மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட்டில் எவ்வளவு ரூபாய் வருமானம் வரும் எவ்வளவு ரூபாய் செலவினம் வரும், இந்தியா எவ்வளவு ரூபாய் கடன் வாங்க திட்டமிட்டுள்ளது என்பது குறித்தான தரவுகளை தெரிந்து கொள்வோம்.
பட்ஜெட் தாக்கல்:
பட்ஜெட்டானது, பொதுவாக பிப்ரவரி மாத தொடக்கத்தில் தாக்கல் செய்யப்படும். ஆனால், இந்த வருடத்தில், மக்களவைத் தேர்தல் நடைபெற்றதால் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக, புதிய அரசு அமையும் வரையிலான கால வரையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, தேர்தல் முடிவடைந்த நிலையில், பாஜக தலைமையிலான கூட்டணி பொறுப்பேற்றுள்ள நிலையில், தற்போது முழு ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இது பிரதமர் மோடி தலைமையில், 3வது ஆட்சியில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட்டாகும். இது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 7வது முழு பட்ஜெட்டாகும்.
கடன் :
இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், 2024-25 ஆண்டுக்கான நிதியாண்டில் எவ்வளவு வருவாய் வரும் என்றும் எவ்வளவு செலவினம் வரும் என்றும் மத்திய நிதி அமைச்சகம் பட்ஜெட்டில் கணித்துள்ளது.
வருவாய் - ரூ. 32.07 லட்சம் கோடி
செலவினம் - ரூ. 48.21 லட்சம் கோடி
வருவாயை விட செலவினம் அதிகமாக இருப்பதால், செலவினத்தை ஈடுகட்ட பற்றாக்குறையாக உள்ளது. இது நிதி பற்றாக்குறை என அழைக்கப்படுகிறது. ஆகையால், இந்த மதிப்பை ஈடுகட்ட கடன் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டின் போது ரூ.14.13 லட்சம் கோடி வாங்க திட்டமிடப்பட்ட நிலையில், தற்போது ரூ.14.01 லட்சம் கோடி கடன் வாங்குவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
கடந்த நிதி ஆண்டில் 2023-24 ஆம் நிதி ஆண்டில் 15.43 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்டதாக தி எகானமிக்ஸ் டைம்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் , இந்த நிதியாண்டில் நிதி பற்றாக்குறையை ஜி.டி.பி-யில் 4.9 சதவிகிதமாக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.