Income Tax Rate Cuts: வாக்காளர்களிடையே நிலவும் எதிர்ப்புகளை தணிக்கும் நோக்கில், பல்வேறு வரிச்சலுகைகளை வழங்க மோடி தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மத்திய அரசின் விரிவான பட்ஜெட்:
பிரதமர் மோடி தலைமயிலான புதிய அரசாங்கத்தின் முதல் பட்ஜெட், வரும் ஜூலை 22 ஆம் தேதி நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக 18வது மக்களவை கூட்டத்தொடர் வரும் 24ம் தேதி தொடங்கி ஜூலை 03ம் தேதி வரை நடைபெற உள்ளது. அப்போது, புதிய மக்களவை உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமாணம், சபாநாயகர் தேர்தல், பொருளாதார ஆய்வறிக்கை சமர்ப்பிப்பு மற்றும் வேறு சில முக்கிய நிகழ்வுகள் நடைபெறும். மழைக்கால கூட்டத்தை ஜூலை 22ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9ம் தேதி வரை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அப்போது முழு அளவிலான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரிச் சலுகை வழங்க மத்திய அரசு ஆலோசனை:
நடந்து முடிந்த மக்களவை தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் பாஜக தனிப்பெரும்பான்மையை இழந்து, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. அதேநேரம், கடந்த 10 ஆண்டுகளாக பலவீனமாக இருந்த எதிர்க்கட்சிகள் இந்த முறை, மக்களவையில் அசுர பலத்தை பெற்றுள்ளன. வேலையில்லா திண்டாட்டம், வருமானம் வீழ்ச்சி, பணவீக்கம், வருமான ஏற்றத்தாழ்வு போன்றவற்றால் மோடி அரசுக்கு எதிர்ப்பு இருப்பதாகவும், அதனால்தான் அக்கட்சியின் வாக்குகள் குறைந்துள்ளதாகவும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதனால் மோடி 3.0 அரசுக்கு அதிக அழுத்தம் உள்ளது. எனவே, பொதுமக்களின் எதிர்ப்பைக் குறைக்கும் வகையிலான அறிவிப்புகள் பட்ஜெட்டில் வெளியிடப்படும் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக, தனிநபர் வருமான வரி செலுத்துவோருக்கு சலுகைகள் வழங்க வாய்ப்பு உள்ளது.
தனிநபர் வருமான வரி குறைப்பு?
மத்திய அரசின் பட்ஜெட் தொடர்பாக இரண்டு மூத்த மத்திய அரசு ஊழியர்களை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது . அதன்படி, “ஆண்டு வருமானம் ரூ. 15 லட்சத்துக்கு மேல் வரி செலுத்துவோருக்கு வருமான வரிச் சலுகை. தற்போதைய புதிய வரி விதிப்பில் மாற்றங்கள் இருக்கலாம். தற்போது, ஒரு நிதியாண்டில் ரூ. 15 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் 5% முதல் 20% வரை வரி செலுத்துகிறார்கள். ரூ. 15 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்கள் 30 சதவீதம் வரி செலுத்த வேண்டும். இந்த கட்டணங்களில் மாற்றங்கள் இருக்கலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, ரூ.10 லட்சம் என்ற ஆண்டு வருமானத்திற்கான வரி விகிதத்தை குறைக்கவும், புதிய வருமான வரி அடுக்குகளை முற்றிலுமாக மாற்றுவது குறித்தும் நிதித்துறையில் ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நுகர்வு திறனை அதிகரிக்க நடவடிக்கை:
வரி விகிதங்களைக் குறைப்பதால், மீதமுள்ள பணத்தை மக்கள் தங்கள் செலவினங்களுக்காக பயன்படுத்த முடியும். இதனால் நாட்டில் நுகர்வு அதிகரித்து, ஜி.எஸ்.டி. மூலம் பணம் மீண்டும் அரசு கருவூலத்துக்குச் செல்லும். மேலும், மக்களிடமிருந்து முதலீடுகளும் அதிகரிக்கும். இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்தாலும், நுகர்வு மிகவும் மெதுவாகவே உள்ளது. எனவே, தனிநபர் வருமான வரியை குறைக்கவும், நாட்டில் நுகர்வை ஊக்குவிக்கவும் நிதி அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.