பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 2024-25ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.


முக்கிய அம்சங்கள் என்னென்ன ?


குறிப்பாக, இந்த பட்ஜெட் ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகளை மையப்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் அதிலும் நடுத்தர வர்க்கத்தினர் பயன்பெறும் வகையில் இந்த பட்ஜெட் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


விவசாயிகள், பெண்களுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்களையும் அவர் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள 10 லட்சம் மாணவர்களுக்கு கல்வி கடன் ரத்து செய்யப்படும் என்றும் அறிவித்துள்ள நிர்மலா சீதாராமன், பெண்கள் தொழில் பயிற்சி பழக மத்திய அரசு உதவியுடன் மாநிலங்களுடன் இணைந்து பயிற்சிகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.



  • மேலும், நாடு முழுவதும் தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும்

  • 12 தொழில் பூங்காங்களுக்கு விரைவில் ஒப்புதல்

  • டாமிட்ரி பாணியில் வாடகை வீடுகள் - தொழிலாளர்களுக்கு வழங்கப்படும்

  • 5 ஆண்டுகளில் ஒரு கோடி மாணவர்களுக்கு தொழில் பயிற்சி

  • மகளிர் மேம்பாட்டுக்கு 3 ஆயிரம் கோடியில் புதிய திட்டங்கள்

  • 500 பெரிய தொழில் நிறுவனங்களில் பயில இளைஞர்களுக்கு வாய்ப்பு உருவாக்கித் தரப்படும்

  • நிறுவனங்களுக்காக புதிய தீர்ப்பாயம் அமைக்கப்படும் - திவாலான நிறுவனங்களிடமிருந்து மக்களின் பணத்தை பெற புதிய ஆணையம்

  • பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின்படி, நகர்புறங்களில் ஒரு கோடி வீடுகள் கட்டித் தரப்படும் 

  • 2 ஆண்டுகளில் இயற்கை விவசாயத்தில் ஒரு கோடி பேர் இணைக்கப்படுவார்கள்

  • வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாம், இமாச்சல், உத்தரகாண்ட் மாநிலங்களில் மறு சீரமைப்பு செய்ய நிதி ஒதுக்கீடி

  • விண்வெளி சார்ந்த திட்டங்களுக்கு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு

  • நாடு முழுவதும் 3 கோடி குடும்பங்களுக்கு ஒரே வருடத்தில் வீடு கட்டித் தரப்படும் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மத்திய நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.


பாஜக கூட்டணியில் உள்ள முதல்வர் மாநிலங்களுக்கு சிறப்பு நிதி


தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பீகார் முதல்வர் நிதிஷ் குமாரும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் தங்கள் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து தரவேண்டும் என்று கேட்ட நிலையில், இரு மாநிலங்களுக்கும் சிறப்பு நிதி திட்டத்தில் இருந்து 41ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி அனைவரையும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.


எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு


இரு மாநில முதல்வர்கள் பாஜக கூட்டணியில் இருப்பதால் அந்த மாநிலங்களுக்கு மட்டும் சிறப்பு நிதி அறிவிக்கப்பட்டிருப்பதாக நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் எழுந்து முழக்கமிட்டன. ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளாத நிர்மலா சீதாராமன் தன்னுடைய அறிவிப்புகளை தொடர்ந்து வெளியிட்டு வந்தார். ஆனால், அவ்வப்போது பீகார் குறித்து நிர்மலா சீதாராமன் சில வார்த்தைகளை சொல்லும்போதும் அதே நிலை தொடர்ந்தது. சுற்றுலா துறை அறிவிப்பு வரும்போது பீகார் கோயில் தொடர்பான அறிவிப்பு வந்தபோது எதிர்க்கட்சிகள் மீண்டும் குரல் எழுப்பின. 


ஆனால், ஒடிசா மாநில வளர்ச்சி தொடர்பான அறிவிப்பு வரும் போது அந்த அறிவிப்பை அழுத்தி சொல்லி, பீகாருக்கு மட்டுமல்ல மற்ற மாநிலத்திற்கும் மத்திய பட்ஜெட்டில் முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது என மறைமுகமாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.