PM Modi Loksabha: குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, பிரதமர் மோடி இன்று மக்களவையில் உரையாற்ற உள்ளார்.
மக்களவையில் பிரதமர் மோடி
கும்பமேளா கூட்ட நெரிசலால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் வேலைவாய்ப்பின்மை தொடர்பான எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் தொடர்பன விவாதம் நாடாளுமன்றத்தில் சூடுபிடித்துள்ளது. இதனால், அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே கடுமையான விவாதங்கள் மற்றும் கூர்மையான வார்த்தை பரிமாற்றங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று மக்களவையிலும், பிப்ரவரி 6 ஆம் தேதி மாநிலங்களவையிலும், குடியரசு தலைவர் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பதிலளிக்க உள்ளார். வெளியாகியுள்ள தகவல்களின்படி, மாலை 5 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.
எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு
மக்களவையில் நேற்று பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, “இந்திய எல்லையில் சீனாவின் ஆக்கிரமிப்பு, மகாராஷ்டிரா தேர்தலின்போது வாக்காளர் பட்டியலில் 70 லட்சம் வாக்காளர்கள் திடீரென அதிகரித்தது, வேலைவாய்ப்பின்மை அதிகரித்து இருப்பது, மேக் இன் இந்தியா திட்டத்தின் தோல்வி” குறித்து கேள்விகளை அடுக்கி இருந்தார். அதோடு, பிரயாக்ராஜில் ஏராளமான உயிரிழப்புகளுக்கு வழிவகுத்த கும்பமேளா கூட்ட நெரிசல் துயரத்தை கையாண்ட விதம் குறித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினர். நிகழ்வின் போது அரசின் அலட்சியம் மற்றும் யாத்ரீகர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் தோல்வி குறித்து கடுமையான கவலைகளை தெரிவித்தனர்.
அனல் பறக்கும் மக்களவை?
இத்தகைய சூழலில் தான் பிரதமர் மோடி இன்று மக்களவையில் உரையாற்ற உள்ளார். இதனால் இன்றைய கூட்டத்தின் விவாதத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கும்பமேளா சோகம் மற்றும் இறப்பு எண்ணிக்கை குறித்த விவரங்கள் இரண்டிற்கும் அரசாங்கத்தின் பொறுப்புணர்வு மிக்க பதிலை எதிர்க்கட்சிகள் கோருகின்றன. மோடி அதற்கு என்ன மாதிரியான பதில்களை வழங்குவார் என அறிய நாடே ஆர்வமுடன் காத்திருக்கிறது.
பட்ஜெட் மீதான விவாதம்:
2025-26 நிதியாண்டிற்கான பட்ஜெட் மீதான விவாதங்கள் பிப்ரவரி 6, 7, 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெறும். தொடர்ந்து பிப்ரவரி 11 ஆம் தேதி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் விவாதத்திற்கு பதிலளிப்பார். பாஜக கூட்டணி ஆட்சிக்கு முக்கிய ஆதரவு அளித்து வரும் நிதிஷ்குமார் ஆளும், பீகார் மாநிலத்திற்கு மட்டும் மத்திய அரசின் பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு நிலவுகிறது. அதோடு, நடப்பாண்டில் அந்த மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ளதை கருத்தில் கொண்டும், அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் தான், வரும் 6ம் தேதி பட்ஜெட் மீதான விவாதம் தொடங்க உள்ளது. இதில் அரசை நோக்கி கேள்வி எழுப்ப, தமிழக எம்பிக்களும் தயாராகி வருகின்றனர்.