Budget 2024 Income Tax: வரி விதிப்பு முறையில் எந்த மாற்றமும் இல்லை என, இடைக்கால பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.


வருமான வரி உச்சவரம்பில் மாற்றமில்லை:


தேர்தல் நடைபெற உள்ளதை கருத்தில் கொண்டு, தனிநபர்களுக்கான தனிநபர் வருமான வரி உச்சவரம்பு அதிகரிக்கப்படும் என பெரும்பாலானோரால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதில் எந்தவித மாற்றங்களையும் கொண்டுவரப்போவதில்லை என, இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இறக்குமதி சேவை உள்ளிட்ட அனைத்திற்குமான நேரடி மற்றும்  மறைமுக வரி என எதிலும் மாற்றம் இருக்காது, தற்போது இருக்கும் சூழலே நீடிக்கும் எனவும் அறிவித்துள்ளார்.






வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பு:


நாட்டில் வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. அதன்படி, 8 கோடிக்கும் அதிகமானோர் வரி செலுத்தியுள்ளார். 10 ஆண்டுகளில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 2.4 மடங்கு உயர்ந்துள்ளது.  மாத சராசரி ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1.66 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. வரும் நிதியாண்டில் ரூ.11.75 லட்சம் கோடி  கடன் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். 


தற்போதைய வரிவிதிப்பு முறை என்ன?


கடந்த ஆண்டு வெளியான பட்ஜெட்டின்படி,  பழைய வருமான வரித்திட்டத்தில் 6 பிரிவுகளாக இருந்த வரிவிதிப்பு முறை, புதிய வருமான வரி விதிப்பு திட்டத்தில் 5-ஆகக் குறைக்கப்பட்டது. அதன்படி, தனிநபர் ஒருவர் ஆண்டிற்கு ரூ.3 லட்சத்தை வருவாயாக கொண்டிருந்தால், அவர் வருமான வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை  முன்னதாக ரூ.2.5 லட்சம் வரையில் வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டு இருந்த நிலையில், 9 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அது 3 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டது.


வரி விதிப்பு சதவிகிதம்:


ரூ.3 லட்சம் முதல் 6 லட்சம் வரை ஆண்டு வருவாயாக கொண்டு இருப்பவர்கள் 5 சதவிகிதம் வரியும், ரு. 6 முதல் 9 லட்சம் வரையிலான வருவாய் கொண்டிருப்பவர்கள் 10 சதவிகிதம் வரியும் செலுத்த வேண்டும். ரூ.9 லட்சம் முதல் 12 லட்சம் ரூபாய் வரையிலான வருவாயை கொண்டவர்கள் 15 சதவிகித வரியும், ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரையிலான வருவாயை கொண்டவர்கள்  20 சதவிகித வரியும் செலுத்த வேண்டும். ரூ.15 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருவாய் கொண்டவர்கள்,  30% வரியை செலுத்த வேண்டும். ரூ.15 லட்சத்திற்கும் அதிகமான வருவாய் கொண்டவர்களுக்கான  சர்சார்ஜுடன் வரி விகிதம் 30 சதவிகிதம் ஆக தொடர்கிறது. பொதுவான சர்சார்ஜ் விகிதம் 25 சதவிகிதம் ஆக உள்ளது.


ரூ.7 லட்சம் வரையில் வரி விலக்கு:


 கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட வருமான வரி விதிப்பு திட்டத்தின் மூலம், ரூ.7 லட்சம் வரையில் ஆண்டு வருமானம் கொண்டவர்கள், உரிய ஆவணங்களை செலுத்துவதன் மூலம் முழு வரி விலக்கு பெறுகின்றனர்.


ALSO READ | Budget 2024 Highlights: மாநிலங்களுக்கு வட்டியில்லா கடன் முதல் 2 கோடி வீடுகள் வரை - பட்ஜெட் 2024ன் முக்கிய அம்சங்கள்!