Budget 2024 LIVE Updates: ஆந்திர மாநிலத்தின் தேவைகளை அறிந்து பட்ஜெட்: பிரதமருக்கு நன்றி தெரிவித்த சந்திரபாபு நாயுடு
Union Budget 2024 LIVE Updates: தேர்தல் காரணமாக பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கலான நிலையில், இன்று முழு பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.
ஆந்திர மாநிலத்தின் தேவைகளை அறிந்து பட்ஜெட்டில் அறிவிப்புகள் - பிரதமருக்கு நன்றி தெரிவித்த சந்திரபாபு நாயுடு
"இது வளர்ச்சிக்கான பட்ஜெட் இல்லை. மத்திய அரசை தற்காத்துக் கொள்ளும் அரசியல் பட்ஜெட்" -தமிமுன் அன்சாரி, மஜக தலைவர்
பீகார் மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அசாம், இமாச்சலப் பிரதேசம் உத்தரகாண்ட் போன்ற மாநிலங்கள் வெள்ள தடுப்பு பணிகளுக்காக 11,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவற்றை குறை கூறவில்லை. ஆனால் கடந்த டிசம்பர் மாதத்தில் தமிழ்நாடு வெள்ளத்தால் இதே அளவிற்கு கடுமையாக பாதிக்கப்பட்டது.
அதற்கு ஏன் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை? என்ற கேள்வி எழுகிறது. பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அடுத்த சட்டமன்ற தேர்தலை மனதில் கொண்டு பல சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டுக்கென சிறப்பு திட்டங்கள் ஏதுமில்லை. ஏற்கனவே கடந்த கால பட்ஜெட்டுகளில் அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் நிறைவேற்றப்படாத நிலையில், இந்த புதிய பட்ஜெட் எதை சாதிக்கப் போகிறது? என்கிற கேள்வி எழுகிறது. -தமிமுன் அன்சாரி, மஜக தலைவர்
“மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை காற்று ஊதப்பட்ட பலூன் போன்றது” -ஜவாஹிருல்லா எம்எல்ஏ, மமக மாநிலத் தலைவர்
தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தள கட்சிகளின் தயவோடு நடத்தப்படும் ஆட்சி என்பனால், பீகாருக்கும் ஆந்திரப் பிரதேசத்துக்கும் சிறப்புத் திட்டங்கள் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு உட்பட பெரும்பாலான மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன. தமிழ்நாடு அரசின் முக்கியக் கோரிக்கைகளான வெள்ள நிவாரண நிதி, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம் ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்கீடு குறித்து எந்த அறிவிப்பும் சொல்லப்படவில்லை. இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பை முறையாக நடத்தாமல் போதிய புள்ளிவிவரங்கள் இல்லாமல் வெறும் கற்பனை விவரங்களைச் சொல்லி மக்களை ஏமாற்ற ஒன்றிய அரசு முயல்கிறது. மொத்தத்தில் இந்த நிதிநிலை அறிக்கை காற்று ஊதப்பட்ட பலூன் போன்றதுதான் -ஜவாஹிருல்லா எம்எல்ஏ, மமக மாநிலத் தலைவர்
"நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதன் மூலம் தமிழக நலனை மட்டுமல்ல, தமிழக மக்களின் நலனையும் அவர் புறக்கணிக்கிறார்" -முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
“தமிழ்நாட்டுக்கான சிறப்பு திட்டங்களோ, நிதி ஒதுக்கீடோ இல்லாத மத்திய அரசின் 2024-25 ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை; தமிழ்நாட்டில் இருந்து அதிகளவில் வரியை வாங்கிச் செல்லும் மத்திய அரசு, தமிழ்நாட்டிற்கு தேவையான உட்கட்டமைப்புத் திட்டங்கள், பாசனத் திட்டங்கள் எதுவும் இல்லாமல் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்திருப்பது கண்டனத்துக்குரியது” - தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ அறிக்கை
பட்ஜெட்டில் தமிழ்நாடு ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டதாகவும், அதை கண்டிக்கும் வகையில், பிரதமர் மோடி தலைமையில் நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம் : பட்ஜெட் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்
"தமிழ்நாட்டின் மீது ஒன்றிய அரசுக்கு உள்ள காழ்ப்புணர்ச்சியையே இந்த பட்ஜெட் காட்டுகிறது" -எடப்பாடி பழனிசாமி
"ஆந்திரா, பீகார் தவிர பிற மாநிலங்கள் மகிழ்ச்சியாக அல்வா சாப்பிடுங்கள்” -நடிகர் பிரகாஷ்ராஜ் விமர்சனம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹2,080 குறைந்தது!
“மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் இன்று தாக்கல் செய்யப்பட்டிருப்பது அனைத்து தரப்பு மக்களுக்கான பட்ஜெட்; இந்த பட்ஜெட்டில் விவசாயத்திற்கு முக்கியத்தும் கொடுக்கப்பட்டுள்ளது; இது வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்குவதற்கான பட்ஜெட்; நாட்டில் வறுமையை ஒழிப்புதற்கான பாதையை மத்திய பட்ஜெட் உருவாக்கியுள்ளது” - 2024-25ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
உட்கட்டமைப்புக்கு ரூ.11,11,111 என்ற தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. வளர்ச்சி, வளர்ச்சி, வளர்ச்சி என்னும் வகையில் இந்த பட்ஜெட் அமைந்திருக்கிறது - அண்ணாமலை
மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு என எந்தவித, சிறப்பு திட்டங்களோ, நிதியோ ஒதுக்கப்படாதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வெள்ள தடுப்பு பணிகளுக்காக கோரப்பட்ட நிதி கூட ஒதுக்கப்படவில்லை. அதேநேரம், ஆந்திரா, பீகார் போன்ற மாநிலங்களுக்கு ஏராளமான திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை.
2023-24 நிதியாண்டில் இருந்த வரி விதிப்பு நிலை:
வருமானம் | வரி அடுக்கு விவரம் |
ரூ.3 லட்சம் வரையிலான வருவாய் | NIL |
ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரையிலான வருவாய் | 5 சதவிகிதம் |
ரூ.6 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரையிலான வருவாய் | 10 சதவிகிதம் (ரூ.7 லட்சம் வரையிலான வருமானம் கொண்டவர்கள் வரி செலுத்த வேண்டியதில்லை) |
ரூ.9 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரையிலான வருவாய் | 15 சதவிகிதம் |
ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரையிலான வருவாய் | 20 சதவிகிதம் |
ரூ.15 லட்சத்திற்கும் மேற்பட்ட வருவாய் | 30 சதவிகிதம் |
2024-25 நிதியாண்டில் இருந்த வரி விதிப்பு நிலை:
வருமானம் | வரி அடுக்கு விவரம் |
ரூ.3 லட்சம் வரையிலான வருவாய் | NIL |
ரூ.3 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரையிலான வருவாய் | 5 சதவிகிதம் |
ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான வருவாய் | 10 சதவிகிதம் (ரூ.7 லட்சம் வரையிலான வருமானம் கொண்டவர்கள் வரி செலுத்த வேண்டியதில்லை) |
ரூ.10 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரையிலான வருவாய் | 15 சதவிகிதம் |
ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரையிலான வருவாய் | 20 சதவிகிதம் |
ரூ.15 லட்சத்திற்கும் மேற்பட்ட வருவாய் | 30 சதவிகிதம் |
புதிய வரி விதிப்பு முறையில் 3 லட்ச ரூபாய் வரை ஆண்டு வருமானம் வரை வரி எதுவும் செலுத்த வேண்டியதில்லை. மேலும், 3 முதல் 7 லட்ச ரூபாய் வரையிலான வருமானத்திற்கு 5 சதவிகிதமும், 7 லட்சம் முதல் 10 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 10 சதவிகிதமும், 10 முதல் 12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 15 சதவிகிதமும், 12 லட்சம் முதல் 15 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 20 சதவிகிதமும், அதற்கு மேற்பட்ட வருமானத்திற்கு 30 சதவிகிதமும் வரி செலுத்த வேண்டும்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வருமான வரி உச்சவரம்பில் எந்தவித மாற்றமும் இல்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன அறிவித்துள்ளார்.
