இந்திய அரசாங்கம் இறால்  தீவனத்தை உள் நாட்டில் தயாரிப்பதற்கான முக்கிய உள்ளீடுகள் மீதான சுங்க வரியை குறைப்பதாக கடந்த பட்ஜெட்டிலும் அறிவிப்பு வெளியானது. அதே போல இந்த பட்ஜெட்டிலும்  இறால் மற்றும் மீன் தீவனங்களுக்கான சுங்க வரி 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது மீனவர்களுக்கு எந்த அளவிற்கு பயனுள்ளதாக உள்ளது.. இதன் சாதக பாதகங்கள் என்ன? என்பது குறித்து ஏபிபி நாடு மூலம் நெய்தல் சமூக ஆர்வலரும், உலக மீனவ மக்கள் பேரவையின் பிரதிநிதியுமான தூத்துக்குடியை சேர்ந்த ஜோன்ஸ் தாமஸ் பார்டகஸை நாம் தொடர்பு கொண்டு கேட்டோம். இது குறித்து அவர் கூறும் பொழுது, இது இறால் பண்ணைகளுக்கு மட்டுமே லாபம் கொடுக்கும். இது இறால் பண்ணை வைத்திருக்கும் பெரும் முதலாளிகளுக்கே  நல்லது என்கிறார். போன வருடம் வரி குறைக்கப்பட்டது. இந்த  வருடமும் வரி குறைக்கப்பட்டுள்ளது. அதனால் இது மீனவர்களுக்கு எந்த பயனையும் தராது. இழுவலை படகுகள் மூலம்  இறால் பிடிப்பதற்காக 1972 இல் Mpeda ( Marine Products exports develop authority) உருவாக்கப்பட்டது. இதன் மூலம் இறால்  பிடித்து ஏற்றுமதி செய்ய வேண்டும் என்பது தான் இந்த இழுவலை படகின் வரலாறு. ஆனால் இன்று அதற்கு எதிர்மாறாக நடந்து வருகிறது. 




குறிப்பாக இழுவலை படகுகளுக்கு எந்த ஒரு ஏற்றுமதி மானியமோ எதுவுமே கிடையாது, இழுவலை படகுகளை தடையும் செய்யாமல் ஏற்றுமதி மானியமும் கொடுக்காததால் பெரும் முதலாளிகளே லாபம் ஈட்டி வருகின்றனர். இது ஒட்டு மொத்தமாக மீன் பிடியில் ஈடுபட்டுள்ள பாரம்பரிய மீனவர்களுக்கு ஆபத்தான விசயம். அதுமட்டுமின்றி அமெரிக்க அரசு பல்வேறு காரணங்களை சொல்லி கடல்சார் இறால் ஏற்றுமதிக்கு தடை விதித்து உள்ளது. இதனை நீக்க கேரள அரசு கோரிக்கை விடுத்து உள்ளது. தமிழக அரசும் இதை வலியுறுத்த வேண்டும் எனக்கூறும் இவர், மத்திய அரசு இது குறித்தான எவ்வித அறிவிப்பையும் வெளியிடாத வரையில் பாரம்பரிய மீனவனுக்கு எவ்வித நன்மையும் ஏற்படாது என்கிறார்.