மத்திய அரசின் 2023-24ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.  அடுத்த ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ள சூழலில், தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய அரசின் பட்ஜெட் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு தாக்கல் செய்ய உள்ள கடைசி பட்ஜெட் இது என்பதால், எந்தெந்த துறைகளுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட உள்ளது என்பது தொடர்பான பல்வேறு கேள்விகளும் எழுந்துள்ளது.


எல்லையில் தொடரும் பதற்றும்:


இந்நிலையில், எல்லையில் பாகிஸ்தான் மட்டுமின்றி சீனாவின் அத்துமீறலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகவே கடந்த சில ஆண்டுகளாக, மத்திய அரசின் பட்ஜெட்டில் பாதுகாப்புத்துறைக்கான நிதி ஒதுக்கீடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேநேரம், பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு அடைவதை இலக்காக கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் மத்திய அரசு, ஏற்றுமதியை அதிகரிக்கவும் தீவிரம் காட்டி வருகிறது.


பாதுகாப்புத்துறைக்கு முக்கியத்துவம்:


அதற்கு உதாரணமாக தான், இந்தியாவின் பாதுகாப்புத் துறை ஏற்றுமதி 2016-17ல் ரூ. 1,521 கோடியிலிருந்து 2021-22ல் ரூ. 12,815 கோடியாக எட்டு மடங்கு வளர்ச்சியடைந்துள்ளது. ஆயுதப் படைகளின் இறக்குமதிக்கான மூலதனச் செலவு 2019-20ல் 41.89 சதவீதத்திலிருந்து 2020-21ல் 36 சதவீதமாகக் குறைந்துள்ளது.  2022-23 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு மத்திய அரசு ரூ. 5.25 லட்சம் கோடியை ஒதுக்கியுள்ளது. 2021-22 ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு சேவைகள் மூலதன கையகப்படுத்தல் பட்ஜெட்டில் உள்நாட்டு மூலதன கொள்முதல் 64 சதவிகிதத்தில் இருந்து, நடப்பு நிதியாண்டில் 68 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பரில் , பாதுகாப்புப் படைகளின் போர்த் திறனை உயர்த்துவதற்காக ரூ. 84,328 கோடி மதிப்பிலான ஆயுதங்கள் வாங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. உத்தரபிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் இரண்டு பாதுகாப்புத் துறை சார்ந்த உற்பத்தி நிறுவனங்களையும் மத்திய அரசு அமைத்துள்ளது.


 


எதிர்பார்ப்புகள் என்ன?


இந்நிலையில்ல், அடுத்த நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், பாதுகாப்புத் துறையில் புதுமையான தயாரிப்புகளைக் கொண்ட ஸ்டார்ட்-அப் நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்வதை அரசு ஊக்குவிக்க வேண்டும் என்று தொழில்துறையினர் கோரிக்கை வைத்துள்ளனர். வரிச்சலுகைகள் மற்றும் ஜிஎஸ்டி விலக்குகள், பாதுகாப்பு உற்பத்தித் துறையில் புதிய கண்டுபிடிப்புகளில் முதலீடு செய்ய தொழில்துறையை ஊக்குவிக்க வேண்டும்.  உற்பத்தி செய்யும் பொருட்களை விரைந்து கண்காணிப்பது,  இந்தியாவில் தொழில்துறையின் வளர்ச்சியை அதிகரிக்கும் என்றும் பாதுகாப்புதுறையை சார்ந்த உற்பத்தியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.


 


25% வரை கூடுதல் நிதி:


உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில், நடப்பு நிதியாண்டை காட்டிலும், அடுத்த நிதியாண்டிற்கு  10 முதல் 15 சதவிகிதம் வரையிலும், அதிகபட்சமாக 25 சதவிதம் வரையிலும், அதாவது ரூ.6.6 லட்சம் கோடி வரையில் பாதுகாப்பு துறைக்கு நிதி ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


சிறு, குறு நிறுவனங்களுக்கு முக்கியத்துவம்:


இந்த துறையை சார்ந்த சிறு, குறு நிறுவனங்களை ஊக்குவிக்கும் நோக்கிலும் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது. மேம்படுத்தப்பட்ட போர் விமானங்கள், டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை கொள்முதல் செய்ய அதிகப்படியான நிதி ஒதுக்கப்படலாம். மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க, ஆராய்ச்சி மற்றும் உற்பத்திக்கு (R&D) கூடுதல் நிதி ஒதுக்க வாய்ப்பு உள்ளது. சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு விரைவாக பணம் செலுத்துவதற்காக உருவாக்கப்பட்ட வர்த்தக பெறத்தக்க தள்ளுபடி அமைப்பு (TReDs) இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் கடலோர காவல்படைக்கு நீட்டிக்கப்படக் கூடும் எனவும் கூறப்படுகிறது.