புதிய வருமான வரி விதிப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிலையான கழிவு தொகையானது, 50 ஆயிரம் ரூபாயிலிருந்து 75 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
ஒரு இந்திய முதலீட்டாளரிடமிருந்து பட்டியலிடப்படாத நிறுவனங்கள் பங்குகளை வெளியிடுவதன் மூலம் திரட்டப்பட்ட மூலதனத்திற்கு ஏஞ்சல் வரி விதிக்கப்படுகிறது. அந்த வரியை முற்றிலும் ரத்து செய்வதாக நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஒரு நிதியாண்டில் மூலதன ஆதாயத்திற்கான விலக்கு வரம்பை ரூ.1.25 லட்சமாக உயர்த்துவதாக அறிவித்தார்.
நடப்பு நிதியாண்டில் நிதி பற்றாக்குறையை சமாளிக்க, 14 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
நேரடி வரி விதிப்பு முறையை எளிமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.தாமதமாக வருமான வரி தாக்கல் செய்யப்படுவது இனி குற்றமாகாது. ஆன்லைன் வர்த்தகத்திற்கு வரி குறைக்கப்படுகிறது. வரி செலுத்துவோர் மூன்றில் 2 பேர் புதிய வரி முறையை தேர்வு செய்கின்றனர் - நிர்மலா சீதாராமன்
அறக்கட்டளைகளுக்கு இதுவரை இருந்த இரண்டு விதமான வரி விதிப்பு முறை, இனி ஒரே முறையாக் தொடரும் - நிதியமைச்சர்
அறக்கட்டளைகளுக்கு இதுவரை இருந்த இரண்டு வ்தமான வரி விதிப்பு முறை, இனி ஒரே முறையாக் தொடரும் - நிதியமைச்சர்
25 வகையான கனிமங்களை இறக்குமதி செய்வதற்கான வரியை குறைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரி 6 சதவிகிதமும், பிளாட்டினம் மீதான சுங்கவரி 6.4 சதவிகிதமும் குறைக்கப்படுவதாக நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
பட்ஜெட் மதிப்பீடுகளின் ஒரு பகுதியாக, 2024-25 நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.9 சதவீதமாக இருக்கும் என அரசாங்கம் அறிவித்தது.
செல்போன்கள் மற்றும் அதன் சார்ஜர் உள்ளிட்ட உபகரணங்கள் மீதான சுங்க வரி குறைக்கப்படுவதாக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அதாவது இவற்றின் மீதான சுங்க வரி 15 சதவிகிதம் வரை குறைக்கப்படும்
புற்று நோய்களுக்கான மேலும் 3 மருந்துகளுக்குமான சுங்க வரி முற்றிலும் நீக்கபபடுகிறது.
சோலார் பேனல் திட்டத்தின் கீழ் 1 கோடி குடும்பத்திற்கு மாதம் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும். 1 கோடி வீடுகளுக்கு மாதம் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும், சோலார் பேனல்கள் அமைக்கும் திட்டத்தை நிதியமைச்சர் சீதாராமன் அறிவித்துள்ளார்.
அடுத்த பத்தாண்டுகளில் விண்வெளிப் பொருளாதாரத்தை மேம்படுத்த விண்வெளித் துறைக்கு ரூ.1,000 கோடி ஊக்குவிப்பதாக அரசாங்கம் அறிவித்தது.
