ரிசர்வ் வங்கி வெளியிடும் டிஜிட்டல் கரன்சி மீது வரி விதிக்கும் திட்டம் இல்லை எனக் கூறியுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சொத்துகளாக சேமிக்கப்பட்டுள்ள க்ரிப்டோகரன்சி மீது 30 சதவிகிதம் வரி விதிக்கப்படும் எனக் கூறியுள்ளார்.


`க்ரிப்டோகரன்சியாக இருந்தாலும், மத்திய வங்கியால் வெளியிடும் போது மட்டுமே அது கரன்சி என்று அழைக்கப்படும். நாம் க்ரிப்டோகரன்சி என்று அழைக்கப்படும் எதுவும் உண்மையான கரன்சி அல்ல’ என பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, டெல்லியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் சுட்டிக் காட்டியுள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். 


`ரிசர்வ் வங்கியால் இன்னும் வெளியிடாத கரன்சி மீது நாங்கள் வரி விதிக்கவில்லை. ரிசர்வ் வங்கி வெளியிடுவது டிஜிட்டல் கரன்சி ஆகும். அதனைத் தாண்டி, டிஜிட்டல் வடிவம் உள்பட மற்றவை அனைத்தும் தனிநபர்களால் உருவாக்கப்பட்ட சொத்துகள். இந்த சொத்துகளைப் பரிவர்த்தனையின் மூலம் லாபமான பெருக்கும் போது, அதன்மீது நாங்கள் 30 சதவிகித வரியை விதிக்கிறோம்’ என்றும் அவர் கூறியுள்ளார். 



மேலும் மத்திய அரசு க்ரிப்டோ பரிவர்த்தனைகளைக் கண்காணித்து வருவதாகவும், க்ரிப்டோ கரன்சி பரிவர்த்தனைகளின் மீது 1 சதவிகித TDS வரி விதிக்கப்படும் எனவும் மத்திய நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.


டிஜிட்டல் சொத்துகள் மீதான 30 சதவிகித வரி விதிப்பு மூலமாக தனிப்பட்ட க்ரிப்டோகரன்சி பரிவர்த்தனைகள் சட்டப்பூர்வமாக மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தனியார் டிஜிட்டல் கரன்சிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க, ரிசர்வ் வங்கி சார்பில் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படுகிறது. 


அடுத்த நிதியாண்டு முதல், பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் மூலமாக ரிசர்வ் வங்கி சார்பில் டிஜிட்டல் ரூபாய் வெளியிடப்படும் எனவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். டிஜிட்டல் கரன்சி வெளியிடுவதன் மூலம், குறைவான செலவிலும், வேகமாகவும் மத்திய அரசால் பணத்தை மேலாண்மை செய்ய முடியும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 


தனியார் க்ரிப்டோகரன்சிக்கு ஒழுங்குமுறையை வழங்கும் க்ரிப்டோகரன்சி மசோதா குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. 



க்ரிப்டோகரன்சியை ஒழுங்குமுறைப்படுத்துவது குறித்து கேள்வி எழுப்பிய போது, நிர்மலா சீதாராமன் இந்த விவகாரம் தொடர்பாக உறுதியான ஒழுங்குமுறைக் கொள்கையை வகுப்பதற்கு மத்திய அரசு பங்குதாரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார். மேலும், இதன் காரணமாக, க்ரிப்டோகரன்சி மூலமாக லாபம் ஈர்க்கும் தனிநபர்களின் மீது வரி விதிப்பதற்கு அரசு காத்துக் கொண்டிருக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். 


தனியார் க்ரிப்டோகரன்சிகளின் இந்திய முதலீட்டாளர்கள் இதுவரை சுமார் 45 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. தனியார் க்ரிப்டோகரன்சியால் பொருளாதார நிலையில் மாற்றம் ஏற்படுவதாக மத்திய அரசு தொடக்கம் முதலே, தனியார் க்ரிப்டோகரன்சியை எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.