மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை:


மத்திய அரசின் 2023-24ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்ய உள்ளார். ஏற்கனவே நான்கு முறை மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ள நிர்மலா சீதாராமன், தொடர்ந்து ஐந்தாவது முறையாக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ள சூழலில், இன்று தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய அரசின் பட்ஜெட் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு தாக்கல் செய்ய உள்ள கடைசி பட்ஜெட் இது என்பதால், நடுத்தர மக்களை கவரும் விதமான பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


விவசாயிகளுக்கு கூடுதல் ஊக்கத்தொகை?


ரூ.2.5 லட்சம் வருமான வரி விலக்கு உச்சவரம்பு கடந்த 2014-ம் ஆண்டு பட்ஜெட்டின்போது நிர்ணயிக்கப்பட்டது. கடந்த ஒன்பது ஆண்டுகளாக அதில் மாற்றம் செய்யப்படாத நிலையில், உச்ச வரம்பு அதிகரிக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மாத சம்பளதாரர்கள் மகிழ்ச்சியடையும் வகையில் பட்ஜெட்டில் அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும் மத்திய அரசின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, 2023-24 பட்ஜெட்டில் விவசாயிகள் மற்றும் வேளாண்துறை தொடர்பான ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கான ஊக்கத்தொகை, PM கிசான் ஊக்கத்தொகை உயர்வு தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மக்களின் முக்கிய எதிர்பார்ப்பு:



  • மலிவு விலை வீடுகளுக்கான வரம்பு 45 லட்சம் ரூபாயில் இருந்து உயர்த்தப்பட வேண்டும்

  • உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு5 லட்சம் ரூபாய் வரையிலான அடிப்படை வரிச்சலுகை

  • வருமான வரி விதிப்புக் குறைப்பு

  • வேலைவாய்ப்பு ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என, பொதுமக்களிடையே எதிர்பார்ப்பு நிலவுகிறது.


காங்கிரஸ் கோரிக்கை:


”பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் மோடி அரசு கவனம் செலுத்த வேண்டும். மேலும் மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கி, மக்கள் கைகளில் அதிகப் பணத்தை வீட்டுக்குக் கொண்டு செல்வதற்கான வழிகளை அரசு கண்டறிய வேண்டும் எனவும்” கங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்  வலியுறுத்தியுள்ளார்.


பொருளாதார ஆய்வறிக்கை:


இந்திய தலைமை பொருளாதார ஆலோசகரின் தலைமையின் கீழ் தயாரிக்கப்பட்ட, பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். 


அதன்படி, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் ( 2022-23 ) 7 சதவீதமாக இருக்கும் என கணிப்பு .
அடுத்த நிதியாண்டில் ( 2022-23 )பொருளாதார வளர்ச்சி 6 முதல் 6.8 சதவீதமாக இருக்கலாம் என கணிப்பு



  • நடப்பு நிதியாண்டில் வேளாண் துறையில் தனியார் துறையின் பங்களிப்பு 9.3 சதவீதமாக அதிகரித்துள்ளது.

  • வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தாயகத்திற்கு அனுப்பிய தொகை 100 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

  • சிறு, குறு தொழில்துறையினருக்கான கடன் வழங்கல் 30.6 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவுக்குள் வரும் அந்நிய முதலீடு 4 மடங்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக மருந்து உற்பத்தி தொழில் மட்டுமே 2000 கோடி டாலர் அதாவது, ரூ.1,63,440 கோடியை அந்நிய முதலீடாக பெற்றுள்ளதாக தெரிகிறது.

  • நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 65 சதவீதம் பேர் கிராமப்புறங்களில் வசிப்பதாகவும், இதில் 47 சதவீத மக்கள் விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்டு இருப்பதாகவும் பொருளாதார அறிக்கையில் 2022-23 தெரிவிக்கப்பட்டுள்ளது.