பாஜக கூட்டணி ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ள ஆந்திரா மற்றும் பீகாருக்கு, உட்கட்மைப்பு, சாலை மேம்பாடு, வெள்ள தடுப்பு பணி மற்றும் சுற்றுலா மேம்பாடு என பல்வேறு சிறப்பு திட்டங்களுக்கு நிதி வாரி வழங்கப்பட்டுள்ளது. தங்கள் மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என, சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமார் வலியுறுத்தி வந்த நிலையில் சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஐந்தாண்டுகளில் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு வலுவான நிதி ஆதரவை அரசாங்கம் வழங்கும் என்றும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.4 சதவீதமாக வரும் ரூ.11.11 லட்சம் கோடி மூலதனச் செலவீனமாக வெளியிடப்படும் என்றும் நிதியமைச்சர் சீதாராமன் தெரிவித்தார்.
மாநிலங்களுக்கு நீண்ட கால வட்டியில்லா கடன்களை வழங்குவதற்காக 1.5 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி வழங்குவதாக அரசு அறிவித்தது.
பீகாரில் 2,400 மெகா வாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் ஆலைகள் அமைக்க, 21 ஆயிரத்து 400 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பீகார் வெள்ள தடுப்பு பணிக்காக 11 ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக நிதியமைச்சர் அறிவித்தார். ஆனால், தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிதி ஒதுக்கவில்லை என, தமிழக எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
நாட்டின் எந்தெந்த மாநிலங்களில் அதிக பத்திரப்பதிவு நடைபெறுகிறதோ, அங்கெல்லாம் பத்திரப்பதிவு கட்டணம் குறைக்க வலியுறுத்தப்படும் - நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன்
பழங்குடியின மக்களுக்காக ரூ.5 கோடியில் சிறப்பு திட்டங்கள் கொண்டு வரப்படும் - நிர்மலா சீதாராமன்
MSMEகளுக்கான காலக் கடன்களை எளிதாக்கும் நோக்கில் கடன் உத்தரவாதத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் இந்த நிறுவனங்களுடன் தொடர்புடைய கடன் அபாயங்களைக் குறைக்கும். ஒவ்வொரு விண்ணப்பதாரரும் சுயநிதி உத்தரவாத நிதி மூலம் ரூ. 100 கோடி வரை கவரேஜ் பெறத் தகுதி பெறுவார்கள், மேலும் குறிப்பிடத்தக்க கடன் தொகைகள் கிடைக்கும்.
பிரதமர் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் நகர்ப்புறங்களில் ஒரு கோடி வீடுகள் கட்டி தரப்படும். இதற்காக 10 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது - நிதியமைச்சர்
நாடு முழுவதும் புதியதாக 12 தொழிற்பூங்காக்கள் தொடங்கப்படும். 500 பெரிய நிறுவனங்களில் இளைஞர்கள் தொழிற்பயிற்சி பெற வாய்ப்பு ஏற்படுத்தப்படும். உற்பத்தி துறையில் 1 கோடி இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் - நிதியமைச்சர்
உள்நாட்டு உற்பத்தி, முக்கியமான கனிமங்களை மறுசுழற்சி செய்தல் மற்றும் முக்கியமான கனிம சொத்துக்களை கையகப்படுத்துதல் ஆகியவை மேற்பார்வையிடப்படும் என நிதி அமைச்சர் அறிவித்தார்.
புதிய சாலை இணைப்பு திட்டங்களை மேம்படுத்த ரூ.26,000 கோடி ஒதுக்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்தார்.
பாஜக கூட்டணிக்கு ஆதரவளித்துள்ள ஆந்திரா மற்றும் பீகாருக்கு மட்டும் சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மக்களவையில் அமளியில் ஈடுபட்டனர்
கடனைப் பெற்று வெற்றிகரமாக திருப்பிச் செலுத்தும் தொழில்முனைவோருக்கு முத்ரா கடன் வரம்பு ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் சீதாராமன் அறிவித்தார்.
பட்ஜெட்டில் உட்கட்டமைப்பு உள்ளிட்ட கிராமப்புற வளர்ச்சிக்காக ரூ.2.66 லட்சம் கோடி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
பெண்கள் மற்றும் பெண்குழந்தைகள் பயன்பெறும் திட்டங்களுக்காக ரூ.3 லட்சம் கோடிக்கு மேல் ஒதுக்கீடு செய்வதாக நிதியமைச்சர் அறிவித்தார்.
