உலகத்திலேயே முதல்முறையாக எல்சால்வடார் நாடு பிட்காயினைத் தனது நாட்டில் சட்டபூர்வமான பணமாக அறிவித்துள்ளது.இதன் மூலம் உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் பண வர்த்தக முறையான பிட்காயினை சட்டரீதியான பணமாக அங்கீகரித்த முதல் நாடாகியுள்ளது எல்சால்வடார்.
சட்டப்பூர்வமாக அங்கீகரிப்பது என்றால் என்ன?
பிட்காயின் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டால் குறிப்பிட்ட நாட்டில் எந்த வர்த்தகத்தையும் சட்டபூர்வமாக பிட்காயின் கொண்டே மேற்கொள்ளலாம். உதாரணத்துக்கு ஒருகடையில் சென்று சாப்பிடும் நீங்கள் பிட்காயின் கொண்டே அதற்கான தொகையை செலுத்தலாம்
ஆனால் எல்சால்வடார் பிட்காயினை அங்கீகரித்த நேரம் அதன் மதிப்பு சுமார் 15 சதவிகிதம் வரை சரிந்தது.
'இதனால் பிட்காயின் மதிப்புக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. பங்குச்சந்தையில் அதன் விலை டாலர் 43000 என இருக்கும் வரை அதற்கு எந்தவித பாதிப்பும் இருக்காது. பெரிய அளவில் பிட்காயின் விநியோகிக்கப்பட்டதால் ஏற்பட்டிருக்கும் சரிவுதான் இது’ எனக் கூறுகிறார் இந்திய பிட்காயின் விநியோக நிறுவனமான இட்ஸ் ப்ளாக் செயினின் தலைவர் ஹிதேஷ் மாளவ்யா.
காயின் கெக்கோ என்னும் பிட்காயின் மதிப்பு ஆய்வு நிறுவனத்தின் தரவுகளின்படி செவ்வாய் அன்று சுமார் 9.6 சதவிகிதம் வரை அதன் மதிப்பு சரிந்து 46229 அமெரிக்க டாலர் மதிப்பீட்டில் இருந்தது. பின்னர் 45,299.59 அமெரிக்க டாலர் வரையில் சரிந்து பிறகு மீண்டது. இந்தச் சரிவைப் பயன்படுத்தி சுமார் 150 பிட்காயின்களை விலைக்கு வாங்கியுள்ளது எல்சால்வடார். இதற்கு முன்புவரை அந்த நாட்டின் வசம் 400 பிட்காயின்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து எல்சால்வடார் பிரதமர் ட்வீட் செய்துள்ளார்.
’இந்தச் சரிவின் மூலம் பல லட்சம் ரூபாய் அளவிலான பணத்தை நாங்கள் சேமித்துள்ளோம்.தற்போது எங்கள் வசம் 550 பிட்காயின்கள் உள்ளன’.
பிட்காயின் தவிர மற்றொரு டிஜிட்டல் பணமான எதர் மதிப்பு 13 சதவிகிதம் குறைந்து 3463.62 டாலர் மதிப்பில் இருந்தது. இதுதவிர பிற டிஜிட்டல் காயின்களான டாட்ஜ் காயின், கார்டானோ, ரிப்பிள் மற்றும் மேட்டிக் ஆகியனவும் 20 சதவிகிதம் வரை சரிவைச் சந்தித்திருந்தது.
எல்சால்வடார் பிட்காயினை சட்டபூர்வமாக்கியிருப்பது சர்வதேசச் சந்தையில் ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.