்கிய தனி ரயில்வே மற்றும் மத்திய பட்ஜெட்டுகளின் 92 ஆண்டுகால நீண்ட வரலாறு முடிவுக்கு வந்தது.


பிபேக் தேப்ராய் குழு:


2015 ஆம் ஆண்டில், பொருளாதார நிபுணர் பிபேக் தேப்ராய் தலைமையிலான நிதி ஆயோக்கின் உயர்மட்ட குழு, தனி ரயில்வே பட்ஜெட் வைத்திருக்கும் நடைமுறையை கைவிட பரிந்துரைத்தது. இந்த அறிக்கை அப்போதைய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது, அவர் ரயில்வே பட்ஜெட்டை மத்திய பட்ஜெட்டுடன் இணைக்குமாறு அப்போதைய நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு கடிதம் எழுதினார். அதையடுத்து ரயில்வே பட்ஜெட்டானது பொது பட்ஜெட்டானது இணைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


ரயில்வே பட்ஜெட் இணைக்கப்பட்ட பிறகு மத்திய பட்ஜெட்டில் முக்கிய ரயில்வே அறிவிப்புகளின் சுருக்கம்:


2017 ஆம் ஆண்டில், அப்போதைய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி முதல் ஒருங்கிணைந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார், இது இந்திய ரயில்வேக்கு ஒரு மைல்கல் தருணமாகும். 1.3 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீட்டை ஜேட்லி


2019 பட்ஜெட்டில் ஒதுக்கீடு மேலும் ரூ .1.6 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டது. ரயில்வே வாரியத்தின் தலைவர், இயக்கம், உள்கட்டமைப்பு, வணிக மேம்பாடு மற்றும் நிதி ஆகியவற்றுக்கான உறுப்பினர்கள் உட்பட எட்டு உறுப்பினர்களில் இருந்து ஐந்து உறுப்பினர்களாக குறைக்கப்படுவதாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்தார்.


2020 பட்ஜெட்டில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ரயில்களை இயக்குவதற்கும் நெட்வொர்க்கில் நிலையங்களை மறுசீரமைப்பதற்கும் தனியார் நிறுவனங்களை அழைப்பதில் கவனம் செலுத்தினார். முக்கிய சுற்றுலா வழித்தடங்களில் அதிக தேஜஸ் எக்ஸ்பிரஸ் பாணி ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் 150 தனியார் ரயில்கள் சேவையில் சேர்க்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.


2021: கடந்த ஆண்டு, நிர்மலா சீதாராமன் இந்திய ரயில்வேக்கு ரூ .1.1 லட்சம் கோடியை ஒதுக்கினார், அதில் ரூ .1.07 லட்சம் கோடி மூலதன செலவினங்களுக்காக இருந்தது.


2022 : அடுத்த 3 ஆண்டுகளில் 400 புதிய வந்தே பாரத் ரயிலானது, இந்தியாவில் தயாரித்து இயக்கப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.