மத்திய பட்ஜெட் 2024ன் ஒன்பது முன்னுரிமைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. அவை,
வேளாண்மை
வேலைவாய்ப்பு
உள்ளடக்கிய வளர்ச்சி
உற்பத்தி மற்றும் சேவைகள்
நகர்ப்புற வளர்ச்சி
ஆற்றல்
இன்ஃப்ரா
புதுமை, R&D
அடுத்த தலைமுறை சீர்திருத்தங்கள்
பீகாரில் சாலைகள், மேம்பாலங்கள் அமைக்க 26 ஆயிரம் கோடி ரூபாய் சிறப்பு நிதியாக ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு தொழில்பூங்கா அமைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்
ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கோரப்பட்ட நிலையில், அந்த மாநிலத்திற்கு சிறப்பு நிதியாக 15 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்குவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதியதாக பணியில் சேர்ந்து EPFO-ல் பதிவு செய்யும் நபர்களுக்கு, அதிகபட்சமாக 15 ஆயிரம் ரூபாய் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்த தொகை மூன்று கட்டங்களாக விடுவிக்கப்படும். அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை ஊதியம் பெறுபவர்கள் இதனால் பயனடைவர். இதனால் 2.1 கோடி இளைஞர்கள் பயனடைவார்கள் - நிர்மலா சீதாராமன்
உள்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் பயில 10 லட்ச ரூபாய் வரை கல்விக் கடன் வழங்கப்படும். இது மாணவர்களை ஊக்குவிக்கும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
20 லட்சம் இளைஞர்களுக்கு உதவும் வகையில், மத்திய அரசின் புதிய திறன் மேம்பாட்டுத் திட்டத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு திறன் பயிற்சி அளிக்கப்படும் மற்றும் 1,000 தொழில் பயிற்சி நிறுவனங்கள் உருவாக்கப்பட உள்ளது.
நாடு முழுவதும் பணிபுரியும் பெண்களுக்காக ஹாஸ்டல் மற்றும் தங்குமிடங்கள் அமைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்
நிதியமைச்சர் சீதாராமன் விவசாயம் மற்றும் அதை சார்ந்த துறைகளுக்கு ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கீட்டை வெளியிட்டார். அடக்கவிலையை காட்டிலும் 20 சதவிகித லாபத்துடன் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படுகிறது.
காய்கறி உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுத்து ஊக்குவிக்கப்படும். கிசான் கிரிட்டிட் கார்ட் 5 மாநிலங்களில் முதல் கட்டமாக அறிமுகப்படுத்தப்படும் - நிர்மலா சீதாராமன்
2024 பட்ஜெட்டில் 4.1 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் திறன் முயற்சிகளை ஊக்குவிப்பதற்காக, ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் சீதாராமன் தெரிவித்தார்.
மத்திய அரசின் பட்ஜெட் நடுத்தர வர்கத்தினருக்கானதாக இருக்கும். இளைஞர் நலனுக்காக 5 சிறப்பு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. கரிப் அன்ன யோஜனா திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பதன் மூலம் 80 கோடி பேர் பயனடைவர் - நிர்மலா சீதாராமன்
நாட்டில் விலைவாசி கட்டுக்குள் உள்ளது. இந்தியாவின் பணவீக்கம் தொடர்ந்து குறைவாகவும், நிலையானதாகவும், 4 சதவீத இலக்கை நோக்கி நகர்ந்தும் வருகிறது. பெண்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகளை நோக்கி மத்திய அரசின் கொள்கைகள் உள்ளன - நிர்மலா சீதாராமன்
இந்திய பொருளாதாரம் தொடர்ந்து முன்னேறி வருகிறது. இந்தியாவின் பணவீக்கம் தொடர்ந்து குறைந்து வருகிறது - நிர்மலா சீதாராமன்.
2024-25 நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது. அதைதொடர்ந்து நடப்பு நிதியாண்டிற்கான விரிவான பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். தொடர்ந்து ஏழாவது முறையாக அவர், பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.
