பீகார் ஆந்திரா உள்ளிட்ட 5 மாநிலங்களை மேம்படுத்த சிறப்புத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் கூட்டத் தொடர் திங்கள்கிழமை அதாவது நேற்று தொடங்கி ஆகஸ்ட் 12 வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. நேற்று, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை ஜூலை 23 செவ்வாய்க்கிழமை அதாவது இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
பிரதமராக பதவியேற்றிருக்கும் நரேந்திர மோடியின் அரசாங்கத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதோடு தனது 7வது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மேலும் இந்த நிதியாண்டின் முதல் பட்ஜெட்டும் இதுவாகும். 2024 நாடாளுமன்றத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்த பாஜக ஆட்சியில் மோடி தொடர்ந்து 3வது முறையாக பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு முழு முக்கிய காரணமாக அமைந்தது ஆந்திராவின் தெலுங்கு தேசம் கட்சியும் பீகாரின் நிதிஷ் குமார் கூட்டணியுமே ஆகும்.
இதையடுத்து பாஜக ஆட்சியை தக்க வைக்க பெரிதும் உதவிய ஆந்திரா, பீகார் மாநிலங்கள் சிறப்பு அந்தஸ்து கோரியது. இந்நிலையில் அந்த இரண்டு மாநிலங்களுக்கு சிறப்பு நிதி ஒதுக்கி மத்திய அரசு சிறப்பாக கவனித்துள்ளது.
அதாவது பட்ஜெட் அறிவிப்பில் நிர்மலா சீதாராமன் கூறுகையில், “ஆந்திராவின் அமராவதி நகர வளர்ச்சி கட்டமைப்புக்கு ரூ.15,000 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் மின்சாரம், சாலை, ரயில்வே உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு திட்டங்கள் கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோது பீகாருக்கு ரூ.26,000 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விமான நிலையங்கள், மருத்துவ கல்லூரிகள் உள்ளிட்டவை அமைக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், பீகாரில் வெள்ளத் தடுப்பு நிவாரணமாக ரூ.11,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். பீகாரில் விஷ்ணு போதி, மகா போதி ஆகிய 2 கோயில்கள் அமைக்கப்படும். பீகாரில் 2,400 மெகா வாட் மின் உற்பத்தி செய்ய மின் ஆலைகள் அமைக்க ரூ.21,400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.