மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முதல் முறையாக திருக்குறள், புறநானூறு உள்ளிட்ட  இலக்கியங்களை மேற்கோள் காட்டாமல் இந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். 


பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்களும் மத்திய அமைச்சர்களும் தங்களின் உரைகளில் தமிழ் குறித்தும், திருக்குறள் உள்ளிட்ட பழம்பெரும் தமிழ் இலக்கியங்கள் குறித்தும் மேற்கொள்காட்டி பேசுவது வழக்கம். 


தமிழகத்தைச் சேர்ந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஐந்து ஆண்டுகளாக பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறார். ஒவ்வொரு முறையும் தமிழ் இலக்கியங்களில் இருந்து சில வரிகளை மேற்கோள் காட்டி பட்ஜெட் தாக்கல் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். 


முதன்முதலாக 2019- 20ஆம் ஆண்டில் தனது பட்ஜெட் உரையைத் தாக்கல் செய்தார். அப்போது நாட்டின் வரிவிதிப்பு முறை கடுமையாக இருக்கக்கூடாது என்னும் பொருள் அடங்கிய, புறநானூற்றுப் பாடல் வரிகளை மேற்கோள் காட்டி இருந்தார்.


குறிப்பாக பிசிராந்தையார் எழுதிய,
காய் நெல் அறுத்துக் கவளம் கொளினே, மா நிறைவு இல்லதும், பல் நாட்கு ஆகும்; நூறு செறு ஆயினும், தமித்துப் புக்கு உணினே, வாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும், அறிவுடை வேந்தன் நெறி அறிந்து கொளினே, கோடி யாத்து, நாடு பெரிதும் நந்தும்; மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும் வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு, பரிவு தப எடுக்கும் பிண்டம் நச்சின், யானை புக்க புலம் போலத் தானும் உண்ணான், உலகமும் கெடுமே.
என்ற பாடல் வரிகளை மேற்காட்டினார்.


அதற்கு, காய்ந்து முதிர்ந்த நெல்லை அறுத்துக் கவளம் கவளமாகத் திரட்டி யானைக்கு உண்ணத் தந்தால் மா அளவினும் குறைந்த நிலத்தினது என்றாலும் அது பல நாளுக்கு வரும். நூறு வயல்கள் என்றாலும் யானை தனித்துப் புகுந்து தின்றால் வாயில் புகுவதைவிடக் காலில் மிதிபட்டுப் பாழாகி விடும் என்று அர்த்தம் ஆகும்.


அதேபோல 2020-21ஆம் ஆண்டு பட்ஜெட் உரையை வாசிக்கும் போது, திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட் தாக்கல் செய்தார்.




பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து


என்ற குறளை வாசித்து, நோயில்லாதிருத்தல், செல்வம், விளை பொருள், வளம், இன்ப வாழ்வு, நல்ல காவல் என இந்த ஐந்தும் நாட்டிற்கு மிக்க அழகாகும் என்று விளக்கம் அளித்தார். அத்துடன் ஔவையாரின் ஆத்திசூடியில் வரும் 'பூமி திருத்த உண்' என்ற வரியை மேற்கோள் காட்டினார். 


அதை அடுத்து, 2021- 22ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கலின்போது, 


இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த 
வகுத்தலும் வல்லது அரசு


என்ற திருக்குறளை குறிப்பிட்டு பேசினார். 


2022- 23ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கலின்போது, புராண இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தில் வரும் சாந்தி பருவ வரிகளை மேற்கோள் காட்டி பேசினார். சாந்தி பருவத்தில் அஸ்தினாபுர மன்னராக தருமருக்கு முடிசூட்டும் படலமும், புதிய மன்னனுக்கு சமூகம், பொருளியல், அரசியல் குறித்து பிதாமகர் பீஷ்மர் வழங்கிய அறிவுரைகளும் இடம் பெற்றுள்ளன. 


இந்த நிலையில் 2023-24ஆம் நிதி ஆண்டு பட்ஜெட்டிலும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ் இலக்கிய பாடல்களை மேற்கோள் காட்டிப் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் அமைச்சர் அவ்வாறு எந்த வரிகளையும் குறிப்பிடவில்லை. 


விரைவாக முடிந்த உரை 


நாட்டின் 2023- 2024 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். காலை 11 மணிக்கு தொடங்கிய உரை நண்பகல் 12.30-க்கு முடிவடைந்தது.


கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் முறையாக, நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன்  2 மணி நேரம் 15 நிமிடம் பட்ஜெட் உரையை வாசித்தார். அதன்பின், 2020 ஆம் ஆண்டு 2 மணி நேரம் 42 நிமிடம் வாசித்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு 1 மணி நேரம் 51 நிமிடம் வாசித்திருந்தார்.


அப்போது, அவருக்கு அசெளகரியம் ஏற்பட்டதால் 2 பக்கங்கள் மீதம் இருந்த நிலையிலேயே தனது பட்ஜெட் உரையை முடித்தார். 2022-ல் ஒரு மணி நேரம் 32 நிமிடங்களில் பட்ஜெட் தாக்கல் செய்து முடிக்கப்பட்டது. இம்முறை பட்ஜெட் உரையின் நேரம் இன்னும் குறைந்தது குறிப்பிடத்தக்கது.