2024-25 நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்றம் வந்தடைந்தார்.
இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க இருக்கிறது.
காலை 10:30 மணி நிலவரப்படிமும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 121.78 அல்லது 0.15% புள்ளிகள் சரிந்து 80,368.32 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 57.70 அல்லது 0.24% புள்ளிகள் சரிந்து 24,450.95 ஆக வர்த்தகமாகி வருகிறது.
பட்ஜெட்டில் முதலீட்டாளர்களுக்கு சாதகமாக அறிவிப்புகள் இடம்பெற்றால் பங்குச்சந்தை நேர்மறையாக வர்த்தகத்தை தொடரும் என்று சொல்லப்படுகிறது.
கடந்த 1977-78 நிதியாண்டிற்கான இடைக்கால் பட்ஜெட் உரையை அப்போதைய நிதியமைச்சர் ஹிருபாய் முலிஜிபாய் படேல் நிகழ்த்தினார். வெறும் 800 வார்த்தைகளை மட்டுமே கொண்ட அந்த உரை, இந்திய பட்ஜெட் வரலாற்றில் மிகக் குறுகிய பட்ஜெட் உரையாகும்.
இந்திய பட்ஜெட் வரலாற்றில் மிக நீண்ட உரையாற்றிய நிதியமைச்சர் என்ற பெருமை நிர்மலா சீதாராமனையே சேரும். கடந்த 2020ம் ஆண்டு பட்ஜெட்டின் போது, 2 மணி நேரம் 40 நிமிடங்களுக்கு அவர் பட்ஜெட் உரையை நிகழ்த்தினார்.
மத்திய அரசின் 2024-25 நிதியாண்டிற்கான பட்ஜெட்டிற்கு, பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றம் வந்தார்.
மக்களவையில் இன்று மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இதையொட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றம் வந்தார்.
மோடி அரசின் மூன்றாவது ஆட்சியில் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது குழுவுடன் பட்ஜெட்டை ஏந்தி நாடாளுமன்றத்திற்கு வந்தார்.
மூன்றாவது மோடி அரசின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை ஏந்தி நாடாளுமன்றத்திற்கு வந்தார்.
நாடாளுமன்றத்தில் காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்னதாக, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ராஷ்டிரபதி பவனில் சந்தித்தார்.
"விக்சித் பாரத் பயணத்தில் இந்த பட்ஜெட் ஒரு மைல் கல்லாக அமையும் என எதிர்பார்க்கிறோம். நேற்று முன்வைக்கப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் 6.5 ஆக இருந்த நமது வளர்ச்சி விகிதம் 8.2 ஆக அதிகரித்துள்ளது. நமது பொருளாதார நடவடிக்கைகள் வலுப்பெற்றுள்ளன.
ஆம் ஆத்மி எம்.பி., சந்தீப் பதக் கூறுகையில், ''டெல்லியின் நிதி உதவி அதிகரிக்க வேண்டும்... 10 அம்ச நிகழ்ச்சி நிரலை உருவாக்க வேண்டும். வேலையின்மை பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்." எனத் தெரிவித்தார்.
திமுக தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் கூறுகையில், “முதல் பத்தாண்டுகள் செய்தவையே தொடரும், ஏனென்றால் நிர்மலா சீதாராமன் 7வது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். ஆனால், அவர் முன்வைத்த 6 பட்ஜெட்களிலும் பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. ஏழை மக்கள், பிபிஎல் குடும்பங்கள் மற்றும் நடுத்தர மக்களின் உள்நாட்டு நுகர்வு குறைந்துவிட்டது. வருமானம் குறைந்துவிட்டது. இந்த அரசாங்கம் அதற்காகவே” எனத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக, குடியரசுத் தலைவர் முர்முவை சந்திக்க நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ராஷ்டிரபதி பவனுக்குச் சென்றார்.
