Central Budget FY25: நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு கடந்த, கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.


ஜுலை 22ல் மத்திய அரசின் பட்ஜெட்? 


2024-25ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட் ஜூலை 22ஆம் தேதி, தாக்கல் செய்யபப்டும் என தகவல் வெளியாகியுள்ளது. வரவிருக்கும் பட்ஜெட் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. காரணம் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பொறுப்பேற்ற பின், அவரது நிர்வாகத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட உள்ள முழு பட்ஜெட் இதுவாகும். இதன் மூலம் புதிய அரசானது தனது அடுத்த 5 ஆண்டுகளுக்கான நிதிக் கொள்கையின் புதிய கட்டத்திற்குள் நுழைகிறது. அதன் காரணமாக, பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


இடைக்கால பட்ஜெட்:


மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த ஆண்டு பிப்ரவரியில் தாக்கல் செய்த,  பட்ஜெட்டானது  ஏப்ரல் மற்றும் மே 2024 க்கு இடையில் நடத்தப்பட்ட மக்களவைத் தேர்தலை முன்னிட்ட இடைக்கால பட்ஜெட்டாகும். இந்நிலையில் சீதாராமன் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட், தொடர்ந்து ஏழாவது முறையாக தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டாகும்.


முதன்மையான இலக்கு:


பிரதமர் மோடியின் அரசாங்கத்தின் முதன்மைக் கொள்கை நோக்கங்கள், விவசாயத் துறையில் நிலவும் சவால்களைச் சமாளிப்பது, வேலைவாய்ப்பை எளிதாக்குதல், மூலதனச் செலவினங்களின் வேகத்தைத் தக்கவைத்தல், நிதி ஒருங்கிணைப்புப் பாதைக்கு ஏற்ப வருவாய் வளர்ச்சியை அதிகரிப்பது போன்றவற்றைச் சுற்றியே அமைகிறது. மேலும், சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கட்டமைப்பை ஒழுங்குபடுத்துவது மற்றும் வரி இணக்கத்தின் சுமையை குறைப்பது ஆகியவை அரசாங்கத்தின் நிதிநிலை அறிக்கையில் முக்கியமாக இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


முதல் 100 நாட்கள் இலக்கு: 


வரவிருக்கும் பட்ஜெட் முதல் 100 நாட்களுக்கான இலக்கு என்ற திட்டத்தில் இருந்து பெறப்பட்ட, முக்கிய அம்சங்களை உள்ளடக்கியதாக இருக்கக் கூடும்.  இதனை உருவாக்கும்படி பிரதமர் மோடி தனது குழுவ்ற்கு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. தோல் துறை போன்ற தொழில்களில் குறிப்பிட்ட கவனம் செலுத்துவதன் மூலம், கணிசமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு அறியப்பட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கும் வகையில், அதன் உற்பத்தி-இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டங்களின் நோக்கத்தை விரிவுபடுத்த அரசாங்கம் விரும்புகிறது.


முந்தைய பிப்ரவரி இடைக்கால பட்ஜெட்டில், வளர்ச்சியை ஊக்குவித்தல், உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல், உற்பத்தித்திறனை மேம்படுத்துதல் மற்றும் பல்வேறு பிரிவுகளில் வாய்ப்புகளை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட பொருளாதாரக் கொள்கைகளுக்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்தது. 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ச்சியடைந்த நாடு என்ற அந்தஸ்தை அடைவதற்கான நோக்கத்தின் ஒரு பகுதியாக, பீகார், ஜார்கண்ட், சத்தீஸ்கர், ஒடிசா மற்றும் மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களை உள்ளடக்கிய கிழக்குப் பகுதியில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.