2023-24 நிதியாண்டில் 8.2 சதவீத உண்மையான ஜிடிபி வளர்ச்சி விகிதத்தை அடைந்து, கணிசமான உலகளாவிய மற்றும் உள்நாட்டு பொருளாதார சவால்களை சமாளித்து, இந்தியாவின் பொருளாதாரம் முன்னேற்றம் கண்டுள்ளது என்று பொருளாதார அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டில், வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தூர்தர்ஷன், பார்லிமென்ட் சேனல்கள் மற்றும் இந்திய அரசின் யூடியூப் தளம் உட்பட பல்வேறு அரசு சேனல்களில் பட்ஜெட் நேரடியாக ஒளிபரப்பப்படும். இந்த நிகழ்வை சன்சாத் தொலைக்காட்சியும் ஒளிபரப்பும். அதிகாரப்பூர்வ இணையதளம், www.indiabudget.gov.in , ஆன்லைன் ஸ்ட்ரீமிங் இணைப்பை ஹோஸ்ட் செய்யும், இதில் பயனர்கள் பட்ஜெட் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் அணுகலாம்.
தனிநபர்களை பொருத்தவரை, வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்த்தப்படுமா?, வருமான வரி அடுக்குகளில் மாற்றம் ஏற்படுமா? ஜிஎஸ்டி வரி விகிதங்கள் திருத்தப்படுமா? வீட்டு கடன்களுக்கான சலுகைகள் உயருமா? நிலையான கழிவுத்தொகை உயர்த்தப்படுமா? வீட்டு வாடகை அலவன்ஸ் உயருமா? நீண்ட கால முதலீடுகளுக்கான வட்டி வருமானத்திற்கு விலக்கு கிடைக்குமா? போன்ற ஏராளமான எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன.
நேற்று, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் தாக்கல் செய்தார்.
பட்ஜெட் கூட்டத் தொடர் திங்கள்கிழமை அதாவது நேற்று தொடங்கி ஆகஸ்ட் 12 வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
மோடி 3.0 வின் முதல் என்பதால் எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளன. இந்த பட்ஜெட்டை எதிர்நோக்கி பொது மக்கள், தொழில்துறை நிர்வாகிகள் மற்றும் நிபுணர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றனர்.
2024 நாடாளுமன்றத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்த பாஜக ஆட்சியில் மோடி தொடர்ந்து 3வது முறையாக பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பிரதமராக பதவியேற்றிருக்கும் நரேந்திர மோடியின் அரசாங்கத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதோடு தனது 7வது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை ஜூலை 23 செவ்வாய்க்கிழமை அதாவது இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.
Background
Union Budget 2024 LIVE:
மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைத்ததை தொடர்ந்து முதல்முறையாக இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. வழக்கமாக பிப்ரவரி மாதம்தான், மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். ஆனால், மக்களவை தேர்தல் நடைபெறும் ஆண்டுகளில் பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டவிட்டு, புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு ஜூலை மாதம் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
அந்த வகையில், இந்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெற காரணத்தால் கடந்த பிப்ரவரி மாதம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இடைக்கால பட்ஜெட்டை மட்டுமே தாக்கல் செய்தார். மக்களவை தேர்தலில் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு பாஜக புதிய அரசாங்கத்தை அமைத்துள்ளது.
இந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று மத்திய பட்ஜெட் தாக்கலாகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு முதல் மத்திய நிதியமைச்சராக உள்ள நிர்மலா சீதாராமன், தொடர்ந்து 7ஆவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட், ஜம்மு காஷ்மீர் (தற்போது யூனியன் பிரதேசம்) ஆகிய மாநிலங்களுக்கு இந்தாண்டின் இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களவை தேர்தலுக்கு முன்னதாக தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் எதுவும் இடம்பெறவில்லை. பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் போனதற்கு பட்ஜெட்டில் மக்களுக்கு எதுவும் அறிவிக்கப்படாமல் போனதே காரணம் என கூறப்படுகிறது.
எனவே, அரசியல் ரீதியாக மட்டும் இன்றி பொருளாதார ரீதியாகவும முக்கியத்துவம் வாய்ந்த மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ளதால், புதிய திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -